32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சட்டமும் நீதியும் 2 விமர்சனம் | Z5

Dinesh R சேலம் Published: 27/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 28/10/2026 OTT
எழுத்து அளவு:

சட்டமும் நீதியும் சீசன் 1 முடிந்த இரண்டு மாதத்திற்குப் பிறகு இந்த சீசனின் கதை தொடங்குகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இன்ஸ்பெக்டர் கனகவேலின் மரணம் தற்கொலை அல்ல, அது கொலை என அவரது மனைவியும், பார் கவுன்சிலின் தலைவருமான வக்கீல் சந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். முன் பகை காரணமாக, அவரது காவல் நிலையத்தில் உடன் புரிந்த நான்கு காவலர்கள்தான் கனகவேலின் மரணத்திற்குக் காரணமென்று சந்திரா குற்றம் சாட்டுகிறார். அந்நால்வருக்காக வாதாட எந்த பார் கவுன்சிலுள்ள எந்த வக்கீலும் முன் வராத பொழுது, அவ்வழக்கில் ஆஜராகிறார் சுந்தரமூர்த்தி. அந்நால்வரையும் நிரபராதிகள் என சுந்தரமூர்த்தி நிரூபித்தாரா இல்லையா என்பதுதான் தொடரின் கதை.

ஒரு தற்கொலையினின்று முதல் சீசன் எமோஷ்னலாகத் தொடங்கும். இந்த சீசனில், முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி விடுகின்றனர். முதல் சீசனில், கோர்ட்டை விட்டுக் கதை ஒரு தேடலுடன் வெளியில் சென்று விட்டு வரும். இந்த சீசனில், கிட்டத்தட்ட இரண்டு லோக்கேஷனைச் சுற்றித்தான் தொடர் நகர்கிறது. ஒன்று, நீதிமன்றம்; மற்றொன்று, கொலை நடந்த அன்று இரவு கனகவேலும், ஏனைய காவலர்களும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் ஒரு வீடு. முந்தைய சீசனில், கதையை நகர்த்தும் முக்கிய காரணியாகச் சுந்தரமூர்த்தியின் அசிஸ்டென்ட்டாக நடித்திருந்த நம்ரிதா இருந்தார். இச்சீசனில் அவரது அசிஸ்டென்ட் பவித்ராவாக நடித்துள்ள லாவண்யாவிற்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கும் ACP வித்யாவாக ஷிவின் கணேசன் நடித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கனகவேலாக நடித்துள்ளார் பிரேம் குமார். கவிதா பாரதி, பீட்டர் J. சந்திரன், ஆறுபாலா, கல்லூரி வினோத் ஆகியோர் கொலை வழக்கில் மாட்டிக் கொள்ளும் காவலர்களாக நடித்துள்ளனர். பிரேம் குமாருக்கும், உதவி ஆய்வாளராக நடித்துள்ள கவிதா பாரதிக்குமான பிரச்சனைக்கான காரணத்தை நன்றாகச் சித்தரித்துள்ளனர்.

கணவனின் மரணத்திற்காக நீதி தேடும் சந்திராவாக வரலட்சுமி சரத்குமாரும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட உதவி பெறுவது என்பது அவர்களது அடிப்படை உரிமை என வாதாடும் சுந்தரமூர்த்தியாக சரவணனும் நடித்துள்ளனர். முதல் சீசனில் உள்ள அளவு எமோஷ்னல் காட்சிகள் சரவணனுக்கு வழங்கப்படவில்லை. வெற்றி பெற்ற பின்னர் இறுதி அத்தியாயத்தில், தான் பெற்ற வெற்றிக்காகச் சங்கடப்படும் காட்சியில் நல்ல அனுபவமுள்ள நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

சுந்தரமூர்த்தி லாகவமாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (Special Investigation Team) அறிக்கையிலுள்ள மேலோட்டமாகப் பதியப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மையை உடைக்கும் இடம் ரசிக்கும்படி உள்ளது. அதோடு நில்லாமல், இயக்குநர் பாலாஜி செல்வராஜ், அறத்தின் பக்கம் நின்று பெறாத வெற்றி மகிழ்ச்சியைத் தராது என சுந்தரமூர்த்தியின் பாத்திரம் மூலமாக அழுத்தமாகப் பதிந்துள்ளார். நீதிமன்றத்தில் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டாலும், ஒருவரது தனிப்பட்ட லாபத்திற்காக 12 அப்பாவிகளின் உயிர் போனதை அறிந்ததும் சந்திராவும் சுந்தரமூர்த்தியும் இணையும் காட்சி தொடரின் வாவ் மொமன்ட். மேலும் சீசன் 3-க்கான அற்புதமான லீடுடன் முடித்துள்ளனர். இருபது நிமிடங்களுக்குள் அத்தியாயங்கள் முடிவதால், எளிமையாக ஒரே அமர்வில் தொடரைப் பார்த்து முடிக்க இலகுவாக உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.