செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல்.
சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்‘ போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவிற்காகச் செய்யும் சாகசம் அட்டகாசமாய் உள்ளது.
இளவரசியின் சாகசம் அதோடு முடிவதில்லை. பள்ளியில், ஷாலு கையில் இருந்து மரப்பாச்சியைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் சேட்டைக்கார நேத்ராவையும் மரப்பாச்சி படாதபாடு படுத்துகிறது. நீங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மை, உங்களை உண்மையை மட்டும் பேச வைத்தால் என்னாகும்? நேத்ராவிடம் கேளுங்கள்.
கடைசி அத்தியாயத்தில், சூர்யா அறிமுகமாகிறான். பாலபாரதியின் நூலான சுண்டைக்காய் இளவரசன் நூலில் பிரதான பாத்திரம் அவன். பூஜாவின் அத்தியாயத்தோடு நாவல் முழுமையடைந்து விடுவதால், சூர்யாவின் அத்தியாயத்தில் சுவாரசியம் கொஞ்சம் குறைகிறது என்றே சொல்லவேண்டும். ஆனால், வருத்தத்தில் இருக்கும் ஷாலினிக்குஅதிலிருந்து மீள அவன் சொல்லும் ஓர் அற்புதமான ரகசியத்தோடு இந்நூல் நிறைவடைவது சிறப்பு.
மரப்பாச்சிப் பொம்மையைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்ற தகவலையும் சுட்டிக் காட்டியுள்ளார். பார்பி பொம்மை, பாரா க்ளைடிங், கோகோ ஆட்டம் போன்றவைப் பற்றிய தகவல்களை, ஆங்காங்கே தனி விண்டோவில் கொடுத்துச் சுவாரசியப்படுத்துகிறார். T.N.ராஜனின் ஓவியங்கள், கதாபாத்திரங்களின் மனநிலையைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன.
குட் டச், பேட் டச் என்று நேரடியாக நாம் குழந்தைகளிடம் பேசுவதை விட, ஒரு கதையாகச் சொன்னால் அது அவர்களுக்கு எளிதாக மனதில் பதியும். பாலபாரதியின் மரப்பாச்சி பொம்மை அதை அழகுறச் செய்கிறாள். அதனாலேயே இந்நூல் மிகவும் கொண்டாடப்பட வேண்டியதாகிறது. குழந்தைகளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாதே எனச் சொல்வது ஃபேஷனாக உள்ளது. அதனால் பாதகமில்லை. பெரியவர்கள் வாங்கிப் படித்துக் காட்டலாம். தவற விடக்கூடாத அற்புதமான சிறுவர் நூல் இது.
பி.கு.: புத்தகத்தின் விலை 60/-. ஆனால் ஸ்பைரல் பைண்டிங்கில், ‘வானம் பதிப்பகம்’ கொண்டு வந்துள்ள Gifted version‘ மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ ஈர்க்கும் வகையில் உள்ளது. பரிசுப் பதிப்பான அதன் விலை 120/-.
வானம் பதிப்பகம் – 9176549991
– தினேஷ் ராம்