
காந்தாரா – மனக்குழப்பமும், வாழ்வின் தரிசனமும்
ஒரு தயக்கத்துடன் இருக்கும் நாயகன் (Hesitant hero) வகை கதைகளில், நாயகன் தனக்கு விதிக்கப்பட்ட பொறுப்பை/பதவியை, அதுவும் எளிதாக அவனுக்குக் கிடைக்கக் கூடிய சூழலில், அதன் பிரம்மாண்டத்தின் மீதான ஒவ்வாமை அல்லது பயம் காரணமாகத் தவிர்த்து ஓடுவான். அதன் நேர் எதிர் முனையான கொண்டாட்டத்தின் மீதோ அல்லது இதை மொத்தமாக மறுதலிக்கும் வேறு தொழிலின் மீதோ அல்லது பிரியமான வேறு வாழ்க்கை மீதோ விருப்பு கொண்டு, அவ்வோரமாக ஒதுங்கிப் போக நினைப்பான். ஆனால் காலம் அவனைச் சூழலுக்குள் தள்ளிவிடும். எதைக் கண்டு உள்ளூர பயந்து விலகினானோ, அதிலேயே காப்பானாக வந்து நிற்கச் செய்யும்.
தேவர் மகனில் கமல் இப்படி நிலசுவன்தார் கால மதிப்பீடுகளைத் தாங்கி நிற்கும் தனது கிராம வாழ்வை வெறுத்து நகரத்தை முழுதாக நேசிப்பார். நகர மதிப்பீடுகளைச் சுவிகரித்து கொண்டதன் அடையாளமாக வேறு கலாச்சாரக் காதலியும், கார்பரேட் பாணி ஓட்டலுமென நவீனமாக தன் வாழ்வைத் திட...




