Shadow

திரெளபதி விமர்சனம்

draupathi-movie-review

தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் ‘திரெளபதி அம்மன்’ கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம்.

பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் படம் பேசுவது போல் ஒரு திரைக்கதை அமைத்து, எதிர்ப்புக் குரல்களை அமுங்கச் செய்துள்ளது இயக்குநரின் சாமர்த்தியத்தைப் பறைசாற்றுகிறது. இயக்குநரின் மனதுக்குந்த அரசியலை வறட்டுத்தனமாய் வெளிப்படுத்தாமல், ஒரு கதையினூடே சுவாரசியப்படுத்தி இருப்பது ஆறுதலளிக்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வராமலேயே, அவர்களின் சம்மதம் இல்லாமலேயே, யாருக்கு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் திருமணமாகிவிட்டதென பத்திரமும், நிலத்தை உரிமையாக்கும் பத்திரமும் மோசடியாகத் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அரசு இயந்திரத்தின் லஞ்சலாவண்யத்தைப் பயன்படுத்தியோ, அல்லது வழிக்கு வராத அரசு ஊழியர்களை மிரட்டியோ, ஒரு கும்பல் இம்மோசடியை ஒரு தொழிலாகவே செய்து வருவதாக இயக்குநர் மோகன் பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இப்படத்தின் கதை இக்குற்றத்தை மையப்படுத்தியே!

செய்யாத கொலைகளுக்காக, சாதி வெறியில் ஆணவக் கொலை செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறுகிறார் ருத்ர பிரபாகர். பெயிலில் வரும் அவர், தன் மனைவியின் சபதத்தை நிறைவேற்ற நினைக்கிறார். பாஞ்சாலியின் சபதத்தால் அன்று (!?) மண்ணாசை கொண்ட கெளரவர்கள் அழிந்தார்கள். இப்படத்து திரெளபதியின் சபதத்தால், புறவாசல் வழியாக மண்ணை அபகரிக்க நினைத்த கோலா நிறுவனத்தின் சதி முறியடிக்கப்படுகிறது. கோலா நிறுவனத்துக்கு மண்ணைத் தாரை வார்க்க, பெண்ணைக் கேடயமாகப் பயன்படுத்துகிறான் வில்லன். இப்படியாகப் பின்னப்படும் சதியை ருத்ர பிரபாகரன் எப்படி அம்பலப்படுத்தி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றுகிறார் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.

மீசையை முறுக்கும் வேலையை அழகாகச் செய்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி. டுலெட், அசுரவதம், கும்பளாங்கி நைட்ஸ் போன்ற படங்களில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஷீலா ராஜ்குமார், இப்படத்தில் திரெளபதியாகச் சீறியுள்ளார். பெண்ணை மையப்படுத்திய படத்திற்குக் கச்சிதமான தேர்வு என நிரூபித்துள்ளார். மருத்துவராக லேனாவும், பத்திரிகையாளராக செளந்தர்யாவும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர்.

போலிப் பத்திரப் பதிவிற்கு எதிரான பொதுநல வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்குரைஞர் குருதேவாகக் கருணாஸ்க்கு ஏற்ற பாத்திரத்தை வழங்கி, படத்திற்குக் கூடுதல் மைலேஜை நாசூக்காகக் கூட்டியுள்ளார் இயக்குநர் மோகன். ‘குரு’தேவ் என்பதுமே காரணப் பெயரன்றி வேறென்ன? அதுவும் கொலை பாதகச் செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் அவரது வன்மம் மிகவும் அருவருப்பானது.

திரெளபதியின் மிரட்டல் தொடரும் என அடுத்த பாகத்திற்கான அச்சாரத்தோடு இயக்குநர் முடித்துள்ளார். கிரெளட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முதலீடு குறைவெனினும், ஜுபினின் இசையும், மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவும், தேவராஜின் படத்தொகுப்பும், மேக்கிங்கில் எந்தக் குறையும் ஏற்படாதவண்ணம் கச்சிதமாக உதவியுள்ளன.  முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக, பத்திர மோசடி என்ற கருவின் பின்னால் தனது சார்பரசியலை நைச்சியமாக மறைத்துள்ளார் மோகன்.