அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது.
வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவேக் படத்தில் ரிஷிகேஷைக் கலாய்க்கிறார்.
சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். நாயகனின் காதலியாகத் தோன்றுவதைத் தவிர்த்து, கதைக்குப் பெரிதாக உதவவில்லை. காவல்துறை அதிகாரியாக நரேன் தோன்றியுள்ளார். வலுவான கதாபாத்திரம் என்றாலும், அவரும் அழுத்தமாக மனதில் பதியத் தவறிவிடுகிறார். படத்தின் கலகலப்பான சிற்சில கணங்களுக்கு விவேக் உதவுகிறார். கதாபாத்திரங்களை மனதில் பதியுமாறு உருவாக்காதது பார்வையாளர்களைப் பெரிதும் கவரவில்லை. திரைக்கதையை யூகிக்க முடிவதாலும், குவிந்து கொண்டே போகும் பேய்ப்படங்களிலலிருந்து தன்னை வேறுபடுத்திக் கண்டு காட்டவும் தவறிவிட்டார் இயக்குநர் சாய் பரத்.
கிரிமனாலஜி மாணவி துளசியாக வரும் மியா ஜார்ஜ் மட்டும் மனதில் பதிகிறார். ஃப்ளாஷ்-பேக்கில் வந்தாலும், துளசி பாத்திரத்தின் உருவாக்கம் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் பின்புலத்திலுள்ள தெளிவற்றத்தன்மை மியா ஜார்ஜின் பாத்திரத்தில் இல்லாததே காரணம். ஒரு பாடலில், துளசியின் மொத்த வாழ்க்கையையே சொல்லிவிடுகிறார்கள். ஆனால், படம் முடியும் வரையிலுமே கூட நாயகன் நாயகி யாரென்ன என்ற குழப்பத்தைத் தக்கவைக்கின்றனர். ஓரிடத்தில் நாயகனிடம் விவேக், ‘நான் உன்னை எடுத்து வளர்த்தவன்டா!’ என்கிறார். எடுத்தெறிந்து பேசுதல் நகைச்சுவையில் வருமெனத் தீவிரமாக இயக்குநர் நம்பிக் கொண்டிருப்பாரோ எனச் சந்தேகமாக உள்ளது.
வாய் பேச இயலாத குரலாக (கதாபாத்திரம் பெயர் ‘குரல்’) நடித்திருக்கும் அர்ஜூன் சிதம்பரம் நன்றாக நடித்துள்ளார். நேபாளியாக வரும் அம்ஜத்தும் தன் பாத்திரத்தினை நிறைவாகச் செய்துள்ளார். முழு நீள பேய்ப் படமாகவும் இல்லாமல், காமெடிப் படமாகவும் இல்லாமல் பயணிக்கிறது படம்.