திரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம்.
“தியேட்டரில் நான் 465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ஒரு ரசிகனாய் நான் பல படங்களை விமர்சித்திருக்கிறேன். அதனால் என்ன பண்ணலாம் பண்ணக்கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். நிச்சயம் என் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். திரி என்றால் இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் தலைப்பு வச்சிருக்கேன். சினிமாவால் தான் சமுதாயம் கெட்டுப் போகுது. நல்ல கருத்துகளையே அவைச் சொல்வதில்லை என்றொரு கம்ப்ளெயின்ட் இருக்கு. நான் நல்ல கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ‘துருவங்கள் 16, மாநகரம் போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்ஷியல் படமா?’ என்று நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்” என்றார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் திரி. ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைட் தொடர்ந்து அஸ்வின் காகமனு, ஸ்வாதி ரெட்டி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தை எடிட்டர் ராஜா சேதுபதி தொகுத்துள்ளார்.
ஏ.எல். அழகப்பன் முக்கியமான பத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பேசும்போது, “ஆர்.பி.பாலகோபி தான் தயாரிப்பாளர் என்றதும் உடனே ஓகே சொல்லி விட்டேன். இயக்குநர் கதை சொல்ல வந்தபோது, ‘என்னுடைய காஸ்ட்யூம் என்ன?’ என்று கேட்டேன். ‘இப்ப இருக்குற மாதிரியே வாங்க சார். அப்படித்தான் உங்க கேரக்டரையே எழுதியிருக்கேன்’ என்றார். ஈசன் படத்துக்கு சசிகுமார் என்னை வந்து கேட்ட போது என் காஸ்ட்யூமை மாற்றக் கூடாது என திட்டவட்டமாகச் சொல்லியிருந்தேன்” என்றார்.
“பொதுவாக நான் பிரிவியூக்களில் படம் பார்ப்பதில்லை. அங்கே உண்மையை நம் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்ப்பது தான் பிடிக்கும். இயக்குநர் அசோக் அமிர்தராஜ் யாரிடமும் வேலை செய்ததில்லை. அவரே தயாரிக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரத்தில் தான் பாலகோபி போல சரியான ஆட்கள் படத்துக்குள் வந்தார்கள். நான் கருத்து சொல்வது மாதிரியே நிறைய படங்கள் என்னைத் தேடி வருகின்றன. கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும்” என்றார் நடிகர் ஜெயபிரகாஷ்.
“சில வசனங்களைச் சொல்ல மாட்டேன் எனச் சொல்லிவிட்டார் அஸ்வின். ‘என்ன சார் இப்படிலாம் டயலாக் வச்சிருக்கீங்க? நான் வளரும் ஹீரோ’ என்பது போல் தயங்கினார். அந்த டயலாக்ஸ்லாம் எனக்குக் கொடுங்க என வாங்கிப் பேசினார் ஜெயபிரகாஷ்” என்று புகழ்ந்தார் இயக்குநர். “நான் கதை எழுதும் பொழுதே மூவரைக் கண்டிப்பாக நடிக்க வைக்கவேண்டும் என முடிவு செய்தேன். ஜெயபிரகாஷ் சார், ஏ.எல்.அழகப்பன் சார், சுப்ரமணியபுரம் சுவாதி ஆகியோர்தான் அவர்கள். 13 ஹீரோஸிடம் கதை சொன்னேன். அஷ்வின் தான் ஒத்துக்கொண்டார். இதை நான் அவரிடமே சொல்லவில்லை” என சிரித்தார் அசோக் அமிர்தராஜ்.