Shadow

“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

கோடான கோடி நன்றிகள்..

Director Cheranபசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் “அம்மா உணவகம்” ஆரம்பித்தபோதே நீங்கள் ஏழைகளின் இதயங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டீர்கள். இப்போது “அம்மா திரையரங்கம்” கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குநராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்போன்ற ஆயிரக்கணக்கான இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் தனிப்பெரும் தலைவியாக குடிகொண்டு அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்துவிட்டீர்கள். “அம்மா திரையரங்கம்” என்ற இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்படவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்திலிருந்து நீங்கள் திருட்டு விசிடியை கட்டுப்படுத்தி, எல்லா தயாரிப்பாளர்கள் குடும்பங்களிலும் விளக்கேற்ற முடியும் அம்மா. குறைந்த கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் எல்லா திரைப்படங்களையும் பார்க்கவும், உழைத்து களைத்த மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பங்களுடன் திரையரங்கம் சென்று திரைப்படம் காணவும் நிச்சயம்வழி செய்யும்.

திருட்டையும் தடுத்து, திருட்டுப் பொருட்களை வாங்கி அனுபவிக்கும் மக்களையும் மாற்றி, தமிழகத்தில் புரட்சிகளை செய்யும் நீங்கள் என்றுமே – புரட்சித் தலைவி – என்று நிரூபித்துவிட்டீர்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவதோடு அல்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிசெய்யும். இந்த திட்ட நிறைவேற நீங்கள் இடும் கட்டளைகளை செவ்வனே நேர்மையான வழியில் செய்து முடிக்க நான் என்றும் உங்கள் பின்னால் பணிவோடு நிற்க தயார் அம்மா.

உங்கள் ஆட்சிகாலம்தான் தமிழகத்தின் பொற்காலம். திரையுலகிலிருந்து சென்று முதல்வராகிய நீங்கள் இந்த திரையுலகை வாழவைக்க நன்றியோடு எங்களுக்கு அளித்திருக்கும் இந்த கொடை இலக்கியங்களிலும், இதிகாசங்களிலும் ஏன் இவ்வையகத்தில் பதவிக்கு வந்த யாருமே செய்யாத, அளிக்காத கொடை..

நீங்கள் வாழ்க…

எங்கள் நன்றிகள் எங்கள் கண்களில் கண்ணீர் துளிகளாக வழிகிறது. இனிமேல் எங்களுக்கு நஷ்டம் என்ற ஒன்று இருக்காது. எங்கள் படைப்பை தமிழக மக்கள் அனைவரும் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்தில் நான்.. நாங்கள் ஆனந்தக் கூத்தாடுகிறோம், என்பதே உண்மை.

இந்த சந்தோஷம் தந்த உங்களை நாங்கள் “அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம்… நன்றி.. வணக்கம்…

– சேரன்