32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vaanavil review

Dinesh R சேலம் Published: 06/11/2026 3 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

‘ஐய்யய்யோ ஆனந்தமே’ எனும் கும்கி படத்தின் பாடலில், ‘நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே! காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே!’ என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். நூறு கோடி வானவில் என்பதைக் காதல் மலர்ந்ததற்கான உயர்வு நவிற்சி அணியாக உருவகப்படுத்தியிருப்பார் கவிஞர் யுகபாரதி. அப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் மலரும் காதலை, இத்தலைப்பின் மூலம் உணர்த்துகிறார் சசி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கோவாவிற்கு வரும் முதல் நாளன்று, சிக்னலில் நிற்கும் போது, ஸ்கூட்டரில் வரும் ஃபென்னியைப் பார்க்கிறான் வினோ எனும் வினோத். உடனே தான் இயக்கப் போகும் ஷோவிற்கான ஐடியா பிறக்கிறது வினோவிற்கு. “கோவா ஸ்கூட்டர் கேர்ள்” எனும் ஷோவிற்கு ஆன்க்கராக (Anchor) வந்து வேலை செய்யும்படி ஃபென்னியைக் கேட்கிறான். கோமாவில் உள்ள தனது காதலன் ரிச்சிக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யமாட்டேன் என்று மறுக்கிறாள் ஃபென்னி. இந்த ஆன்க்கர் வேலையில் கிடைக்கும் பணம், காதலனின் சிகிச்சைக்கு உதவும் என ஃபென்னியைச் சம்மதிக்க வைக்கிறான் வினோ. காதலனுக்காகத் தனது ஆசைகளைச் சுருக்கிக் கொண்டு வாழும் ஃபென்னிக்கு, அவள் ஆசைப்பட்ட இறக்கைகளைத் தருகிறான் வினோ. இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தாலும், ரிச்சியின் மீதான காதலுக்கு உண்மையாக இருக்க நினைக்கிறாள் ஃபென்னி. மனம் ஆடும் இந்தக் கண்ணாமூச்சியில் இருந்து ஃபென்னி தெளிவு பெற்று என்ன முடிவு எடுக்கிறாள் என்பதுதான் படத்தின் முடிவு.

வினோத் ஜான் பிரான்சிஸாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். தனது வேலையும், அதில் கிடைக்கும் ப்ரமோஷனையும் மிக மிக முக்கியம் எனக் கருதும் கதாபாத்திரத்திற்கு அவரது முகபாவம் பொருந்திப் போகிறது. அதே முகபாவத்தைக் காதல், கோபம், பிரிவு, ஏக்கம் முதலியவற்றிற்கும் உபயோகப்படுத்திக் கொள்கிறார். ஆச்சரியமான விஷயமாக, VJ பார்வதி ஆங்காங்கே படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். கோவை சரளா, தம்பி ராமய்யா, சின்னி ஜெய்ந்த் ஆகியோர் சின்ன ரோலில் கேரக்டர் ஆர்டிஸ்ட்களாக வந்து செல்கின்றனர்.

ரிச்சி, தான் விருப்பட்ட வாழ்க்கைக்குள் ஃபென்னியைச் சிறைபிடிக்க நினைக்கிறான். தனக்கு கிச்சன் பிடிக்காது என்பதால், ஃபென்னியும் உண்ணக்கூடாது என்று நினைப்பவன். பதின்மத்தில், ரிச்சியிடம் தன் தந்தையின் ஏதோ ஒரு சிறு கூறைக் காணும் ஃபென்னி, நட்பாய்ப் பழகி அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். தன்னைப் புரிந்து கொள்ளாத, தான் தேர்ந்தெடுத்த முதல் காதலா அல்லது தனது கனவுகளுக்குத் துணை நிற்கும் புதுக்காதலா என்று மனக்கலக்கமுறுகிறாள் ஃபென்னி. ஃபென்னி ஜான்சனாக, நூறு கோடி வானவில்லுக்கு வண்ணத்தை அளிப்பவராக, மிக அழகாக உள்ளார் சித்தி இத்னானி.

சசி, தனது படைப்பில் உருவாக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் இப்படத்தில் இல்லை. அதற்கான இடம் இருந்தும், படம் ஒருமாதிரி கையில் பிடிக்க முயலும் நீராய் வழுக்கிக் கொண்டு செல்கிறது. பிரதான (Lead) நடிகர்கள், கதாபாத்திரங்களின் உணர்வை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தவில்லை. ‘தான் இயக்கிய படங்களிலேயே மிக வண்ணமயமான படம் இது தான்’ என்றார் சசி. அது உண்மையே! கோவாவின் அழகை நயமுற ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா S. குமார். சித்து குமாரின் இசையில் பாடல்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளன.

காதல் என்பதொரு மேஜிக். தர்க்கத்திற்குள் அடங்காதது. சசி, அந்த மேஜிக்கை முழுவதும் எக்ஸ்ப்ளோர் செய்யாமல், ஒரு கணிதச் சமன்பாடு போல் அணுகியுள்ளார். ரிச்சி ஆணாதிக்கவாதி, இறக்கைகளை விரித்துப் பறக்க நினைப்பவள் ஃபென்னி, இறக்கைகளை சப்ளை செய்யும் நல்லவன் வினோத், ‘hence the சுபம்’ என்பதாகக் கணக்கை முடித்து விடுகிறார். ஜனநாதனின் ‘இயற்கை’யில், க்ளைமேக்ஸில் நான்சிக்கு (கதாநாயகி) ஒரு தவிப்பு வரும். இப்படத்திலோ, சசியின் கதாபாத்திர வார்ப்பில் உள்ள அதீத எளிமை ஒரு காதல் படம் தந்த முழு நிறைவை அளிக்கவில்லை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.