Shadow

ஸ்பாட் விமர்சனம்

Spot-movie-review

ஸ்பாட் என்றால் ஓரிடம் அல்லது ஒருவரின் லோக்கேஷனைக் கண்டுபிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்திற்கு, இரண்டு பொருளுமே பொருந்தும். முதற்பாதியில், நாயகியின் லோக்கேஷனை வில்லனின் ஆட்கள் அவரது ஃபோனை வைத்துக் கண்டுபிடித்த (spot) வண்ணம் உள்ளனர். இரண்டாம் பாதியில், நாயகன் ஓரிடத்திற்கு (spot) வில்லன்களை மொத்தமாக வர வைக்கிறார்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை முழுவதுமே சேஸிங் (chasing) தான். மஹிந்திரா ஸ்கார்பியோவை, மிட்சுபிஷி பஜேரோ துரத்திக் கொண்டே உள்ளது. ஸ்கோர்பியாவில் நாயகன், நாயகி, நாயகனது மூன்று நண்பர்கள் உள்ளனர். சென்னையில் தொடங்கும் அந்த சேஸிங் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள கன்டெயினர் யார்டில் முடிகிறது.

லொள்ளு சபா மனோகரின் மகன் ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். நாயகனின் நண்பர்கள் மூவரில் ஒருவராக வருகிறார். கலகலப்பிற்கு உதவக்கூடிய ஸ்கோப் இருந்தும் அதற்கான மெனக்கெடல் இல்லை. அதனால் அவரும், நாயகனின் இன்னொரு நண்பருமான ஜோசப், தங்கள் காரில் உயிருக்குப் பயந்து பயணிக்கும் நாயகியை உரசிக் கொண்டே உள்ளனர். கரெக்ட் செய்கிறார்களாம். திரைக்கதையில் நண்பர்கள் அனைவருக்கும் பிரத்தியேகமான கதாபாத்திர வார்ப்பினைக் கொடுத்திருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் காட்சிகளுக்கு.

தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.ஆர்.ஆர்.-இன் மகன் ரேஹான் நாயகனின் பிரதான நண்பனாக நடித்துள்ளார். ஜோசப்பையும் ராஜ்குமாரையும் போல் நாயகியை உரசுவதற்காக மட்டும் திரையில் தோன்றாமல், கொஞ்சம் பிராக்டிகலான நபராக உள்ளார். ஆனாலும், ஒரு பெண்ணுக்கு உதவும் நாயகனைப் பார்த்து, ‘என்ன லவ் பண்றியா?’ எனத் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளார். நாலைந்து தடவை அப்படிக் கேட்டதும், நாயகனும் வெட்கப்பட்டு ஒத்துக் கொள்கிறார். காதல், நாயகன் நாயகிக்குள் இயல்பாக எழாமல் மிகவும் க்ளிஷேவாக உள்ளது. நாயகியாக அறிமுகமகியுள்ளார் அக்னி பவர். விஜய் ஷங்கரின் இசையில், கானா பாலா பாடிய, “தாஜ்மஹாலு.. என் தாஜ்மஹாலு..” எனும் பாடல் துள்ளலாக ரசிக்கும்படியாக உள்ளது.

கராத்தே கோபாலன், ‘ஏய்.. ஏய்.. கொன்னுடுவேன். வண்டிய நிறுத்து. வேகமா போ’ எனப் படத்தின் முதற்பாதி முழுவதும் கையில் அரிவாளை ஏந்தியபடி கத்துகிறார். இவர் படத்தின் நாயகனான கராத்தே கெளஷிக்கின் தந்தையாவர். தந்தையும் மகனும் இரண்டாம் பாதியில் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்கின்றனர். வெற்றி பாத்திரத்தில் கெளஷிக் ஆக்‌ஷன் ஹீரோ வேடம் பூண்டுள்ளார். அவரது உயரமும், கராத்தே பரீச்சயமும் அதற்குத் துணை புரிவதால் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால், தன் நண்பனின் மரணத்துக்கு மூளையாக இருந்தவனின் மீது கோபம் கொள்ளாமல், அடியாள் ஒருவனை உயிருடன் எரித்துப் பழி தீர்த்துக் கொள்கிறார். ஆனால் க்ளைமேக்ஸில், “உயிரை எடுக்க நீ என்ன கடவுளா?” என ரிஷிகாந்திடம் பஞ்ச் கேள்வி கேட்கிறார். 

பருத்தி வீரன் சரவணன் க்ளைமேக்ஸில் தோன்றி ஒரே ஒரு வசனம்தான் பேசுகிறார். ஆனால், அது நெக்ஸ்ட் பார்ட் தொடருவதற்கான ட்விஸ்டாய் அமைகிறது. ரிஷிகாந்த்தின் ஆட்டம், அடுத்த பார்ட்டிலும் தொடரும் என்று முடிக்கிறார் இயக்குநர் வி.ஆர்.ஆர். மத்திய, மாநில அரசுகளைப் பாக்கெட்டில் வைத்திருப்பதாகச் சொல்லி லூட்டி அடிக்கும் மஹாராஜ் எனும் வேடத்தில் வில்லனாக நடித்துள்ளார் நாசர். நாசரும், நாயகனுக் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது கூட அடுத்த பாகத்தில்தான். நாயகிக்குக் குடைச்சல் தரும் சேரன் ராஜை, நாயகன் இருந்த இடத்திலிருந்தே தூக்குவது அட்டகாசம். அவ்வளவு வல்லமை வாய்ந்தவராக இருந்தும் ஏனோ பிராக்டிக்கலாகத் தன் பிரச்சனையை நாயகன் அணுகாதது திரைக்கதையின் பலவீனம். எனினும் வெற்றியின் ஸ்டன்ட் கோரியோகிராஃபியும், மோகன் ராஜின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்பிற்கு உதவுகின்றன.