நையப்புடை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம்.
படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது.
'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி.
நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சா...