Shadow

“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜெய் கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ பட இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில், KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி” ஆகும். நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்லின் இசை அமைத்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்.

இப்படத்தின் நாயகனான KPY பாலாவிற்கு நாயகியாக நடிக்க பலர் தயங்கியுள்ளனர். இதைப் பற்றிப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாலா, “இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இயக்குநர் அலுவலகத்தில் பல நடிகைகள் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். ‘கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ?’ என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும், ‘நான் பிறகு சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது. அது அவர்களின் தவறு கிடையாது. அவர்கள் சார்பில் அதுதான் நியாயம். இப்படியே 50 பேர் எனக்கு ஜோடியாக நடிப்பதை மறுத்துப் புறக்கணித்தனர். 51 ஆவது ஆளாகக் கதை கேட்டவர்தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி. கதையைக் கேட்ட பிறகு, ‘பாலா தான் ஹீரோ’ என்று சொன்ன பிறகும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘கண்டிப்பாக நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்று சொன்னார். அவருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

நமீதா கிருஷ்ணமூர்த்தியோ, “50 பேர் நடிக்க மறுத்ததை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த 50 புறக்கணிப்பும் எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்களாக எடுத்துக் கொள்கிறேன். அதனால் தான் எனக்கு இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு அமைந்தது. இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். பாலா இன்னும் பெரிய உயரங்களை அடைவார்” என்றார்.

“KPY பாலாவின் ஈகை குணத்திற்காகவாவது, காந்தி கண்ணாடி மிகப் பெரிய வெற்றி பெறவேண்டும்” என வாழ்த்தினார் பாலாஜி சக்திவேல். “நான் நல்ல கதைக்காகக் காத்திருப்பதால் நிறைய படங்கள் செய்வதில்லை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், நான் இந்தப் படத்தி இணைந்தேன்” என படத்தின் கதையையும், இயக்குநரையும் புகழ்ந்தார் அர்ச்சனா.

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தோடு வெளியாவதைப் பற்றிக் கேள்வி எழுப்புகையில், “எங்களுக்கு வேறு தேதிகள் கிடைக்கவில்லை. ஓடிடி வணிக நிபந்தனைகளின் படியும் இந்த தேதிதான் ஒத்து வந்தது” என்றார் இயக்குநர் ஷெரீஃப். KPY பாலா, “சிவா அண்ணாக்கு நான் போட்டியா? ஏன்ன்? அவர் எங்க? நான் எங்க? ‘அவரோட படத்தைப் பார்க்கத் தியேட்டர்க்கு வந்து டிக்கெட் கிடைக்காதவங்க நம்ம படத்துக்கு வந்தா போதும்’ எனச் சொல்லி இயக்குநர் என்னைக் கன்வின்ஸ் பண்ணார்” என்றார் KPY பாலா.