Shadow

ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர்.

டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை.

இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வருகிறது.

Adiyum Andamum Ajayஇரண்டாம் பாதி படமோ முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட ஃப்ளாஷ்-பேக் வருகிறது படத்தில். ஒரு கல்லூரி, அங்கு மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர், அக்கல்லூரியில் எவரையும் மதிக்காத பணக்கார மாணவன் ஒருவன் என பலமுறை பார்த்து யூகிக்க முடிந்த கதையாக விரிகிறது. ‘நான் யாருமில்லாத அநாதை’ என நாயகனுடன் சேர்ந்து படம் பார்ப்பவர்களும் வசனம் சொல்கின்றனர். இந்த கிளிஷே காட்சிகளை எல்லாம் தவிர்த்து, ஃப்ளாஷ்-பேக்கை சுருக்கியிருந்தால் இரண்டாம் பாதி தொய்வினைக் குறைத்திருக்கலாம். இடையில் நாயகன் நாயகி டூயட் வேறு வருகிறது. சைக்காலஜிக்கல் த்ரில்லருக்கும் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம் எனப் புரிந்தாலும் ‘6 பாடல் செண்ட்டிமென்ட்’டிலிருந்து ஹோலிவுட் மீளவே மீளாது போல!

ஹிந்தி உச்சரிப்பு தொனியில் வசனம் பேசும் பழக்கத்திலிருந்து அஜய் எனும் கெளரவ் கபூர் முழுவதுமாக மாறவில்லை. ‘தேங்க்ஸ்’ என்ற ஒற்றைச் சொல் வசனம் என்றாலும் நன்றாக அழுத்திச் சொல்கிறார். டாக்டர் கரண் பாத்திரம் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது. திரைக்கதையின் பலவீனத்தால் மிட்டல் அகர்வாலுடனான காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை.

யுவான் சுவாங்படத்தில் ஒலி ஒளியைத் தவிர்த்து மிரட்டும் இன்னொரு நபர் யுவான் சுவாங். அவர் திரும்பிப் பார்க்கும் பொழுது அவரது பாதி முகத்தில் தெரியும் ஒளியும் பாவனைகளும் கூட முதற்பாதியின் விறுவிறுப்பைத் தக்கவைக்க உதவுகிறது. டி.வி. தொகுப்பாளினியாக வரும் கவிதா ஸ்ரீனிவாசனும், ஹாஸ்பிட்டல் சீஃப்பாக வரும் ராமநாதனும் நிறைவாக நடித்துள்ளனர்.

கெளஷிக்கின் முதல் படமிது என சொல்லவே முடியாது. கதாபாத்திரத் தேர்வு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விதம், படத்தின் முதற்பாதி திரைக்கதை, படத்தின் எதிர்பாராத முடிவு என இயக்குநராக கெளசிக் கலக்கியுள்ளார்.