32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“இரத்தக்களறி இல்லாத சசிகுமார் படம்” – புஷ்கர் காயத்ரி | Tourist Family

Dinesh R சேலம் Published: 28/04/2025 3 நிமிட வாசிப்பு Updated: 29/04/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி, “அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குறளாக நான் பார்க்கிறேன். அதையே கவிஞர் வைரமுத்து ‘அன்பே சிவம்’ல, ‘அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா!’ அப்படின்றாரு. அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால், அவரே அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு. அவ்வளவு அன்பு நிறைஞ்ச ஒரு படம் எடுத்த அபிக்கு 100 வருட ஆயுள் கிடைக்கட்டும். அவ்வளவு அன்பு இருக்கிற இந்தப் படம் இப்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒரு படமாகப் பார்க்கிறேன். இப்படத்தில் அனைவருமே மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள், சசி சார், சிம்ரன் மட்டும் இல்ல, அவங்கள சுத்தி நடிச்சிருக்க அத்தனை பேரும் மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் புஷ்கர் காயத்திரி, “சசிகுமார் சார் படங்கள் மென்மையாகத் தொடங்கி இரத்தக்களறியாக முடியும். அப்படித்தான் நாம் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை. படத்தில் முழுக் குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகான காட்சி உள்ளது. ஸ்பாய்லர்கள் இல்லை. ஆனால் அந்தக் காட்சிக்காகவே நாங்கள் படத்தை மீண்டும் பார்ப்போம். அந்தக் குறிப்பிட்ட காட்சி அத்தனை அழகாக இருந்தது. அந்த சிறுவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கினார்கள் என இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சசிகுமார் & சிம்ரன் என்று குறிப்பிட்டதற்குத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். பல படங்களில் சிம்ரன் மேடத்தின் பங்களிப்பு கவனிக்கப்படாமல் போய்விட்டது, இது நிச்சயமாக அந்தப் பட்டியலில் சேராது. இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். ஃபீல்-குட் படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுமா என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும்போது, மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சரியான படங்களை ஹிட்டாகக் கொடுத்துத் தொடர்ச்சியாக நல்ல படங்கள் ஜெயிக்கும் என நிரூபித்து வருகிறது. இந்தப்படமும் அவர்களுக்குப் பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி, “இந்தப் படத்தைப் பார்த்து அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தேன். சமீபமாக சசிகுமார் சார் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அற்புதமாக உள்ளது. அவர் அடுத்துச் செய்யப் போகும் படம் பற்றியும் தெரியும். இப்போதெல்லாம் எமோஷனலாக இருந்தால் கிரிஞ்ன்னு சொல்லிவிடுகிறார்கள். அயோத்தி டைரக்டர், இந்த டைரக்டர் என எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை கொடுக்கிறார் சசி சார். இப்படத்தின் இரண்டாம் பகுதி அத்தனை எமோஷனலாக இருந்தது, இசையில் ஷான் கலக்கியிருக்கிறார், திரைக்கதைக்குள் சென்று பின்னணி இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது, மில்லியன் டாலர் பிக்சர்ஸ் ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளார்கள்” என்றார்.

நடிகர் மணிகண்டன், “’டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பே இந்தப் படம் பற்றித் தெரியும். அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை. படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் ஃபோனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு கதையை நம்பித் தயாரிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப் படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.