Shadow

சுடானி ஃப்ரம் நைஜீரியா

Sudani from Nigeria

திருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள்.

அதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, ‘செவன்ஸ்’ என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூலைகளிலெல்லாம் பந்தயங்கள் நடத்தி, ‘ஆர்ப்பு விளி’யும், செண்ட மேளமுமாக பெரும் திரளாக அதைக் கண்டு ரசித்து, ‘டோ நாராயணன் குட்டி! பொறவிலு ஆளுண்டே!’ என்று ஆட்டக்காரர்களுக்கு காலரியிலிருந்து கொண்டே தகவல் சொல்லிக் கொண்டு, மலபாரைப் பொறுத்தவரை அது பண்டிகைக் காலம். இந்தப் பண்டிகைக் கோலாகலங்களை, கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது மையலை ஓர் எளிய கதை மூலம் வெளிப்படுத்த முடியுமா என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. ஆனால் மலபாரின் இந்த வித்தியாசமான இதயத்துடிப்புக்கு முழுமையான நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் ஸக்கரியா. உலகப்படங்கள் பார்த்துக்கொண்டு, உலகப் படங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த ஸக்கரியாவுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது. உலகளவில் பேசப்படாவிட்டாலும் உருப்படியான படம் செய்ய வேண்டுமென்ற கனவுதான் அதுவும் மலையாளத்தில் அறிமுகமான எந்த முகங்களும் இல்லாமல் தன் பெயர் சொல்லும் ஒரு படம் எடுத்து விட வேண்டுமென்பது. எல்லோருக்கும் கனவை மெய்ப்படுத்தும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. ஆனால் விஷப் பரீட்சைதானென்று தெரிந்தே களமிறங்கிய ஸக்கரியா முதல் முயற்சியிலேயே அதனை அற்புதமாகச் சாதித்திருக்கிறார். ஆஸம்ஷகள் மாஷே!!

மலப்புரத்தில் சிறு நகரமொன்றில் கால்பந்தாட்ட அணியொன்றின் மேலாளராக மஜீத். அவனது அணியில் ஆடுவதற்காக நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் சாமுவேல். நைஜீரியாவும் சுடானும் மலபாரிகளுக்கு ஒன்றுதான். எனவே சாமுவேலின் செல்லப்பெயராகிறது சுடு. மஜீதின் சொந்த வாழ்க்கைத் துயரங்கள் ஒருபுறம். உம்மாவின் இரண்டாம் கணவருடனான மூர்க்கமான கோபம் மறுபுறம், பிள்ளை கணவரை ஏற்காத மீளாத்துயரில் உம்மா. இதற்கிடையில் தனது உம்மாவின் இரண்டாம் கணவரை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத மஜீதின் பிடிவாதம் மெல்ல மெல்லத் தளரும் கிளைக்கதை வேறு. கஷ்டப்பாடுகளுக்கிடையே அணியை நடத்துவதற்கிடையில் சாமுவேலுக்கு நிகழும் சிறுவிபத்தும் அதனைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் என்று சிக்கல்களில்லாத எளிமையான கதை. இந்தக் கதையை இணைக்கும் இழையாகக் கால் பந்தாட்டம் இருந்தாலும் அதுவே பிரதானமில்லை. வாழ்க்கையும் ஒருவிதமான கால்பந்தாட்டம்தான். எவரெவர் கால்களுக்கிடையிலோ அல்லல்படும் வாழ்க்கை. இலக்கு மட்டுமே குறி. இலக்கை நோக்கிய ஓட்டமும் அதனைத் தடுக்க ஒரு கூட்டமும் இந்த ஓட்டங்களுக்கிடையில் பந்து படும் பாட்டை ரசிக்க வேறொரு உலகமும் இயங்குவதைத்தான் சொல்கிறது ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’.

எங்கோ நைஜீரியாவில் பிறந்து பிழைக்க வழியின்றி கேரளத்துச் சிறுநகரத்தில் பிழைக்க வருபவனின் புலம் பெயர் சோகத்தையும், உறவுகளுக்கிடையிலான எளிய சிடுக்குகளையும் சொல்லிச் செல்லும் படம் கூடவே இனம், மதம், மொழி இவைகளைத் தாண்டி வாழும் எளிய மனிதர்களின் பேரன்பில்தான் உலகம் இன்னமும் இயங்குகிறது என்பதையும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டி விடுகிறது. மனித நேயம் போல நெகிழ்வான விசயம் உலகிலில்லை என்பதைக் காட்சிகள் தோறும் நேர்த்தியான இழையாகப் பின்னிப்பின்னி கண்களின் ஓரம் நீர்த்துளியை வர வைத்து விடும் சாமர்த்தியம் ஸக்கரியாவுக்கு வாய்த்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பிழியப் பிழிய மெலோடிராமாவாக மாறி விடக் கூடிய வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்து விடுபவர்கள் மலையாளிகள். காட்சியைப் பேச விட்டு கதை மாந்தர்கள் உடல் மொழி வழியே உணர்வுகளைக் கடத்தி விடும் சாமர்த்தியம் எல்லோருக்கும் வாய்த்து விடாது திறமையான இயக்குநர்களைத் தவிர்த்து, ஆனால் முதல் படத்திலேயே ஸக்கரியா இதைச் சாதித்திருப்பதுதான் பிரமிப்பாக இருக்கிறது.

“எனக்குப் பெனால்ட்டின்னாலே பயம்”, “உனக்கு மட்டுமில்லடா. மெஸ்ஸியோட ரசிகர்களெல்லாருக்குமே அதுதான் பயம்” என உலக மகா ஆட்டக்காரனான மெஸ்ஸி தவற விட்ட பெனால்ட்டியை நினைவுபடுத்திக் கிண்டல் செய்யும் இதுபோன்ற வசனங்கள்தான் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. புரிந்தவர்கள் வெடித்துச் சிரிக்க இது போல படம் முழுக்க வசனங்கள் விரவிக் கிடக்கின்றன

க்ளப் மேனேஜர் என்று பெயர் இருந்தாலும்‌ கூடப் பெண் கிடைப்பதில்லை‌ மஜீதுக்கு. சாமுவேல் சிகிச்சைக்காக நண்பன் தன் மனைவியின் நகையை அடகு வைக்கும் காட்சியில், “இந்த ஊரில் அநேகமா 90% நகையும் இங்கதான் இருக்கு. எனக்குக் கல்யாணமானா உன்னைத் தொந்தரவு செய்யாம நானும் அடகு வைக்கலாம். ஆனா பொண்ணு கிடைக்கணுமே?” வசனத்தை வெளிப்படுத்துவதில் மஜீதாக வரும் ஷௌபின் ஸஹீருடையது எவருக்குமில்லாத தனி பாணி. ஷௌபின் திரையில் தோன்றினாலே மலையாளிகள் சிரிக்கத் தயாராக இருந்தபோதும், தன்னை ஒரு சட்டத்துக்குள் அடைத்துக் கொள்ளாமல் படத்துக்குப் படம் வெவ்வேறு கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஷௌபினின் திரை வாழ்க்கையில் இது நிச்சயம் மைல்கல். சாமுவேல் காசுக்காக விலை போய் விட்டதாக நினைத்து உடைந்த ஆங்கிலத்தில் குமுறும்போதும், தன் தவறை உணர்ந்து சாமுவேலில் ஆங்கிலத்தில் தொடங்கிப் பின்னர் மலையாளத்தில் தன் உணர்வுகளைக் கொட்டும்போதும், தனக்கேயுரிய உடல் மொழியோடும், பாவங்களோடும் கிடைத்த ‘ஃப்ரீகிக்’கை அட்டகாசமான ‘கோலா’க மாற்றியிருக்கிறார்.

சாமுவேலாகச் சிறப்பாக நடித்திருக்கும் நைஜீரிய நடிகர் சாமுவேலின் பின்னணிக்காட்சிகள் உள்நாட்டுப்போர் நடக்கும்‌ நாடுகளில் மனிதர்களின் நிலைகுறித்த பார்வையைக் கோடி காட்டுகிறது. உளநாட்டுப் போர் என்பது எத்தனை கொடூரமானது என்பதை உலகம் முழுக்கக் கேட்டும் கண்டுமிருந்தாலும், ஓரிரு காட்சிகளில் அந்த வேதனையைப் பதிய வைக்க முடிகிறது இயக்குநரால். எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் நாம் வாழுமிடம் எத்தனை மகத்தானதென்பதை உணரும் வாய்ப்பு அது. குறிப்பாகத் தண்ணிர் விரயமாகும் காட்சியில் சாமுவேல் கடும்கோபம் கொள்ளும் காட்சி.

ஷௌபின் தவிர்த்தால் சொல்லிக் கொள்ளும்படியான நட்சத்திரங்கள் யாருமில்லை. அதுதான் இயக்குநரின் ஆசையும் கூட. படத்தில் நடித்தவர்கள் அனைவருமே புதிய முகங்கள். பெரும்பாலும் இயக்குநர்களின் நண்பர்கள். ஆனால் ஷௌபினையே, ‘அப்படி ஓரமாய் இரு தம்பி’ என்று ஓரம்‌ கட்டி விடுகிறார்கள் மஜீதின் உம்மாவாக வாழ்ந்திருக்கும் சாவித்ரி ஸ்ரீதரனும், பீயும்மாவாக அசத்தியிருக்கும் சரசா பாலுஸ்ஸேரி அம்மையாரும். கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் நாடக உலகில் கோலோச்சியிருந்து கேரள அரசின் சிறந்த நடிகைகளுக்கான பரிசுகளைப் பெற்றிருந்தும் நாடகத்தன்மை சிறிதும் இல்லாமல் உடல் மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் படத்தை நிறைப்பவர்கள் இவர்கள்தான்.

ஆஸ்பத்திரியில் சுடுவைப் பார்க்க கூட்டம்‌ கூடி நிற்கையில் அறைக்குள் வரும் நர்ஸ், ‘இங்க என்ன சம்மேளனமா நடக்குது?’ என்று கோபப்படும்போது, அவரைப் பார்த்துக் கொண்டே, “எல்லோரும் கிளம்புங்க” என்று சொல்லி விட்டு, கடுப்பில் “கலெக்டர் ஆர்டர் போட்டிருக்கார்” என்று நர்ஸை நக்கலடித்துச் சொல்லுமிடம் அமர்க்களம். அதைப் போலவே சுடுவின் பாஸ்போர்ட் குறித்து அதிகாரிகள் விசாரிக்கையில் பாஸ்போர்ட் இல்லாமலேயே தன் கணவர் கராச்சியிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்ததைச் சொல்லும் காட்சியும் வெடிச்சிரிப்புதான்.

பீயும்மாவின் தோழியான மஜீதின் உம்மா மஜீதிடம் மருத்துவமனையில் வைத்து, “சுலு என் வீட்டில்தான் இருப்பான்” என்று சொல்லும்போதும் சரி, “ஒரு அம்மா இப்படி சொல்லக்கூடாதுதான். ஆனாலும் இப்படிக் ‘கிடப்பில்’ இருந்தாலாவது என் மகனுக்கு என் தேவை இருந்திருக்குமே?!” என்று உருகுகையிலும் சரி, நாடகத்தன்மைக்குள் அடங்காத அற்புத உடல்மொழி.

மஜீதின் தகப்பனாகச் சாந்தம் தழுவும் அந்த முகத்தோடு சாமுவேலிடம், ‘ஃபாதர்’ என்று சிரித்துக் கொண்டே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சியிலும் சரி, மகன் வீடு வந்ததறிந்து வீட்டை விட்டு இறங்குகையில் ‘உனக்கு காசு ஏதாவது வேணுமா?’ என்று மனைவியைப் பார்த்துக் கேட்கும் காட்சியிலும் சரி, கடைசியில் மகனோடு படியேறி வீடு வந்து மனைவியைக் காணும் பொழுதில் உதிர்க்கும் சிரிப்பிலும் சரி, அப்துல்லாக்கா அசத்துகிறார்.

மனிதர்களுக்குள் வேறுபாடு காட்டக்கூடாதென்ற மாபெரும் தத்துவத்தைத்தான் இஸ்லாம் போதிக்கிறது. அதனால்தான் மதத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ எவ்வகையிலும் தொடர்பில்லாத சாமுவேலுக்காக மஜீதின் உம்மாவால் சொந்த மகனைப் போல அன்பைச் செலுத்த இயலுகிறது. சாமுவேலுக்காகத் தர்ஹாவில் சென்று ஓதி வருவதும், சாமுவேல் பாட்டி இறந்ததறிந்து வீட்டில் ஃபாத்திஹா ஓத ஏற்பாடு செய்து ‘யத்தீம்’களுக்கு உணவளிப்பதுமென்று மஜீதின் உம்மா பெறாத மகனுக்காக அன்பைப் பொழிகிறார். வஹாபிகளாக இருந்திருந்தால் காஃபிரை வீட்டுக்குள் ஏற்றியதற்கு ஊர்விலக்கே செய்திருக்கக்கூடும். நல்லவேளையாக மஜீதின் உம்மாக்களே நம்மில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரும் ஆறுதல்.

கால்பந்தாட்டத்தில் ஆட்டம்‌ முடிந்து விடைபெறுகையில் ஜெர்சியை மாற்றிக்‌ கொள்வதென்பது நல்லெண்ணத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான குறியீடு. கால்‌ குணமாகி சாமுவேல் நாடு திரும்பும் நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து சாமுவேல் மஜீதை அரவணைக்கையில் சாமுவேலும் மஜீதும் தங்களது மேலாடைகளை மாற்றிக் கொள்ளும் காட்சியின் மூலமாக அவர்களுக்கிடையிலான நெருக்கமான உணர்வை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கும் ஸக்கரியாவின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதைப் போலவே அதிகாரத்தின் வெற்றுக்கூச்சலையும் மிரட்டலையும் கூட எளிதாகக் கடந்து போய் விடக்கூடிய நகைச்சுவைக் காட்சியாகக் காவல் நிலையத்தில் மஜீதை விசாரிக்கும் காட்சியை உருவாக்கியிருக்கும் சாமர்த்தியத்தையும்.

‘ஏதுண்டடா கால் பந்தல்லாதே?’ பாடலும் இசையும், “பந்து கொண்டொரு நேர்ச்ச” என்ற பாடல் வரிகளும், மலபாரின் கால்பந்தாட்டத்தின் மீதான நேசக்கிறுக்கை வேறெப்படித்தான் சொல்ல முடியும்? இதைப் போலவே ரெக்ஸ் விஜயன் இசை அமைத்துப் பாடியிருக்கும் ஹரிநாராயணன் வரிகளில் அமைந்த, ‘செறுகத போல ஜென்மம் சுருள் அழியுன்னதெங்கோ’ பாடல் இடம் பெறும் இடமும் காட்சிப்படுத்தலும் அற்புதம். அன்வர் அலி, ஷாபாஸ் அமான் ஆகியோரின் வரிகளில் ரெக்ஸ் விஜயனின் இசை படத்தின் தன்மையறிந்து வெளிப்படுகிறது. ஷைஜூ காலிதின் அற்புதமான ஒளிப்பதிவும், நௌஃபல் அப்துல்லாவின் கச்சிதமான எடிட்டிங்கும் ஸக்கரியாவுக்குப் பெரும் துணை.

பொதுவாக மலப்புரம் அல்லது மலபார் தொடர்பான படங்களில் வரும் இசுலாமிய கதாபாத்திரங்கள் இசுலாமிய வாழ்க்கையை விமர்சித்தோ அல்லது ஏதேனும் ஹாஜியார் நான்காவது திருமணம் செய்யக் காத்திருப்பது குறித்தோ அல்லது இசுலாமியர்களின் தேசப்பற்று குறித்தோ இயல்பு வாழ்க்கை நிலையிலிருந்து சற்று அந்நியப்பட்ட கதைகளையே இயல்பானது போல பேசிக் கொன்டிருந்தன. இசுலாமிய வாழ்க்கை முறையே கூட எத்தனையோ படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இத்தனை இயல்பான ஒரு இசுலாமியக் குடும்பத்தின் கதை சொல்லப்பட்டதில்லை. மலபார் பிரதேசத்தில் சிறிய நகரங்களில் இசுலாமியர்களே பெரும்பான்மையாக வசித்தபோதும் கூட மத வேறுபாடின்றி அவர்கள் பிற மதத்தவரோடு இயல்பு வாழ்க்கையில் ஒருங்கிணைந்து இருப்பதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஸக்கரியா. மொழி, மதம், இனம் சார்ந்த கிறுக்குகள் தலையில் ஏறாத வரையில் மனிதர்களுக்குள் இருக்கும் நன்மை போற்றப்பட்ட வேண்டிய ஒன்றுதானே?!

மனிதத்தின் மேன்மையில் நம்பிக்கை இருப்பவர்கள் மறக்காமல் இந்த ‘சுடானி’யைப் பார்த்து விடுங்கள். மனநெகிழ்வுக்கு நான் காரண்டி!!

– ஆசிப் மீரான்