Shadow

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ”இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தைப் பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தைத் தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்குத் தேவையான பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனைப் பிரச்சாரமாகச் சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ”தமிழ்ப் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால், அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ்த் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்தக் கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெயிலாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையைச் சொன்னார். அதைக் கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதைப் பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். முழுப் படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்குத் தேவையானதை வாங்கி அற்புதமாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதைப் பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் ‘ஜூம்’ செய்து மக்களுக்குக் காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்குத் தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை ‘ஜூம்’ செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கே ஜி எஃப்’ படத்திலிருந்து என் மீது அன்பு வைத்துத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இப்படம் தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்” என்றார்.

நடிகை பிரீத்தி முகுந்தன், ”நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாகப் பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையைச் சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனைக் காட்சிப்படுத்திக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்‌ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காகச் சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை அபிராமி, ”ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.

ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாகப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதாபாத்திரங்களும் கதையும் எழுதுவது குறைவு. இந்தப் படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.

பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாகக் கையாள்கிறார்கள்.

நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும் டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்துச் சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் சினிமாவில் காமெடி, ஹாரர், ரொமான்டிக் என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்‌ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டைப்பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌

இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.

இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக், ஆக்‌ஷன், கேமரா என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள்” என்றார்.

கிரியேட்டிவ் ப்ரொட்யுசர் அர்ச்சனா கல்பாத்தி, ”எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமைப்படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பைத் தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதைப் போல் பெண்களைத் திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இந்தக் கருத்திற்காகவே இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம்.

இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனைத் தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை அவர் சொன்னால் ரசிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்” என்றார்.

நடிகர் அர்ஜுன், ” ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் சாதுரியமானவர். தனக்குத் தேவையானதை நேர்த்தியாகக் கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏஜிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்தார். அதைப் பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நடிகை அபிராமியுடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனைப் பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். என்றார். காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்குச் சென்றதைப் பார்த்தேன். வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.