Shadow

செஞ்சிட்டாளே என் காதல விமர்சனம்

Senjittale En kadhala review

தலைப்பே கதை. நாயகனைக் கழற்றி விட்டு விடுகிறார் நாயகி. பின் நாயகனின் நிலை என்ன ஆனதென்றும், அவனை ஏமாற்றிய நாயகியை அவன் என்ன செய்தான் என்பதும்தான் படத்தின் கதை.

நாயகனின் மனநிலையை அலசியது போல், நாயகியின் மனமாற்றத்திற்கான காரணத்தை அலசாமல், ‘சில பொண்ணுங்க இப்படித்தான்! ஆள் மாத்திட்டுப் போயிட்டே இருப்பாங்க’ என்ற வலிந்து திணிக்கப்பட்ட தொனியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

106 நிமிடங்களே படம்!

படத்தின் முதற்பாதி போனதே தெரியாமல் விறுவிறுப்பாய்ச் செல்கிறது. ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் நாயகனின் அம்மாவும் தங்கையும், தூக்கில் தொங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் துணியை நடு வீட்டில் காண்கின்றனர். நாயகனை ஐந்து நாட்களாகக் காணவில்லை. அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்காமல் தவிக்கின்றனர் அவனது நண்பர்கள். இடையிடையே, நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படிக் காதல் மலர்கின்றதெனச் சொல்கின்றனர்.

இரண்டாம் பாதியில்தான், நாயகி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நாயகனிடம் இருந்து விலகினாள் என திரைக்கதை நீள்வதோடு, ஏமாற்றிய நாயகிக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறான் எனச் சுபமாக முடிகிறது படம்.

வீரா எனும் பாத்திரத்தில், நாயகனாக நடித்துள்ளார் எழில் துரை. படத்தின் இயக்குநரும் அவரே! அறிமுகத்தின் பொழுது அந்நியமாய்த் தெரியும் அவர், இரண்டாம் பாதியில், ‘நம்ம வீட்டுப் பையன்’ போல் நினைக்க வைத்து விடுகிறார். அதற்கு மிக முக்கிய காரணம், நாயகியாக நடித்திருக்கும் மதுமிலா தான். காதலில் ஸ்திரமற்றத்தன்மை, ஒருவனை விட இன்னொருவன் பெட்டரெனத் தடுமாறும் நெகடிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தை மிக அழகாகச் செய்துள்ளார். படம் முடிந்தவுடன், நடிகர்களின் பெயர்களைப் போடும் பொழுது, நாயகியின் தோழிகளாக நடித்தவர்களின் பெயர்களைப் போடாமல் “சகுனி’ஸ்” என்று போடுகிறார் (ஸ்னீக்-பீக்கிலேயே கூட சகுனிகளைக் காணலாம்). உண்மையில், தூபம் போட்டுப் பிரித்து விடும் பாத்திரங்களில் அவர்கள் அனைவரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்களின் படத்திற்குக் கீழ், அவர்கள் பெயரையும் திரையில் கொண்டு வந்திருக்கலாம் இயக்குநர்.

அர்ஜூனன், ‘கயல்’ வின்சென்ட், ‘மெட்ராஸ்’ ரமா, தங்கை நித்யாவாக நடித்திருக்கும் திவ்யா, நாயகனை ஒன்-சைடாகக் காதலிக்கும் அபிநயா என அனைவருமே நன்றாக நடித்துள்ளார்கள். படத்தில் ஒரு ஸ்டன்ட் காட்சியும் உண்டு. நாயகியின் 4வது காதலனை, நாயகியின் 3வது காதலன் உதவியோடு கட்டிப் போட்டுத் தூக்கிவிடுவார் நாயகன். துப்பாக்கி முனையில், நாயகியையும் அவனது கடைசி காதலனையும் நிறுத்தும் காட்சி அதி சுவாரசியம். இதில் ஒட்டாமலோ, கதைக்குப் பெரிதும் உதவாமல் இருப்பது நாயகனின் தந்தையாக வரும் அஜய் ரத்னம் மட்டுமே.

நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சதனால் பார்வையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் நடித்துள்ளது சிறப்பு. மேலும், M.மணீஷின் கேமிராவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் அக்காட்சிகளை அழகாக்குகின்றன.

புருவங்களை உயர்த்த வைக்கும் ஒரு விஷயத்தைச் செய்துள்ளார் இயக்குநர் எழில் துரை. காதலை நாயகியிடம் சொல்ல, பாரதியாரின் அழகான பாடல் வரிகளை உபயோகித்துள்ளார்.

ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே
     ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே,
பாங்கினிற் கையிராண்டுந் தீண்டியறிந்தேன்
     பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்;
ஓங்கி வருமுகை யூற்றிலறிந்தேன்;
     ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா!
     மாய் மெலரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்.

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
     நீல விசும்பினிடை நின்முகங்கண்டே;
திரித்த நுரையினடை நினமுகங்கண்டேன்;
     சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம்அளந்தே,
     பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;
சிரித்த ஒலியில்நின் கைவிலக்கியே,
    திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்.

F.ராஜ் பரத்தின் இசையில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் குரலில், இப்பாடல் ரம்மியமானதொரு உணர்வைத் தருகிறது. இயக்குநர் எழில் துரை, இப்படத்திற்கும் இப்படி ஏதேனும் கவித்துவமான தலைப்பையே வைத்திருக்கலாம். ‘செஞ்சிட்டாளே என் காதல’ என்பது விடலைத்தனத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. மெச்சூர்டான க்ளைமேக்ஸுக்கும் இத்தலைப்புப் பொருந்திப் போகவில்லை.