
பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர் ஸ்ரீகண்டன். அந்தப் பட்டறையில் இருந்து வெளிவரும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். ‘தப்பு தண்டா’ ஒரு டார்க் காமெடி படம். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்குப் பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ்த் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது எனக்கு வாழ்நாள் பெருமை” என்றார் இயக்குநர் ஸ்ரீகண்டன் நெகிழ்ச்சியோடு.
மேலும், “இந்தப் படத்தை மட்டும் பாலு மகேந்திரா பார்த்திருந்தால் கண்டிப்பாக என்னைச் செருப்பால் அடிச்சிருப்பார். அவர் பட்டறையில் இருந்து வரும் முதல் இயக்குநர் நான் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைத் தொடர்ந்து இனி நிறைய பேர் வருவாங்க. வெற்றிமாறன் போன்றவர்களின் பெயரைக் கெடுக்குமளவு என் படம் கண்டிப்பாக இருக்காது” என்றார். படத் தயாரிப்பாளர்கள் பலரைச் சந்தித்த அனுபவத்தில் இப்படி வேண்டும், அப்படி வேண்டும் எனத் தொடர்ந்து கேட்கப்பட்டதால் குத்துப் பாட்டோடு ஒரு கதையை உருவாக்கியுள்ளது குறித்து குற்றவுணர்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார். எனினும் துருவங்கள் பதினாறு, மாநகரம், 8 தோட்டாக்கள் போல் தனது படமும் பேசப்படும் என நம்பிக்கையுடன் உள்ளார் இயக்குநர் ஸ்ரீகண்டன்.