32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

லவ்வர் | சமூகத்திற்குச் சொல்லப்பட வேண்டிய கதை

Inbaaraja சேலம் Published: 02/02/2024 5 நிமிட வாசிப்பு Updated: 03/02/2024 இது புதிது
எழுத்து அளவு:

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்தியேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா, “பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. லவ்வர் என்றொரு படத்தில் எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பதும், என்னுடைய கனவு குழுவினருடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பையும் எனக்குக் கிடைத்த ஆசியாகக் கருதுகிறேன். ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பில் நடிக்கத் தொடங்கியிருந்த போது எனக்கு இந்த அளவிற்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் எனக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது, தமிழ் திரைப்படங்கள் மீதும் இருக்கும் ஈர்ப்பால் எப்படியாவது தமிழில் பேசிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்தேன்.

லவ்வர் என்னுடைய திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படம். இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொள்ளும் போது என்னுடைய அம்மா காலமாகிவிட்டார். அந்தத் தருணத்தில் நான் இருந்த மனநிலையில் இருந்து, என்னை முழுமையாக மீட்டுப் பணியாற்றவைத்தனர் இந்தப் படக்குழுவினர். அதனால் இந்தத் தருணத்தில் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ், “2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு ஃபோன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றைத் தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்துப் பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையைக் கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்தக் கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்தக் கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்தக் கதை புரிந்து, அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றிப் பேசியபோது, என்னுடைய எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.

நானும், மணிகண்டனும் இணைந்து இந்தக் கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் ‘குட் நைட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் ஃபோன் செய்து, ‘உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வுபூர்வமாகக் கதையைக் கேட்டு உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனைச் சந்தித்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது.

நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. இந்தப் படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு வழிநடத்திய யுவராஜுக்கு நன்றி. இந்தப் படத்திற்கு பேருதவி அளித்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்திருக்கிறார். அந்தக் கதாப்பாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் தங்களுடைய மனதில் சுமந்து செல்வார்கள்” என்றார்.

இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன், “குட்நைட் படத்தின் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது. ‘லவ்வர்’ படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜீ.வி. பிரகாஷ் குமார், புஷ்பவனம் குப்புசாமியின் வாரிசான நேகா அகர்வால், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட என்னுடைய இசைக்குழுவினருக்கும், நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள். அறிவாளியாக பிறந்தாலே நம்மூரில் சிக்கல் தான். சிந்திக்கிறான் என்றாலே அவனுடன் சேராதே எனச் சொல்பவர்கள் தான் அதிகம். நிறைய யோசித்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள். இதுபோன்ற அறிவாளிகள் வெற்றி பெறவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. ஏனெனில் நல்ல சிந்தனையாளர்கள் வெற்றி பெற்றால் அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். சிந்தனையாளர்களை வெற்றி பெற வைக்கும் துறையா இது என்று கேட்டால், நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். அதில் ஐம்பது சதவீதத்தினர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இன்னும் படங்களை இயக்கி, உயர்ந்த இடத்திற்கு முன்னேறுவார். அவர் நல்ல விசயங்கள் இயல்பாகப் போகிறபோக்கில் சொல்லக்கூடிய திறமைசாலி.

தயாரிப்பாளர் யுவராஜ் தமிழ்த்திரையுலகில் போராளி. மற்றொரு தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன். ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நடுவில் நேரம் கிடைத்தால் இந்தப் படத்தை தயவு செய்து திரையரங்கத்திற்குச் சென்று பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு இந்தப் படம் ஏதேனும் ஒரு விசயத்தைத் தரும்” என்றார்.

நடிகர் மணிகண்டன், “சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்தப் படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்தக் கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்தக் கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை’ என்றேன்.

இந்தப் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸைப் பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமென்ட் வேண்டும் எனச் சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர்.

படப்பிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்தப் படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர்.

நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக் கொண்டேயிருப்பேன். அதே போல் இப்போதும் சொல்கிறேன். இந்தப் படம் உங்களை ஒருபோதும் டிஸ்-அப்பாயின்ட்மென்ட் பண்ணாது” என்றார்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.