இந்த வருடம் ஜனவரி 25ல் வெளியான விஸ்வரூபம் என்னும் படத்தில் அமெரிக்க பிணை கைதிகளைக் காப்பாற்ற NATO-விற்கு உதவுவது போல் காட்சிகள் வைத்துள்ளார். பயங்கரவாதியாக இருந்தாலும் ஓமர் என்பவன் நெஞ்சில் ஈரமோடு, “அமெரிக்கர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள்” என்கிறான். ஆனால் இயக்குநரான கமல் அமெரிக்கர்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் கட்டிடம் மீது குண்டு போட வைக்கிறார். அமெரிக்க இராணுவத்தினரை தாலிபனுக்கு நிகரான பயங்கரவாதிகளாக காட்டியுள்ளார். யார் மிஸ்டர் பிரசிடென்ட் அவர்? சி.ஐ.ஏ.வை விட ரா என பெரிய அப்பாடக்கரா!? சரி இந்தியா பக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் இருக்கு.. ஏதோ உதவினார் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நியூயார்க் நகரத்தை தனி ஆளாக காப்பாற்றுவது போல் தன்னை முன்னிலைப்படுத்தும் காட்சிகள் வைத்துக் கொள்கிறார். அதுவும் இல்லாமல் அந்த கதாபாத்திரம் ஒரு முஸ்லீம். கிறிஸ்டியன் மிஷனரியில் படிச்ச ஹிந்து ரா அதிகாரி என்றால் கூட போனா போகுதுன்னு ஏத்துக்கலாம். சரி படம் தான ஏதோ ஒன்னு. அதற்காக எஃப்.பி.ஐ.யை எல்லாம் முட்டாளாக காட்டுகின்றார் யுவர் ஹானர். முடில.. அழுது விடுவோம் போலிருக்கு. கமலுக்கு ஏன் இவ்வளவு அமெரிக்க வன்மம் என தெரியவில்லை. அவர் ஹாலிவுட் படம் இயக்கினால்.. இன்னும் கேவலமாக அமெரிக்க பாதுகாப்புத் துறையை சித்தரிப்பார். அமெரிக்க மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பார். கமலை அமெரிக்காவிற்கு வர விடாமல் தடை விதிக்க தாங்கள் தான் மனம் வைக்க வேண்டும். கமலுக்கு அவர் சொந்த நாட்டிலேயே மதிப்பில்லை. வருங்கால இந்தியப் பிரதமர் ஆன செல்வி ஜெயலலிதா அவர்களே கமலின் படத்திற்கு தடை விதித்து இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அனுப்புநர்:
பாரக் ஓபாமா,
ஜனாதிபதி,
வெள்ளை மாளிகை,
1600 பென்சில்வேனியா ஏவ்,
வாஷிங்டன் டி.சி. – 20500,
யுனைடேட் ஸ்டேட்ஸ்.
+1 202-456-1111.
பெறுநர்:
கமல் ஹாசன்,
இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ்,
218 டி.டி.கே. சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
+91 44 24336348.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.
எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவினுள் நுழைய முற்பட்டால்.. எங்கள் சட்டத்தின் நீண்ட கைகளைக் கொண்டு தக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை தாழ்மையுடன் கூறி கொள்கிறோம்.
நன்றி.
அன்புடன்,
பாரக் ஓபாமா.
(பிப்ரவரி 11, 2013)
அனுப்புநர்:
ராபர்ட் முல்லர்,
இயக்குநர்,
எஃப்.பி.ஐ,
935 பென்சில்வேனியா ஏவ்,
வாஷிங்டன் டி.சி. – 20535,
யுனைடேட் ஸ்டேட்ஸ்.
+1 202-324-2000.
பெறுநர்:
பாரக் ஓபாமா,
ஜனாதிபதி,
வெள்ளை மாளிகை,
1600 பென்சில்வேனியா ஏவ்,
வாஷிங்டன் டி.சி. – 20500,
யுனைடேட் ஸ்டேட்ஸ்.
+1 202-456-1111.
மதிப்பிற்குரிய ஐயா,
பாடம்: இந்திய நடிகர்/இயக்குநர் கமல் என்பவரால் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர் குலைய வாய்ப்புள்ளது.
சி.ஐ.ஏ. பற்றி நான் சொல்லி தாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘ஜீரோ டார்க் தேர்ட்டி’ படத்தின் மூலம் குப்பன், சுப்பனுக்கு கூட சி.ஐ.ஏ. பற்றித் தெளிவாக தெரிந்திருக்கும். ஆனால் உலகிற்கே பெரியண்ணன் ஆகிய நம்மை கமல் ஹாசன் என்னும் இந்திய நடிகர்/இயக்குநர் தொடர்ந்து தவறாக தனது படங்களில் சித்தரித்து வருகிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டு கமல் தசாவதாரம் (Ten Avatar) என்னும் படத்தில் 10 வேடங்களில் நடித்தார். நம்ம ‘ஜேம்ஸ் கேம்ரூன்’னே ஒரு அவதார் தான் எடுத்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் போல அதிலொரு வேடம். அமெரிக்க ஜனாதிபதிகள் முட்டாள்கள் என்பது போல் அப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை பள்ளி மாணவன் ஒருவனுக்கு கூட தெரியும், “What is Nacl?” என்ற கேள்விக்கு பதிலை தெரியாத தற்குறியாக புஷ்ஷை கேலி செய்திருப்பார்கள். அது கூட பராவயில்லைங்க யுவர் ஹானர். ‘இந்த அமெரிக்க ஜனாதிபதிகளே இப்படித் தான்.. போர் வெறிப் பிடித்தவர்கள்’ என்பது போன்ற காட்சிகளையும் அழுத்தமாக வைத்திருப்பார். வைரஸ் ஒன்றை அழிக்க ஏன் அதன் மேல் அணு ஆயுதம் போட கூடாது என சப்பாணி போல புஷ் கேள்வி கேட்பார். பாவம்.. புஷ் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாரோ ஒரு மூன்றாம் உலக நாட்டு நடிகர் இப்படித் தான் அமெரிக்க ஜனாதிபதியைக் கிண்டல் செய்வதா?
மீண்டும் சி.ஐ.ஏ. கதைக்கு வருவோம். தசாவதாரம் படத்தில் இரண்டு சி.ஐ.ஏ. அதிகாரிகளைக் காண்பிப்பார்கள். அவர்கள் பெருமாள் கோயிலில் புளியோதரை வாங்கி சாப்பிட வந்த இளைத்த சிவாஜி பட வில்லனான ஆதிசேஷன் போல் பரிதாபமாக இருப்பார்கள். என்ன நக்கல் பாருங்க இந்த கமல் ஹாசனுக்கு? அது மட்டுமா!? அந்தப் படத்தின் வில்லன் யார் தெரியுமா? அவரும் ஒரு எக்ஸ் – சி.ஐ.ஏ. அதிகாரி. க்ரிஸ்டியன் ஃப்ளெட்சர். ஒரு ஜப்பானியனிடம் அமெரிக்க சி.ஐ.ஏ. ஒண்டிக்கு ஒண்டியில் தோப்பது போல மீண்டுமொரு அவமானம். ஆனா சண்டை தொடங்கும் முன், “ஆர் யூ டாக்கிங் வித் மீ்?”ன்னு கேட்டு பின்னால யாரையோ தேடுற மாதிரி ஜப்பானியனை அவமானப்படுத்துவார் பாருங்க மிஸ்டர் பிரசிடென்ட்.. ச்சே ஒவ்வொரு அமெரிக்கனும் பெருமை பட வேண்டிய தருணம் அது. ஆனா என்னப் புண்ணியம்? ஃப்ளெட்சரை திட்டமிட்டு தோற்க வைத்திருப்பார் கமல். அடுத்து 2009ல், ‘உன்னை போல் ஒருவன்’ என்றொரு படத்தில் நடித்தார். பர்வேஷ் முஷ்ரப் தேதி குழப்பத்தில் ஃபோன் செய்து 2009 செப்டம்பர் 10ஆம் தேதியே இரங்கல் தெரிவிப்பார். புஷ் தூக்க கலக்கத்தில் அலெர்ட்டாக இல்லாமல்.. 9/11 சம்பவத்தை நடக்க விட்டு விடுவார் புஷ். அந்தப் பெரும் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்ததிற்கே அமெரிக்க ஜனாதிபதியின் அலட்சியம் தான் காரணம் என்று காட்டியிருப்பார் கமல். இது எத்தகைய தீராத பழி?
தயாரிப்பாளர் பேரி ஆஸ்பெர்னின் அடுத்த படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது. ஒன்று இந்திய முதியோர் இல்லத்தில் தனிமையில் வருந்தும் தந்தை கதாபாத்திரம். மற்றொன்று அமெரிக்க பிரசிடென்ட்டான பாரக் ஓபாமா. ஆம்.. நீங்களே தான் மிஸ்டர் பிரசிடென்ட். நியூக்ளியர் வெப்பன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பை நீங்க நேரடியாக உணர்ந்து, “அமெரிக்கா அணு ஆயுத்தத்தை கீழே வைக்கிறது” என நீங்க மனம் திறந்துவது போல் படமாம். என்னக் கொடுமை பாருங்க இது? அவங்களாம் ஆயுதங்களை கீழ வச்சா தான நாம வைக்க முடியும்? கமலும் அமெரிக்கா வர கூடாது, கமல் படமும் அமெரிக்கா வர கூடாது. அமெரிக்காவே பின்னர் போர்க்களம் ஆகி விடும். 1861 முதல் 1865 கி.பி. வரை நடந்த உள்நாட்டுப் போர் மீண்டும் நடந்தாலும் நடக்கலாம். ஏன்னா 2003-ல் ‘அன்பே சிவம்’ என்றொரு படத்தில் நடித்துள்ளார்.. அதில் அவர் “கம்யூனிஸ்ட்”டாக வருவார். அதில் ஸ்டாலின் போலவே மீசை வச்சிருப்பார் மிஸ்டர் பிரசிடென்ட். டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு நாடே மரண தண்டனைத் தரணும் என்ற பொழுது.. மரண தண்டனைக்கு எதிராக இவர் மட்டும் குரல் கொடுக்கிறார். 2004-ல் அதுக்கும் ‘விருமாண்டி’ன்னு ஒரு படம் எடுக்கிறார். விஸ்வரூபம் பட காட்சி ஒன்றில், நீங்க டி.வி. நியூஸ்ல வந்து, ‘இனிமே பின்லேடனால் பிரச்சனை இல்லை’ன்னு சொல்றீங்க. உடனே உங்களை இழிவுப்படுத்துவது போல் கமல், ‘என்ன ஒரு மனுஷா சாவை திருவிழா போல கொண்டாடுறாங்க’ என பழிப்பா பெண்தன்மை மிக்க தொனில கேட்கிறார்.
இப்படி அவர் அமெரிக்காவிற்கு எதிராக செய்து வரும் அநியாயங்கள், அட்டகாசங்கள் எண்ணிலடங்கா. மிஸ்டர் பிரசிடென்ட் உங்க டைம்-மை கருத்தில் கொண்டு சிலதை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளேன்.
நன்றி.
– ராபர்ட் முல்லர்.
(பிப்ரவரி 7, 2013)
– மணவாளன்