Shadow

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

Jigina-work-Super-Deluxe-3

எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது?

ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: ‘மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் குழம்பி, உள்ளம் உந்த மும்பை ஓடி, பெண்ணாக மாறி, பிழைப்பிற்காக அந்தப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்து, தான் செய்த செயலோட தீவிரத்தை உணரும் தருணத்தில் பாவமன்னிப்பு வேண்டி, தன் வீடடைந்து, கடைசியில் தான் மட்டும் தான் புறக்கனிக்கப்பட்டவன் அப்படிங்கற சுயபச்சாதாபத்தை விட்டு வெளிய வந்து தன் மனைவியும் மகனுமே கூட அவங்கவங்க வகைல புறக்கணிக்கப்பட்டவங்க தான் அப்படிங்கறத உணரும் இடம் – ஒரு பெரிய ஆர்க். இந்தப் பாடுகள், இது எல்லாத்தையும் தாண்டித் தன்னை ஒரு தந்தையா கணவனா உணரும் இடம், இந்தப் பயணத்தின் முடிவுல தன்னை ஒரு ஹ்யூமனா உணரும் அந்த அகவிடுதலை தான் ஷில்பாவின் அத்தியாயம்.’

ஒரு நிமிடம் தலை சுற்றிவிட்டது.

சின்ன விஷயம் புரியாத பாவியாகிட்டோமே என ஒரே கவலையாகிவிட்டது. நொடிக்கு நொடி பாரம் பெருஞ்சுமையாய் அழுத்தத் தொடங்கிவிட்டது. சப்-வேயின் மங்கலான ஒளிக்குள் இருட்டில் பித்து பிடித்தது போல் இறங்கி நடக்கிறேன் (இருளுக்குள் மூழ்குகிறேன் என்பதும்; படிகளில் இறங்குவது – எனது நம்பிக்கைகள் சரிகிறது என்பதும் இங்கே குறியீடு. நானே கண்டுபிடிச்சது. என்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஆழ்ந்த அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.)

“திருநங்கைகளுக்கும் அகவிடுதலையளிக்கும் இயக்குநரின் அந்த மனம் இருக்கே அதான் தம்பி கடவுள். சந்தேகப்படாதே! சந்தேகமே லூசிஃபர் (நல்லாயிருக்காமே! இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை – இது என் மைண்ட் வாய்ஸ். ஒரு குறிப்பிட்ட frequency-இல் காதை ட்யூன் செய்தால்தான் அது கேட்கும்) நம்பிக்கை கொள். அற்புதமும் கிருபையும் உண்டாகும்” என கூலிங் கிளாஸ் அணிந்திருந்த மனிதர் சொன்னார். நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். அவர் கையசைத்து என்னை அருகில் அழைத்தார். யுவனின் பின்னணி இசை நின்றுவிட்டது. அங்கு நிலவிய ஆழ்ந்த மெளனம், எனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கான அறிகுறி. அருகில் சென்றதும் குனியச் சொன்னார். அடுத்துத் திரும்பச் சொல்லிடுவாரோ என மனம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. ‘ஆத்தாடி என்ன உடம்பி; அங்கங்கே பச்ச நரம்பி’ என்ற பாடல் திடீரெனக் கேட்கிறது. உடல் பதறத் தொடங்கிவிடுகிறது. மூன்று பதின்வயது சிறுவர்கள் மை தடவிய வெற்றிலையில் அந்தப் பாட்டைப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். தன் வயலின் குச்சியால் அவர் என்னை ஆசிர்வதித்தார். கை தன்னிச்சையாகப் பாக்கெட்டிற்குள் சென்று டெபிட் கார்டை எடுக்கிறது. அவர், “கோ.. கோ..” என்கிறார்.

“அந்தக் கடவுள் சரியான சில்லறைப்பயல்ண்ணே!”

வயலின் சாமிக்கு அருகில், சின்னஞ்சிறு அழகான சிறுவன் இருளுக்குள் இருந்து எட்டிப் பார்த்தான்.

“லே, கொடுக்காபுளி. நீ சும்மா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது.”

“யோவ் கம்னாட்டி. உனக்குத் தான்ய்யா ஒன்னும் தெரியாது. அதனால தான் இங்க உட்கார்ந்துட்டிருக்கோம்.”

“என் மொவன்தேன். அம்புட்டும் விஷம். அவங்கம்மா மாதிரி.”

வயலின் சாமி கண்டிப்பாக ஆணாதிக்கவாதி தான் என ஊர்ஜிதமானது.

“திருநங்கைகளுக்குப் புறவிடுதலையே இன்னும் சாத்தியமாகலையாம். அவங்களுக்கு எதுக்கு அகவிடுதலை? யாருக்கு என்ன வரம் தரணும்னு தெரியாத ஒரு விவஸ்தையே இல்லாத கூறுகெட்ட கடவுள்ண்ணே அந்த ஆள்” என்றான் அந்தச் சிறுவன்.

எனக்கு மறுபடியும் தலை சுற்றத் தொடங்கிவிட்டது.

தொடரும்..

– தினேஷ் ராம்