Shadow

“ரசிகர்கள் மீது பெரிய அழுத்தம் ஏற்படுகிறது” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன்

‘ரெட் லேபிள்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். ஃபிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த ‘ரெட் லேபிள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

படத்தின் கதாசிரியரான பொன். பார்த்திபன், “இந்தப் படக்கதையைப் படமாக எடுக்கும் போது முதலில் எதெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து தவிர்க்க வேண்டியவற்றை எல்லாம் தவிர்த்தோம். ஆனால் ஆதாரமாக இருக்கும் ஒருவரியை மட்டும் அதன் பொறியை அக்கினிக் குஞ்சு இருப்பது போல் அதன் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டோம். 2023 இல் கதை விவாதமாகத் தொடங்கப்பட்டு 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சிலிருந்து கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன், “இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம். ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருக்கிறது மகிழ்ச்சி” என்றார்.

படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன், “அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள். முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என்று ஆள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன், நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். அந்த வழியில் தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள் தான் கதையையும் படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள். ஷாட் என்ன என்பது கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்.

இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில் தான் பல சினிமாக்காரர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே ஆர் ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள். சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்தப் பணத்தில் தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும்” என்றார்.

படத்தை விநியோகம் செய்து வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பேசிய குகன், “ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால் முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது. அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி சிறை, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் ஓடின. இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால் 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகு தான் வாய் வழியாக பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.

முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன. எனவே கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன. எனவே பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது .

இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும். ஆனால் இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள் தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது, சினிமா டிக்கெட் மட்டுமல்ல பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள். 20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கார்ன் 700 ரூபாய் வரை விற்கிறார்கள். படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் கொடுக்கிற காசுக்குச் சரியாக படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். எனவே படத்திற்கு கதை முக்கியம். இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.