32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 07/03/2023 4 நிமிட வாசிப்பு Updated: 09/03/2023 சினிமா
எழுத்து அளவு:

லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா, “இந்தப் படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது” என்றார்.

நாயகி காயத்ரி, “எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தனபாலன் சாருக்கு நன்றி. மற்ற படங்களைப் போல் இல்லாமல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதை நான் நன்றாகச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். நடிகர் பிரசன்னா நல்ல ஒத்துழைப்பு தந்தார். கதாநாயகன் நிஷாந்த் உடன் எனக்குக் காட்சிகள் எதுவும் இல்லை ஆனாலும் அவர் செட்டிற்கு வந்து எங்களை ஊக்குவிப்பார். இந்தப் பயணம் எனக்கு மிகவும் முக்கியம்” என்றார்.

ஜிமிக்கி கம்மல் புகழ் இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி, “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான மீட்டிங் இங்கு பிரசாத் லேபில்தான் நடைபெற்றது. எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கிய என்னுடைய இயக்குநருக்கு நன்றி” என்றார்.

நடிகர் கோடாங்கி, “இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள் அனைத்து வேலைகளையும் மிகவும் ஈடுபாட்டோடு செய்தனர். இந்தப் பெரும் காட்டில் என்னையும் ஒரு சிறு அணிலாக இணைத்துக் கொண்டதற்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் EAV, “நானும் சுந்தரும் பேசிக் கொண்டிருக்கும் போது, விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது தான் இந்தப் படம். எங்களுக்குக் கிடைத்த டீம் தான் இந்தப் படம் சிறப்பாக வரக் காரணம். ஷூட்டிங் பெர்மிஷன் எல்லாமே ஐயப்பன் தான் பார்த்துக் கொண்டான். பெயர் போடாத தயாரிப்பாளர் அவன். அருண் போஸ்ட் புரொடக்சனுக்காக வந்தவர் பார்ட்னராக மாறிவிட்டார். நன்றி சொல்ல வேண்டிய லிஸ்ட் மிகப் பெரியது. நண்பர்கள் வட்டாரத்தால் உருவான படம் இது. கண்டிப்பாக உங்களை இந்தப் படம் திருப்திப்படுத்தும்” என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா, “எழுத்துக்களால் உலகின் அனுபவத்தை நமக்கு விட்டுச் சென்றவர்கள் எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களால் இந்த மேடை நிறைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ், “படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் இந்த இடத்திற்கு வந்து நிற்க முக்கிய காரணம் ராம் சார். அவர் கற்றுக் கொடுத்ததுதான் எல்லாம். அவருக்கு நன்றி. இந்தப் படம் நண்பர்களால் உருவானது. சுந்தர் போட்ட விதைதான் இந்தப் படம். சுரேஷ், சுந்தர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது. கடைசி வரை உடனிருக்கும் நண்பர்கள். இந்தப் படத்தின் விஷுவல் நன்றாக வந்ததற்குக் காரணம் அஷ்வின் நோயல். மாஸ்டர் ஓம் பிரகாஷ், இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ், “தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா, நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குநராக இருக்கும்போது, நான் ஆஃபிஸ் பாயாக இருந்தேன். எனக்கு முன்னாலே அவர் இயக்குநராக வேண்டியவர். அவரை அறிமுகப்படுத்தும் அளவு நான் பெரிய ஆளில்லை. சினிமாவை ஆழமாகப் புரிந்து கொண்டவர். இவர்களிடம் இருந்து தான் சினிமாவே கற்றுக் கொண்டேன். இத்தனை நீண்ட கால போராட்டத்தைக் கடந்து இந்த மேடையை தனபாலன் அண்ணா கையாண்ட விதம் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அண்ணாவுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றி பெறுவார். மேலும் இந்தப் படக்குழுவிற்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கிஇருக்கிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் லைட்ஸ் ஆன் மீடியா தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளது. சுரேஷ் EAV, சுந்தர் கிருஷ்ணா P. வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்பக்குழு:

>> ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல்
>> படத்தொகுப்பு – ‘டான்’ படப்புகழ் நாகூரான் ராமசந்திரன், நெல்சன் அந்தோணி
>> இசை – ரெஞ்சித் உண்ணி
>> சண்டை – ஓம் பிரகாஷ்
>> கலை – விவேக் செல்வராஜ்
>> உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா
>> போஸ்ட் புரொடக்சன் தலைமை – அருண் உமா
>> மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.