32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன்” – இயக்குநர் வெற்றிமாறன்

Dinesh R சேலம் Published: 14/03/2026 4 நிமிட வாசிப்பு Updated: 16/03/2026 சினிமா
எழுத்து அளவு:

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில், படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பித் தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு, எல்லோரிடமும் பொதுவாகச் சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றித் தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்தப் பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால்தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.

இந்தப் படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.

இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்தக் குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராகச் சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர் – இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராகச் சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம்.

இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மைச் சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.