Shadow

மெல்ஃபெர்ன் 23′ விருதை வென்ற ‘சீதா ராமம்’

 

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடத்தப்படுவதும் அவற்றில் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது அளிப்பதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மெல்போர்ன் நகரில் 14வது இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கானப் பிரிவில் போட்டியிட்ட “சீதா ராமம்” திரைப்படம் அப்பிரிவில் விருதை வென்றிருக்கிறது. சென்ற ஆண்டு துல்கர் சல்மான் – மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடிப்பில் ஹனுராகவ புடி இயக்கத்தில் வெளிவந்த அற்புதமான காதல் காவியம்  “சீதா ராமம்”.  யாருமற்ற ஒரு இராணுவ வீரனுக்கும், ராஜா ராணி பரம்பரையில் வந்த ஒரு ராணிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த அத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் சாதனை புரிந்தது நினைவு இருக்கலாம்.

இப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது சீதா ராமம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. இந்த விருதை படக்குழுவினர் விழா மேடையில் பெற்றுக் கொண்டனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா  கதையின் போக்கை மாற்றும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார்.

 

இதனால் ‘சீதா ராமம்’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்களுக்கு இது மறக்க இயலாத படைப்பாகவும் அமைந்தது.