
திரெளபதி விமர்சனம்
தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 'திரெளபதி அம்மன்' கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம்.
பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் பட...


