
யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி, சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்’ ஆகும். ‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
நடிகர் ஜெயப்பிரகாஷ், ”இப்படத்தின் இயக்குநர் எடுத்திருக்கும் கதை தண்ணீர் கேன். இந்தப் பிரச்சனை 10 வருஷத்திற்கு முன்னாலும் இருந்தது இன்னும் 50 வருஷத்திற்கும் இருக்கும். இப்படத்தின் கதை அவுட்டேட்டட் அல்ல. அனைவருக்கும் நெருக்கமான கதை தான். இந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ராதாரவி, ஜீவா ரவி, துஷ்யந்த் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கன்டென்ட் அனைவருக்கும் ரீச் ஆக வேண்டும் என்றால் இவர்களைப் போன்ற சிறந்த நடிகர்களால் தான் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும். கதாசிரியர்கள் கதாபாத்திரத்தை எழுதினாலும், அதை உள்வாங்கி திரையில் நடிக்கக்கூடிய ஆற்றல் மிக்க நடிகர்கள் தேவை. இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் வழங்கி இருக்கிறார்.
காசை கொட்டிக் கொடுத்து ரிச் ஆக எடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று இல்லை. இந்தக் குழுவினரிடம் பணம் இல்லை. ஆனால் நிறைய புத்திசாலித்தனம் இருந்தது. அத்துடன் தன்னம்பிக்கையும் இருந்தது. சில ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை துளி அளவு கூடக் குறையவில்லை. இப்படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. இப்படத்திற்காக பாடலை பாடி ஒத்துழைப்பு வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும், சைந்தவிக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் உச்சகட்ட சண்டைக் காட்சி நிச்சயம் வரவேற்பை பெறும். இது சின்ன பட்ஜெட் படம் அல்ல என்பதை இந்தக் காட்சி நிரூபிக்கும்” என்றார்.
நடிகை ஹரிப்பிரியா, “எனக்கு கே.பி. சாரை மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய உதவியாளரான ஜெயவேல் முருகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் யுவனின் தீவிர ரசிகை. நான் நடித்திருக்கும் காட்சிக்கு அவர் பாடியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
நடிகர் கிருஷ்ணா, ”இது எங்களுடைய ஃபேமிலி ஃபங்ஷன். என் தம்பி சங்கர் நாக் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். என்னைப் பொருத்தவரை சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம். ஓடாத படம் இந்த இரண்டு தான் இருக்கிறது. நல்ல கதை என்றால் அனைவரும் ஆதரிப்பார்கள். கதை நன்றாக இருந்தால் தான் ராதாரவி நடிப்பார். இந்தப் படத்தில் ராதாரவியும் நடித்திருக்கிறார். நான் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது” என்றார்.
நடிகர் ராதாரவி, ”இந்தக் காலத்தில் எவ்வளவு வேகமாக இயங்க வேண்டும் என்பதை இந்தக் குழுவினரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். நான் இந்தப் படத்தில் இயக்குநரின் தந்தைக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் பெயர் கருணாநிதி. எனக்கு மிகவும் பிடித்த பெயர் இது. அன்புச்செழியனின் அலுவலகத்தில் பணியாற்றுபவர். நான் அந்த வழியாகத் தினமும் கடந்து செல்வேன். அந்த நேரத்தில் கருணாநிதி இருந்தால் அலுவலகத்தில் அன்புச்செழியன் இருக்கிறார் என்று அர்த்தம்.
இப்படத்தின் ஹீரோ ஜெயப்பிரகாஷின் மகன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. இதில் பணியாற்றி இருக்கும் அனைவரும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்றார்கள். நான் கேமரா முன்னால் நன்றாக நடிப்பேன். அனைவரையும் பற்றிக் குறிப்பிட வேண்டும் என விரும்புவேன். இந்த விஷயத்தை டாக்டர் கலைஞரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். சில முறை அவர் என் பெயரைக் குறிப்பிட மறந்து விடுவார். எனக்குக் கோபம் வரும். ஆனால் பேசும்போது இதைக் கவனித்து விட்டு ‘தம்பி ராதா ரவி குறிப்பிட்டது போல்..’ எனச் சொல்வார். அவரிடமிருந்து இது போன்ற நல்ல விஷயங்களை மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் நன்றாக இருக்கும். நான் இன்னும் இந்தப் படத்தை பார்க்கவில்லை இருந்தும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தண்ணீர் கஷ்டம் கடுமையாக இருக்கிறது. அதை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும்” என்றார்.