Shadow

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

இந்தியா பாக்ஸ்தான் விமர்சனம்

விஜய் ஆண்டனியின் நடிப்பில் வரும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்கள் போலின்றி இம்முறை நகைச்சுவைக்கு மாறியுள்ளார்.

வக்கீல்களான கார்த்திக்கும் மெல்லினாவும் ஒரே வீட்டில் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். எலியும் பூனையுமாக எதிரெதிர் துருவமாக நிற்கும் இவ்விருவரைக் குறிப்பிடத்தான் தலைப்பை இந்தியா பாகிஸ்தான் என வைத்துள்ளனர்.

படத்தில் காட்டமுத்துவான பசுபதி அறிமுகமானதும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பசுபதி வரும் அனைத்துக் காட்சிகளுமே திரையரங்கு கலகலப்பாகிறது. முக்கியமாக, பத்து பேரை ஓடவிட்டு வெட்டி, ‘டெமோ’ செய்து காட்டும் காட்சியைச் சொல்லவேண்டும். அவரது எதிரணியில் மருதுவாக எம்.எஸ்.பாஸ்கரும், இடிச்சபுளியாக மனோபாலாவும் வருகின்றனர். ஆத்தாவின் அனுமதிக்காக சின் முத்திரை பிடித்து சிலையாகும் மருதுவுக்கு எப்படி எல்லாம் ஆத்தாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது என்பவை ரசிக்க வைக்கிறது.

India Pakistan vimarsanamதீனா தேவராஜனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவும், பின்னணி இசை படத்துக்கு உதவியும் உள்ளது. பில்லா ஜகனின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. யாமிருக்க பயமே படத்துப் புகழ் யோகிபாபு, இப்படத்தில் ஆமகுஞ்சாக வந்து கலக்குகிறார். அவரைப் பார்த்தவுடன் ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். படத்தின் இறுதி காட்சியில், காளியும் தன் பங்குக்குச் சிரிக்க வைக்கிறார்.

அனுஷ்காவை ஞாபகப்படுத்தும் சாயலில் உள்ளார் சுஷ்மா ராஜ். மெல்லினா எனும் பாத்திரத்தில் உறுத்தமல் நடித்துள்ளார். ஆனால், விஜய் ஆண்டனிதான் தன் முந்தைய படத்து முக பாவனையைக் கழட்டி வைக்காமல் இப்படத்திலும் அப்படியே சுமந்து கொண்டு வருகிறார். எனினும் திரைக்கதை ஓட்டத்தில் அது குறையாகத் தெரியவில்லை. கலகலப்பான ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் N.ஆனந். நீதித் துறையின் மெத்தனப் போக்கை அழகாகக் கலாய்த்துள்ளனர்.