மாறாவை முற்றிலும் வேறொரு படமாக எடுத்திருக்கலாம். சார்லியோட பலமே, அதில் பதில்களை விட கேள்விகள் தான் அதிகம். சார்லியோட நாடோடி வாழ்க்கைக்கான காரணம் அவனோட வாழ்க்கை தத்துவம் சார்ந்தது. அவன் ஏதோ ஒரு விஷயத்தைத் தேடி அலையவில்லை. அவனது தேடல் அகம் சார்ந்தது. அது தான் அந்தப் படத்தோட ஆன்மா. பார்வதி தேடிப் போவது அவனோட அபாரமான கலைக்காக இல்லை. அவனோட அந்த intriguing வாழ்க்கைமுறைக்காகத்தான். சார்லி அந்தப் படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ. ஏனெனில் சார்லியை மற்றவர்கள் கண் வழியாகப்தான் பாப்போம். ஜெயகாந்தனின் வரியான, ‘விஸ்வரூபம் என்பது காட்டப்படுவதல்ல. காண்பது’ என்வதற்கிணங்க, அங்கே சார்லியோட விஸ்வரூபம் ஒவ்வொருத்தரோட பார்வையில் இருந்து விஸ்தாரமாகும். அவன் அழுகை பார்வையாளர்களுக்குத் தெரியாது. ஏனெனில் நாம் அவனை தூரத்தில் இருந்தே தான் பார்க்கிறோம். அந்தப் படத்தின் அந்த அம்சத்தினை, அந்த ஆன்மாவைப் புரிந்து கொள்ளாமல், அல்லது அது தமிழர்களுக்குப் புரியாற்ற்ன்று நினைத்து, அதன் கேள்விகளுக்கு சராசரியான விடைகளை, மாறாவின் திரைக்கதையில் சேர்த்துள்ளனர். மாறா, மீனாட்சியைத் தேடி தான் அலைகிறான் எனும்போது, படத்தின் விஸ்தீரணம் குறைந்துவிடுகிறது. இது சார்லி இல்லை. அந்தப் படத்தை அக்கு அக்காகப் பிரித்து, அந்தப் பாகங்களை வைத்து வேறொரு படத்தை ஒரு மாற்றுக் குறைவாக உருவாக்கியுள்ளார்கள். ஆனாலும் கலை இயக்கத்துக்காகவும், அழகான தருணங்களைப் படம் காட்சிப்படுத்தியதற்காகவும், படத்தை இணைக்கின்ற சரடான அந்தப் போர்வீரன் கதைக்காகவும், அந்த அபாரமான ஓவியத்துக்காகவுனம் இது நல்ல படம் என்று ஏற்றுக் கொள்ளலாம்.
நன்றி: சித்தார்த் வெங்கடேசன்