Shadow

மேஜர் கெளதமின் டைமிங் தலைப்பு

Kanla Kaasa Kaattappaa

ப்ரேக் டான்ஸராக இருந்து நடிகராக மாறிய ‘மேஜர்’ கெளதம் தற்போது இயக்குநர் அவதாரம் பூண்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்நேரத்தில் ‘மேஜர்’ கெளதமும் அவரது குழுவும் மட்டும் மகிழ்ச்சியாக உள்ளனர். காலத்தின் அவசியம் உணர்ந்த வைக்கப்பட்டது போல், “கண்ல காச காட்டப்பா” என அவர்களின் படத் தலைப்பு அமைந்துவிட்டதே அதற்குக் காரணம்.

தலைப்பு மட்டுமன்று, படத்தின் கருவும் கறுப்புப் பணத்தை மையப்படுத்தியே! படத்தைப் பார்த்து விட்ட இயக்குநர் வெங்கட் பிரபு, “இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் கலகலப்பாக இருக்கப் போவது உறுதி” என்கிறார். S.G.சேகர் என்பவர் கதையை, இயக்குநர் கெளதம் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

‘ஹெலிகேம் (Helicam)’ ஷாட்ஸ்கள் படத்தில் பிரமாதமாக உள்ளதென ஒளிப்பதிவாளர் அரவிந்தைப் பாராட்டினார் வெங்கட்பிரபு. படத்தின் நாயகனான அரவிந்த் ஆகாஷும், “மலேஷியாவில் ஷூட்டிங் செய்யும் பொழுது ஒரு ஹெலிகேம் உடைந்துவிட்டது. அரவிந்தே அதை பழுது பார்த்து அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சரி செய்து கொண்டு வந்துவிட்டார்” என அவரது ஒளிப்பதிவுத் திறமையோடு அவரது தொழில்நுட்ப அறிவையும் பாராட்டினார். டான்ஸ் மாஸ்டர் கல்யாணும், அவரது நண்பர் சுகரும் படத்தைத் தயாரித்துள்ளார்கள். கல்யாண் படத்தில் நடித்துமுள்ளார். கெளதமின் நெருங்கின நண்பரான விச்சு விஸ்வநாத், நாயகனுக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளார். சாந்தினி முதல் முறையாக கிளாமரான ரோலில் தோன்றியுள்ளார்.

“இந்தப் படம் சார்ந்த ஒட்டுமொத்த குழுவும் என் நண்பர்கள். சுப்பு பஞ்சுவை மட்டும்வாக்கு கொடுத்தபடி நடிக்க வைக்க முடியவில்லை. ஹீரோயின் அஸ்வதி என் மனைவி கோகிலாவின் ஸ்டூடன்ட் (அரவிந்த் ஆகாஷும் அவரது மாணவரே!) சாந்தினி மட்டும்தான் இந்தப் படத்தில் எனக்கு அறிமுகமில்லாத ஒரே நபர். ‘நோ’ சொல்லலாமென வந்தாங்களாம். கதையையும், டீமையும் பார்த்துட்டு ஒத்துக்கிட்டாங்க. இந்தப் படம் எனது நண்பர்களால் மட்டுமே சாத்தியம் ஆனது” என்றார் ‘மேஜர்’ கெளதம்.

படம் இருவரின் நல்லாசியோடு தொடங்குகிறது. ஒருவர் ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி; இன்னொருவர் மேஜர் சுந்தரராஜன் ஆவர்.