சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K. குமார் தயாரித்திருக்கிறார்.
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் புதிதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். பாடல்களை எழுதினாலும் இயக்குநரை நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசி மூலமாகவே உரையாடி இருக்கிறேன். தற்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கும் நான் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இருப்பினும் நம்மில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் சில கதாநாயகர்களில் மண்ணின் மைந்தனான சூரியும் ஒருவர்.
அவருக்குள் இருந்த இதுபோன்ற ஆளுமை செலுத்தும் நடிப்புத் திறனைக் கண்டறிந்ததற்காகவும், தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்றிருந்த வரைமுறையை உடைத்து எறிந்து, எங்கள் ஊர் திருவிழாவில், கூட்டத்தில் ஒருவராக, எங்கள் ஊர் ஜனத்திரள்களில் ஒருவராக, உலா வரும் ஒருவனை அவனுக்குள் இருக்கும் நாயக பிம்பத்தை ஹீரோவாகத் திரையில் செதுக்கியதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை உணர்ந்து சூரியும் கடினமாக உழைத்திருக்கிறார். சூரியும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் காணும் போது வியக்க வைக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் சூரிக்கு வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு சூரியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று உலக சினிமா என்று வியந்து பாராட்டும் எந்தத் திரைப்படமும் பிரம்மாண்டத்தைப் பற்றிப் பேசுவதில்லை. நடிகர்களைப் பற்றிப் பேசுவதில்லை. உணர்வுகளைப் பற்றிப் பேசுகிறது. உண்மையைப் பேசுகிறது. வாழ்வியலைப் பேசுகிறது. எனவே உலக சினிமா என்பது நமக்கு தூரமாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை. நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. நம்மைச் சுற்றி நடப்பவைகளை, நமக்கே தெரியாத விசயங்களை உணர்வுகளாக பிரதிபலிப்பது தான் உலக சினிமா. இதனைப் பூர்த்தி செய்யும் வகையில் சமீப காலமாக படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பனைகளை கடந்து கற்பனைகளைக் கடந்து வாழ்வியலோடு கலந்து கைபிடித்து நடக்கத் தொடங்கி விட்டது. எனவே கருடன் போன்ற படங்களும், கருடனைப் படைத்த படைப்பாளிகளும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும்” என்றார்.