Shadow

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

ஒரு பள்ளி 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேடு செய்து முழுத் தேர்ச்சி அடைந்து விட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.  அதுவும் 12 ஆண்டுகள் கழித்து. உடனே நீதிமன்றமும் அந்த வருடத்தில் தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் மீண்டும் அதே வகுப்பில் மூன்றாண்டு காலம் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும், அப்படி வெற்றிபெறத் தவறினால் அவர்கள் மேற்படிப்பு படித்து பெற்ற பட்டங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பைக்  கொடுக்கிறது.

அந்த குறிப்பிட்ட வருடத்தில் படித்திருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ஆளுக்கொரு திசையில் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  சரி இப்படி ஒரு மடத்தனமான தீர்ப்புக்கு செவி சாய்த்து யார் மீண்டும் படிக்க வரப்  போகிறார்கள் என்று நாம் நினைத்தால், இயக்குநர் அந்த வருடத்தில் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் யூனிபார்ம் சகிதமாக ஆஜர் செய்துவிடுகிறார்.  இதில் கொடுமை என்னவென்றால் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்  பெண்ணையும் யூனிபார்ம் அணிவித்து அழைத்து வந்துவிடுகிறார். அவர் வந்து தன் பால்ய நண்பர்களிடம் நான் உங்கள் அனைவரையும் பார்க்கத் தான் இத்தனை ரிஸ்க் எடுத்து வந்தேன் என்று அவர் பங்குக்கு ஒரு உருட்டு உருட்டுகிறார்.  சரி இத்தனை அக்கப்போரும், ரிஸ்கும் எதற்கு என்று கேட்டால், பள்ளி பருவத்தில் காதலைச் சொல்லாமல் மவுனித்து இருந்த நாயகன், இப்பொழுது நாயகியிடம் காதலைச் சொல்லி ரஸ்க் சாப்பிடத்தான் என்கிறார்கள்.

வி.ஜே.ரக்‌ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். வி.ஜே.ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார்.  காதல், நட்பு, பிரிவின் சோகம், அழுகை, சந்தோஷம் என எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாத நடிப்பு. பஸ்சில் கர்சீப் போட்டு சீட் பிடிப்பது போல், பள்ளிக்கு புதிதாக வரும் மாணவிகளை நோட்டைத் தொட்டு உனக்கு எனக்கு என்று புக் செய்கிறார்கள்.  ரக்‌ஷனுக்கு இயல்பாக காதல் வருகிறதோ இல்லையோ…? சுற்றி இருக்கும் நண்பர்கள் அடிக்கும் கூத்தினால் அவருக்கு நாயகி ப்ரியதர்ஷிணி (மலினா) மீது காதல் வர வைக்கப்படுகிறது.

தீனா, ராகுல் போன்றோர் நாயகனுக்கு நாயகி மீதும், நாயகி நாயகன் மீதும் காதல் வர வைப்பதையே தங்கள் முழுநேர பணியாகக் கொண்டு வேலை செய்கிறார்கள்.  இவர்கள் போதாது என்று, வில்லத்தனம் செய்யப் போகிறது என்கின்ற பில்டப்புடன் காட்டப்படும் மற்றொரு கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் நண்பனாகி,  நாயகனின் காதல் என்னும் தேரை இழுத்து தெருவில் விடும் வேலையை முழுநேரப் பணியாக செய்யும் தோழர்களுடன் கை கோர்த்துவிடுகிறது.  முழுப் படத்திலும் ஆங்காங்கே தன் காமெடியால்  தலை நிமிர்ந்து அமரச் செய்பவர் தீனா தான். ஆனால்  அந்த வேலையை அவரும் முழுமையாக செய்யவில்லை.

நண்பராக வரும் ராகுலின் கதாபாத்திரம் சிறப்பு.  தனக்குள் இருந்த வலியை மறைத்துக் கொண்டு நண்பனாகப் பழகுவதும், பின்னர் அவர்கள் முகத்தில் முழிக்க விரும்பாமல் விலகி ஓடுவதுமாக அந்த கதாபாத்திர சித்தரிப்பும்,  2கே கிட்ஸ் ஒவ்வொருவரும் தங்கள் காதலை சொல்லும் வேகமும், அதன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் படத்தில் ஆறுதலான விசயங்கள்.

நாயகியாக வரும் மலினா, ஸ்வேதா வேணுகோபால் இருவரும் அழகினால் கவருகிறார்கள்.  ஸ்வேதா தன் நண்பர்களுக்காக தூது செல்லும் காட்சிகளிலும்  தீனாவிடம் மொக்கை வாங்கும் இடங்களிலும் நடிப்பில் வசீகரிக்கிறார்.  மலினாவிற்கு வழக்கமான காதலி கதாபாத்திரம், மறைவாக பார்ப்பதும், சிரிப்பதும், நடப்பதும், தன்னை கவனிப்பதை அறியாதவள் போல் நடந்து கொள்ளும், காலம் காலமாகப் பார்த்து வரும் காதலி கதாபாத்திரம். பெரிதாக நடிப்பதற்கு வழியே இல்லாத கதாபாத்திரம். கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.

பி.டி  வாத்தியாராக வரும் முனிஷ்காந்த்-ன் கதை நன்றாக இருக்கிறது. மனைவியை இழந்த கணவனாக, தன் ம்னைவியின் இல்லாமையை என்னும் வெற்றிடம் குறித்து ஏங்கி புலம்பும் இடத்தில்  சிறப்பான நடிப்பை நல்கி இருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராகோ யோகன்றன்  எழுதி இயக்கி இருப்பதோடு இப்படத்தினை தயாரித்தும் இருக்கிறார்.  ரசனையோ, புதுமையோ அற்ற காட்சிகள், கற்பனை வறட்சி கொண்ட, புனைவு மற்றும் யதார்த்தம் என்ற இரண்டு வகைமைகளுக்குள்ளும் அடங்காத ஒரு கதை மற்றும் திரைக்கதையைக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். ஒட்டு மொத்தப் பள்ளியும் இருபது நடிகர்களைக் கொண்டு மட்டுமே இயங்குவது ஒவ்வொரு ப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

சராசரிக்கும் கீழான கதை, விறுவிறுப்போ, சுவாரஸ்யமோ அற்ற எளிதில் யூகிக்கும்படியான திரைக்கதை, எரிச்சலூட்டும் நகைச்சுவை, குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்பதால், தேவைப்படும் காட்சிகளில் கூட கூட்டமின்றி  Empty-ஆக இருக்கும் ப்ரேம்கள், முதிர்ச்சியற்ற,  இயல்பை மீறிய நடிப்பு என்று திரைப்படம் பார்வையாளராகிய நம் நேரத்தை கொடூரமாக கொலை செய்கிறது.

மொத்தத்தில் “மறக்குமா நெஞ்சம்” திரைப்படம் கண்டிப்பாக மறக்கப்பட வேண்டிய திரைப்படம்  எல்லோருக்கும்.

இன்பராஜா ராஜலிங்கம்