Shadow

வருணன் – தண்ணீரின் அவசியமும் சாபமும்

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்’ ஆகும். ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகை கேப்ரியல்லா, ”வருணனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். நாம் அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும், ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தைப் பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி இருக்கிறார். இது போன்ற குழுவில் பணியாற்றி நான் ஒன்றை மட்டும் தான் கற்றுக் கொண்டிருக்கிறேன் ‘நெவர் கிவ் அப்’. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது வருணன் திரைப்படம்” என்றார்.

நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், ”வருணன் படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நினைவில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இரண்டு பயங்களை வென்றிருக்கிறேன். முதலில் எனக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இந்தப் படத்தில் 120 அடி உயரத்தில் சண்டைக் காட்சிகள் நடித்திருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் என்றாலும் பயம். அவருடைய இயக்கத்திலும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காகச் சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கும், ஸ்ரீதர் மாஸ்டருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி, ”இந்தப் படத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இடம் பெறுகிறது. அந்தக் காட்சிக்கு பின்னணி இசை அமைப்பது கடும் சவாலாக இருந்தது. இந்தக் காட்சிக்காக இயக்குநரும் நானும் இணைந்து மூன்று நாட்கள் உழைத்தோம். மிகச் சிறப்பாக அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. இந்தக் காட்சி பேசப்படும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் ஜெயவேல் முருகன், “நான் கே.பி. சார் ஸ்கூலில் இருந்து வந்தவன். அன்பு சார் யுனிவர்சிட்டி. அவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்தத் திரைப்படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. இது கன்டென்ட் மூவி. தண்ணீரைப் பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த சத்யராஜிற்கு நன்றி. இந்தப் படத்தின் கதையை வருண பகவானின் கோணத்திலிருந்து சொல்லி இருக்கிறோம்.

ஐம்பூதங்களை பற்றிய ஒரு கதை தான் இது. நாம் என்றைக்கு தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்த இயற்கையின் சாபம் நம்மைத் துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்தப் படத்தின் டேக் லைன், ஒன் லைன்.

இதில் தண்ணீரைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். தண்ணீர் கேன் சென்னைக்கு 95 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதன் பிறகு அது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. தண்ணீர் சேமிப்பு குறித்து எங்களால் முடிந்தவரை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சனைகளை பற்றியும் சொல்லி இருக்கிறோம். நான் என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களைத் தழுவித்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன்” என்றார்.