க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்?
சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி.
நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல்வராகவனுக்கான நியாயங்களை வலுவாக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். கண் தெரியாத சுடலைக்காக இரங்கும், யோசிக்கும் சங்கையா பாத்திரத்தில் கலக்கியுள்ளார் செல்வராகவன்.
வன்முறை என்பது எந்தக் காரணத்திற்காகவும் ஏற்புடையதில்லை என்றாலும், எல்லாக் கொடுமைகளுக்கும் ஆளாகி, அனைத்தையும் இழந்து, நீதியும் மறுக்கப்படும் பொழுது, வெடித்தெழும் கோபத்திற்கு வேறு வடிகாலை மனிதனால் யோசிக்க இயலாது (சோகத்திற்கு மது/புகை, கோபத்திற்குப் அடி/ உதை/ கொலை என பழிவாங்குதல் போன்ற சிறுமைகளில் இருந்து விடுபட கலையில் மூழ்குவது ஒரு வடிகாலைத் தரும்).
கீர்த்தி சுரேஷ் மறைந்து பொன்னியாக அவர் தெரிய ஆரம்பித்த பின், அப்பாத்திரத்தின் வலியையும் வேதனையையும் அவரது கண்ணிலும் உடற்மொழியிலும் உணரமுடிகிறது. எல்லாம் முடிந்து, பழி வாங்கும் ஆவேசம் நிறைவடைந்ததும், அக்கண்களும் உடற்மொழியும் இயல்பாகிறது. சொத்துக்காக அண்ணனையும், அண்ணன் மகனையும் கொல்லத் துடிக்கும் முருகதாஸின் பாத்திரமும் அச்சத்தை விளைவிக்கிறது. அதன் காரணமாக, அவர் செல்வராகவனின் துப்பாக்கியிடமும், கீர்த்தி சுரேஷ் ஓட்டும்போது மெட்டடார் வேனிடமும் சிக்கித் தவிக்கும் பொழுது, நமக்குள் எழும் குரூர திருப்தி, க்வென்டின் டாரன்டினோ படங்களில் வரும் வன்முறைக் காட்சிகளிலும் ஏற்படும். நம்மையும் மீறி வன்முறையை ரசிக்கும்படி செய்துவிடுவார் டாரன்டினோ.
ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை எக்காரணம் கொண்டும், குழந்தைகளுடன் பார்க்கும் தவறினை மட்டும் செய்துவிடாதீர்கள்.