Shadow

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

Super-Deluxe---Jigina-work-1

சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு முழுப்படத்திற்குமே இது சாத்தியமாக, சினிமா மீது விவரிக்க இயலாக் காதலும், வேலையில் அதீத அர்ப்பணிப்பும் தேவைப்படும். பொதுவாக, கிடைத்த லொக்கேஷனில், லைட் உள்ளவரை படப்பிடிப்பு, பட்ஜெட்டுக்கேத்த இசை என்ற சமரசங்களில் தான் சினிமா உலகம் இயங்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து விலகி, ஒற்றைக் காலில் மீனுக்காகத் தவம் நிற்கும் கொக்கினைப் போல் காத்திருந்து, அடுத்த படத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் எப்படிப்பட்ட சமரசமற்ற இயக்குநர் என்றால், முதற்படத்திலேயே சென்சார் வாங்க படாதபாடுபட்ட அனுபவத்தைப் பொருட்படுத்தாமல், எந்த அலட்டலுமின்றி இன்னும் ‘ரா’வான வசனங்கள் கொண்ட படமாகத் தன் இரண்டாவது படத்தைப் படைத்துள்ளார்.

அந்த உழைப்பிற்கு, ‘தமிழ் சினிமாவில் ஒரு உலக சினிமா’ என்ற அங்கீகாரத்தைத் தூக்கிக் கொடுத்துள்ளனர் சினிமா காதலர்கள். மிக அற்புதமான படைப்பைப் பார்க்கும் அனுபவத்தைப் படம் வழங்கினாலும், இத்தகைய உயரிய பாராட்டுக்குப் படம் தகுதியானதா என்பதுதான் சந்தேகம். முதலில் எது உலக சினிமா என்பது மிகப்பெரிய கேள்வி. More regional is more Universe. பிராந்தியத்தன்மை அதிகமுள்ள படங்களே உலக சினிமாக்கள் என்பது திரைமேதைகள் ஏக மனதாய் ஒத்துக்கொண்ட ஒன்று. இரண்டு, மனிதனின் அக உலகத்தை அசைத்துத் தொட்டுப் பார்ப்பதே கலை ஆகிறது. இந்த இரண்டையும் செய்யாதது ஒரு படைப்பு மட்டுமே! அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நல்ல படைப்பு, கலையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இங்கு சினிமாவின் அசலான நோக்கம் என்பது entertain செய்ய மட்டுமே என்று சுருங்கிவிட்டது. சூப்பர் டீலக்ஸ், அதற்கு எந்தக் குறையும் வைக்காமல் அவ்வேலையைச் செவ்வன்னே செய்துவிடுகிறது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை செல்லிங் பாயின்ட்டாக அவர்கள் தொடக்கம் முதல் முன்னிலைப்படுத்தி வந்தது விஜய் சேதுபதியின் ஷில்பா எனும் பாத்திரத்தைத்தான். விஜய் சேதுபதி தனது நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரளிக்கத் தவறிவிட்டார். அது போகட்டும், அந்தப் பாத்திர வடிவமைப்பையே ஏனோ தானோ என்றுதான் படைத்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. படத்தின் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களைப் பற்றி கார்க்கி பவா குறிப்பிடுகிறார். பார்வையாளரான கார்க்கி, ஷில்பாவைப் பெண்ணாகப் பார்க்கிறார். தியாகராஜன் குமாரராஜா ஷில்பாவை எப்படிப் பார்க்கிறார்?

ஷில்பாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்ற காட்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். இயக்குநர், அந்தக் கதாபாத்திரத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதில்தான் சிக்கல். படத்தின் போலித்தன்மையும், இயக்குநரின் திருநங்கைகள் மீதான அருவருப்பும் அப்புள்ளியில் தான் வெளிப்படுகின்றன. ரம்யா கிருஷ்ணனுக்கும், சமந்தாவுக்கும் தன் தரப்பு நியாயங்களைச் சொல்லுவதற்கு இடமளித்துள்ள இயக்குநர், ஷில்பாவிற்கு அந்த இடத்தைத் தரவேயில்லை. பெர்லினுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாதென வசமாய்ச் சிக்கிக் கொண்ட வேம்பு பதறுகிறார்; ஆனால், அப்படியான எந்த நிர்பந்தமுமில்லாத ஷில்பா வலுவான எதிர்ப்பைப் பெர்லினிடம் காட்டியிருக்க மாட்டார்.

உணவு, உடை, உறைவிடம், உற்றார், உறவினர் என அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் மிகவும் போராட்டமானது. ஏழு வருடங்கள், தன்னந்தனியாக இந்த உலகில் survive செய்த ஷில்பா, ஒரு எஸ்.ஐ.-இன் சபலத்திற்கு அடிபணிவார் எனக் காட்டியிருப்பது அருவருக்கத்தக்கக் காட்சியமைப்பு. கண்டனங்களுக்கு உரியது. குறிப்பாக, திரும்பி வரும் ஷில்பாவை அவரது வீட்டிலும் பெரும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றும் கொள்கிறார்கள் (காயத்ரியின் அண்ணன் தவிர்த்து). பெர்லினுக்கும் இயக்குநருக்கும், ‘திருநங்கைகள் கூப்பிட்டா வரப் போறாங்க’ என்ற இளக்காரமான மனநிலை. ஷில்பாவைப் பெண்ணாகப் பார்க்கக் கார்க்கியால் முடிந்தது போல், இயக்குநரால் ஏன் முடியவில்லை? ஏனெனில், இயக்குநரின் வண்ணமயமான உலகில் கதாபாத்திரங்கள் எல்லாம் வெறும் பொம்மைகள். சோஃபாவும் ஒன்றுதான், ஷில்பாவும் ஒன்றுதான். அந்தக் கதாபாத்திரத்திற்கு மனசு உண்டா இல்லையா என்பது தேவையில்லாதது, ஃப்ரேமில் ஷில்பா என்ன கலர் புடவையில் வரவேண்டும் என்பதே அவருக்குப் பிரதானம்.

ஷில்பாவை, வழுக்கையாக அசிங்கமாகக் காட்டவேண்டும் என முடிவெடுத்துவிட்டார் இயக்குநர். அதற்கான சீன் செலக்‌ஷன் என்று ஒன்று உண்டு அல்லவா? ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பி வந்ததும், காயத்ரி முன் தன் விக்கைக் கழட்டிவிட்டுப் புடவை கட்டுவதில் முனைப்பாகிறார். காயத்ரியிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை, மன்னிப்புக் கோரும் ஒரு பார்வை இல்லை, மன்னிப்புக் கூட வேண்டாம், சக ஜீவனாய் மதித்து ஒரு புன்னகை? ம்ஹூம்.. ஷில்பா, இயக்குநரின் புடவை கட்டப்பட்ட ஒரு ஜடமாகவே அந்தக் காட்சியில் இருப்பார். புடவைக் கட்டி முடித்ததும், ‘நான் அழகா இருக்கேனா? அழுவாத, ஒரு பொண்ணா உன் கஷ்டம் எனக்குப் புரியுது’ எனச் சொல்வார். அந்தக் காட்சியின் கனத்தைக் காயத்ரி அழகாக வெளிப்படுத்தியிருப்பார். ஷில்பாவோ அங்கேயும் சொதப்பல். விஜய் சேதுபதியால் அவ்வளவு தான் முடிந்ததா அல்லது இயக்குநர் போதும் என கட் சொல்லிவிட்டாரா தெரியவில்லை. ஷில்பா புடவை கட்டும்பொழுது வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கேமிரா கோணங்களோ அருவருப்பின் உச்சம். தேவைக்கு அதிகமாகவே அந்தக் காட்சி திரையில் நீளும்.

திரையில், எந்தக் காட்சியை எவ்வளவு நேரத்திற்கு எப்படிக் காட்டவேண்டும் என்ற பிரக்ஞையே ஒருவரைப் படைப்பாளனா, கலைஞரா என்பதைத் தீர்மானிக்கும். காவல் நிலையத்தில், ஷில்பா முட்டிப் போடும் அளவுக்குக் காட்டப்பட்டிருக்கும் வக்கிரமான டீட்டெயிலிங் தேவையற்றது. சேட்டுப் பொண்ணு ஒரு ஏலியன் எனக் காட்ட எடுத்துக் கொண்ட அதே கால அளவு போதும், பெர்லின் ஒரு காமாந்தகன் என்பதை அழுத்தமாகப் பார்வையாளர்கள் மனதில் பதிக்க. ஆனால், பெர்லினின் வக்கிரமான மனநிலையைத் திகட்டுமளவு காட்டவே ஒரு கல்நெஞ்சம் தேவைப்படும்.

பிழைப்பிற்காகத் திருநங்கைகள் பிச்சையெடுப்பார்கள் என்பது இயக்குநர் வலியுறுத்த விரும்பும் sub-text. அந்தக் காட்சியை, ஷில்பா தன் மகனுக்கு டெமொ காட்டி, ‘சூப்பர்ப்பா நீ’ எனப் பாராட்டு வாங்கும்படி காட்டியிருப்பார். தன் மகனைத் தொலைத்த பாரத்தைப் பெருஞ்சிலுவையாய்ச் சுமப்பார் ஷில்பா. அதில் திருப்தியுறாத இயக்குநர், அற்புதத்திடம் ஷில்பாவைப் பாவமன்னிப்பு கேட்க வைத்திருப்பார். அந்தக் காட்சியின் sub-textஆன, திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்தி விற்பார்கள் என்பது விஷமத்தனமானது. இந்த விஷமத்தனமும், காமாந்தகரான எஸ்.ஐ.க்குப் பெர்லின் என்ற பெயர் சூட்டலும், இயக்குநரின் control-ஐ மீறி யதேச்சையாக நடந்த ஒன்றில்லை.

படத்தின் ஒவ்வொரு வசனமும், இசைத்துணுக்கும், வண்ணக்கலவையும், தியாகராஜன் குமாரராஜாவே பார்த்துப் பார்த்துச் செதுக்கியது. ஆகவே..

ஏப்ரல் 1 – தின நல்வாழ்த்துகள்.

தொடரும்..

– தினேஷ் ராம்