Shadow

பேட்டை – தமிழ்ப்பிரபா

சென்னை பற்றி மற்றவர்கள் பார்வை என்பதே எள்ளலும் கிண்டலுமாக தான் இருக்கும். இது வாழ்வதற்குத் தகுதியான இடமில்லை, ஊரு முழுக்க நாற்றமெடுக்கும் கூவத்துக்கு நடுவில் குடியிருக்க முடியாது, சுற்றுபுறம் மிகவும் கெட்டுவிட்டது, சென்னையைச் சுற்றி வாழும் சேரி மக்கள் பேசும் பாஷை சகித்துக் கொள்ள முடியாது என இன்னும் பல இத்யாதிகள். இப்படித் தூற்றி கொண்டே பல இடங்களில் இருந்து சென்னையில் பகுசாகக் குடியேறியவர்களின் பல கேலி கிண்டலுக்கு மத்தியில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டு, முன்னர் சேரியாகவும் இன்று ஹெளசிங் போர்டில் வாழும் மக்களின் கதையை தான் பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை) பேசுகிறது.

Pettai Novelசிந்தாதிரிப்பேட்டை எப்படி உருவாகுகிறது என்பதில் இருந்து நாவல் தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்து அசுர வேகத்தில் முடிவடைகிறது. பல இலக்கிய நாவல்களில், எழுத்தாளர்கள் தங்கள் ஊர்களில் பேசும் வட்டார வழக்குகளை நமக்குக் கடத்தியது போலவே இங்கு சென்னை மக்களின் வட்டாரவழக்கு நாவலில் கடத்தப்படுகிறது. இலை மறைவு, காய் மறைவு போல இல்லாமல் திறந்தவெளி புத்தகமாக ரொம்ப ராவான வசைச் சொற்கள் இருக்கும். சேரி பகுதி அல்லது ஹெளசிங் போர்டு பக்கம் செல்லாதவற்களுக்கு, இந்த வசை சொற்கள் கண்டிப்பாக அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற தினமும் அந்த மாதிரியான இடங்களைத் தாண்டிச் செல்பவற்களுக்குப் பத்தோடு ஒன்னு பதினொன்னு எனக் கிளம்பிடுவோம்.

ஒரு சம்பவம், எங்கள் அலுவலகத்துக்குச் செல்ல சில பாதைகள் இருக்கிறது அதில் ஒரு பாதையை தினசரி பயன்படுத்துவேன். அது சரியாக ஹெளசிங் போர்டுக்கு அருகில் இருக்கும். அன்றும் வழக்கம் போல அந்த வழியில் வந்து கொண்டு இருந்தேன். அந்த டீக்கடையை நான் தாண்டும் போது, பதின் வயதுள்ள ஒரு பையன் கையைப் பிடித்தபடி குழந்தை என் எதிரில் வருகிறது. என்னை முந்திக் கொண்டு சென்ற ஒரு வயதான கிழவி அந்தக் குழந்தையை படு கேவலமான வசைச் சொல்லால் சிரித்துக் கொண்டு அழைக்க, அந்தக் குழந்தை கொஞ்சம் கூட யோசிக்காமல், ‘போடி திருட்டுத் தேவுடியா’ என்று பதில் கூறுவதைக் கேட்டதும் ஒரு கணம் நான் அதிர்ந்து போனேன். அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே, அவனை இன்னும் உசுப்பேத்த இருவரிடமும் கடுமையான வசைச் சொற்கள், நான் அந்த இடத்தை விட்டுத் தாண்டி வரும் வரை கேட்டுக் கொண்டு இருந்தது.

இவர்கள் இப்படித்தான். நாம், ‘ஐயோ அவன் என்னை இப்படி சொல்லிட்டானே!’ என்று மனம் வெதும்பும் வார்த்தைகளை அவர்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய விஷயமில்லை பெரிய வார்த்தையும் இல்லை. இவ்வாறு நாம் உயிரினும் மேலாக நினைத்ததெல்லாம் இங்கே குப்பையில் இருக்கும்.

மார்டன் பிட் உருவாக்கிய இந்தப் பேட்டையின் கூவம் நதிக்கரை ஓரத்தில் காலம் காலமாக வாழ்ந்து வருகிற மக்களில் கிளியாம்பா குடும்பமும் ஒன்று. அவர்களின் மூத்த மகன் குணசீலன் அவனுடையை மனைவி ரெஜினா, அவர்களின் புதல்வன் ரூபன், ரூபனின் நண்பன் செளமியன், இருவருக்கும் ஒற்றுமையான நண்பன் பாலு, யோசே மற்றும் சிலர். சௌமியனின் அப்பா, லாரன்ஸ் மாமா, பூபாலன், ரூபனின் காதலி இவாஞ்சலின், பாஸ்டர்ய்யா, இடிமுழக்கம் எபினேசர் மற்றும் நகோமியா.

இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் நகோமியம்மா. நாவலின் ஆதாரப்புள்ளி, நகோமியம்மா இல்லையேன்றால் இந்த நாவலில் ஒரு துடிப்பே இருந்து இருக்காது. நாவலின் தூணே நகோமியம்மா தான்.

எனக்கு ஒரு நாவலைப் படிக்க ஆரமித்ததும் அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஒரு உருவம் கொடுத்துவிடுவேன். அதன் படி முக்கியமான நகோமியம்மா கதாபாத்திரத்தில் நான் பொருத்தி பார்த்தது காக்கா முட்டை படத்தில் வரும் அந்தக் கிழவி கதாபாத்திரம். முக்கியமாக யோசே கதாபாத்திரத்தை யோகி பாபுவை நினைத்துக் கொண்டு படித்ததில் அவ்வளவு ரகளையாக இருந்தது.

நாவலை அவ்வளவு எளிதாக ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடியவில்லை. ரூபனின் கதை தொடங்குவதற்கு முன் என்னைக் கவர்ந்தவன் செளமியன். எங்கோ எப்படியோ இருக்க வேண்டியவன் சீரழிந்ததை தான் ஏற்க முடியவில்லை. நாவல் முழுக்க ரூபன் வலம் வந்தாலும் செளமியன், பூபாலன் மற்றும் நகோமியாவும் தான் உயிருள்ள கதாபாத்திரங்களாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தனித்தன்மையான ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு கதை இருக்கிறது. நாவலில் வலைய வரும் யாரையும் நடுவில் கழட்டி விடவில்லை. அவர் அவர் வாழ்க்கையை நம் கண் முன் நிழலாடுகிறது. சிறிய வயதில் நாவலில் இருந்து மறைந்து போன பாலு கூடக் கடைசியில் முக்கியமான ஒருவனாக வருகிறான். இடிமுழக்கம் எபினேசர் செய்யும் ஜெபத்தை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இதில் ஒரு சிறிய கதாபாத்திரமாக அமோஸ்தான். அவனுக்கு இந்த நாவலில் இடம்பெற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பூபாலன் கதையின் சம்பந்தபட்ட ஒருவனின் மகனான அமோஸ், பூபாலன் மீது வன்மத்தோடு இருக்கிறான்.

நகோமியாவிற்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரமாக பூபாலன் சென்சுரி போடுகிறார். பூபாலன் கேரக்டருக்கு நடிகர் இளவரசு நன்றாகவே பொருந்துவார். யோசேவுக்கும் குறைச்சல் இல்லை. ஐந்து மணி நேரத்துக்கு ஒரு முறையேனும் அவன் போதையை உட்கொண்டே ஆக வேண்டியவன். அதிகாலையிலே மதுவின் போதைப் பிடிப்பில் சிக்கிச் சீரழியும் எண்ணற்ற இளைஞர்களின் ஒருவன். ரெஜினாவிற்கு எல்லாம் கர்த்தர் தான், ரூபனைக் காப்பாற்ற இன்றைய நவீன யுகத்தில் கூட ஜெபம் மட்டுமே கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கும் அப்பாவி. குணசீலனின் கடைசிக் கட்ட ருத்ரதாண்டவம் செம, ரூபனின் நண்பனிடம் தனது மகனைக் காப்பாற்ற கெஞ்சுவதெல்லாம் நம்மிடம் அவர் கூறுவது போல இருக்கிறது. கிருஷ்ணாபேட்டைக்கும் சிந்தாதிரிப்பேட்டை ஆட்களுக்கும் இடையில் நடந்த சண்டையை சற்றே விரிவாக எழுதினால் குறு நாவலாகப் படைத்துவிடலாம்.

மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை வாழ் மக்களின் மத வழிபாடு வித்தியாசமாக இருக்கும். ‘நைட் தூங்க முடியல பாய். எதுவோ நெஞ்சுல ஏற்றி அமுக்கினே இருந்தா மாதிரி இருந்துச்சு. கொஞ்சம் ஓதிவிடுங்க’ன்னு காலை ஐந்து மணி அளவில் தர்கா வாசலில் காத்துக் கொண்டு இருக்கும் மகேஷ்வரன், அந்த வருடம் வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாகச் சென்று வந்து கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போடுவார். மதம் என்பது நம்பிக்கையைப் பொருத்தது. அதனை எப்படிக் கையாள்வது என்பது மகேஷ்வரன் போன்ற சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சிந்தாதிரிப்பேட்டை தான் களம் எனும் பொழுது மீன் மார்க்கெட்டை முற்றிலும் தவிர்த்தது ஏன்?? தலித் மக்கள் எப்பவும் மாட்டுக் கறி மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்களா என்ன? ஏன் அவங்க சிக்கன் மீன் சப்பிடமாட்டாங்களா!! ஆபிஸ்ல கூட ரூபன் தனது வழக்கமான பேச்சு வழக்கை கையாண்டு இருப்பது உறுத்தலாக இருக்கிறது.

சிந்தாதிரிப்பேட்டையைச் சுற்றி இன்னும் நிறைய கதைகள் மறைந்து கொண்டு இருக்கிறது. பேட்டை இரண்டாம் பாகம் வருமே எனில் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் இருந்து ஒரு படைப்பை உருவாக்கலாம். அந்த அளவுக்கு கதைகள் அந்தப் பகுதி சுற்றி இருக்கிறது. அதில்  மறக்காமல் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வரலாற்றையும் இணைத்து விடுங்கள் தமிழ்ப்பிரபா.

சரி நாவல் எப்படி இருக்கு??

நகோமியம்மா வாய்ஸ்ல சொல்லனும்னா, அதயேங் கேக்குற! 🙂

– ராஜராஜன்