Search

சுவர்க்கம்

முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள். இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள். மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை அலைகளை அனுப்பி அவர்களை தொந்தரவு செய்யாதிருந்தால் அவர்க்ள அமைதியாக இந்தப் படிநிலையைக் கடந்து விடுவார்கள்.

ஐந்தாவது படிநிலை ஓரளவு பிரகாசம் பொருந்திய இன்பகரமான உணர்வுநிலை என்று கூறப்படுகிறது. தமக்கு புண்ணியம் சேர்க்கும் நோக்குடமன் அல்லது புகழ்சேர்க்கும் விருப்புடன் அல்லது தமது ஆத்ம விமோசனத்திற்காக பொதுமக்களுக்குப் பயனளிக்கக்கூடிய நற்காரியங்களைச் செய்தவாறே பூவுலக வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர்களுக்குரிய இடம் இது. தங்களால் மேலும் ஆன்மீக உயர்ச்சி பெறமுடியும் என்ற நினைவு இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆறாவது படிநிலையில் உள்ளவர்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைந்த ஆத்மாக்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் வாழ்ந்தபொழுது தமது திமை, அறிவு, செயல்வனமை ஆகியவற்றை சுயநல நோக்கோடு பயன்படுத்திய காரணத்தால் ஒருகுறுகிய காலத்துக்கு இங்கு தங்கிய பின்னரே மேலே செல்வர்.

ஏழாவது படிநிலை மிக உயர்ந்த நிலை. அறிவாளிகளுக்கும் ஆன்மீக உயர்வு பெற்றவர்களுக்கும் உரிய இடம் இது. இவர்கள் உலோகாயதிகளாக (Materialists) இருந்த காரணத்தால் இங்கு சிலகாலம் தங்கி, தங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்வார்கள். 

காமலோகத்தில் நமது கடந்த பிறப்பின் ஆசைகள் மட்டுமே அழிக்கப்படுகின்றன. கர்மவினைகளில் இருந்து நாம் விடுபடுவதில்லை. அடுத்த பிறப்புவரை நமது மூன்றுவகை கர்மாக்களும் ஒருசெயலற்ற நிலையில் நிறுத்திவைக்கப்படுகின்றன. காமலோகத்தைக் கடக்கும்பொழுது மனிதனின் மனசும் அதனால் வளர்க்கப்பட்ட காமரூபமும் அழிந்து விடுகின்றன. காலோகத்தை விட்டு சூட்சும உலகின் இறுதிப்பகுதியாகிய “தேவஸ்தான்” எனப்படும் சுவர்க்கலோகத்தை மனிதன் அடையும்பொழுது, ஆத்மா, புத்தி, மனம் ஆகிய உயர் அம்சங்களுடனேயே அவன் அங்கு செல்கின்றான். இந்த நிலையை இந்துக்கள் “தேவஸ்தான்” என்றும் “சுவர்க்கம்” என்றும், பௌத்தர்கள் “சுகாவதி” என்றும், கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் , பார்சிகள் ஆகியோ “மோட்சம்” என்றும், பிரம்மஞானிகள் “தேவச்சன்” என்றும் விவரிக்கின்றனர். 

Heaven


மனிதனின் சூட்சும சரீரம் காமலோகத்திலிருந்து விடுபடும்பொழுது அழிந்துவிடுகிறது. இப்போது மனிதனின் பிரக்ஞை அவனுடைய மனோசரீரத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கின்றது.

தேவஸ்தானும் காமலோகம் போலவே ஏழுபடிநிலைகளாக வகுக்கபடுகிறது. ஒவ்வொருவரும் தமது பெறுபேறுகளுக்கேற்ப தமக்குரிய தளநிலைக்குச் செல்வர்.

கீழ்நாலு படிநிலைகளில் மனிதர்கள் தங்கள் மனோசரீரத்தின் கீழ்நிலையில் சஞ்சரிக்கின்றார்கள், உயர் மூன்று தளநிலைகளில் மனோசரீரத்தின் உயர் நிலையில் ஆத்மாவின் சுயஉணர்வு நிலையான ஆனந்த பரவச நிலையில் (bliss) இருப்பர் எனப்படுகிறது.

இறந்தவுடன் எவ்வாறு சில நிமிடங்களுக்கு உணர்வற்ற நிலையேற்பட்டு பின்னர் பிரக்ஞை தெளிவடைகிறதோ அதேபோன்று காமலோகத்தில் இருந்த விடுபட்டு தேவஸ்தானுக்குள் புகுந்து கொள்ளும் பொழுதும் ஏற்படுகிறது.

தேவஸ்தானம் மனிதனுக்கு பிரக்ஞை வந்தவுடன் விவரிக்க இயலாத இன்பமும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றது. அங்கு நிலவும் பிரகாசமும் மன நிறைவும் மனிதன் முன்னெப்பொழுதும் அனுபவிக்காதவைகள். எனவே அவனால் தனது மொழியில் அங்குள்ள நிலையை விவரிக்க இயலாது. ஒவ்வொரு ஆத்மாவும் தனது மனோசக்தியால் ஒரு துயில்கூடு (shell) அமைத்துக்கொண்டு அதனுள் இருந்தபடி இன்பக்கனவுகள் காணப்து போன்ற நிலையில் தேவஸ்தரில் தனக்கென வரையறுக்கப்பட்ட காலம்வரை தங்கியிருக்கும்.

கனவில் நாம் காண்பதெல்லாம் சடப்பொருட்கள்போல் தோன்றினாலும் அவைகள் எல்லாம் எமது எண்ண அலைகளால் தோற்றுவிக்கப்படுவன. அதேபோன்று தான் நமது சுவர்க்கமும் நமது விருப்புகளுக்கேற்ப நமது எண்ணங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. சுவர்க்கம் எப்படியிருக்கும் என்று கர்ண பரம்பரைக்கதைகள் கூறுவதைக் கொண்டு நாம் கற்பனைகளை ஓடவிட்டிகிருக்கிறோம். நமது மனதுக்குக் களிப்பூட்டக்கூடிய வகையிலும் திருப்தி தரக்கூடிய வகையிலேயே அங்குள்ள சூழ்நிலை அமையும். அங்கு மனிதன் தங்கியிருக்கும் வரை நிரந்தரமான மகிழ்ச்சியையும் அமைதியையும் அடைகிறான். அவரவருக்கு ஏற்றவகையில் அவரவருடைய மனப்பாங்கிற்க்கு ஏற்றபடியே சுவர்க்கம் அமைகிறது.




Leave a Reply