32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கருப்பு விமர்சனம் | Karuppu review

Dinesh R சேலம் Published: 15/05/2026 3 நிமிட வாசிப்பு Updated: 18/05/2026 இது புதிது
எழுத்து அளவு:

நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து பெற பேபிகண்ணனின் உதவியை நாடிச் சிக்கிக் கொள்கின்றனர். நான்கு மாதமாகியும் நகைகள் கிடைத்தப்பாடில்லை. கருப்புக்கு மிளகாய் அரைத்துப் பூசி நியாயம் வேண்டுகிறார் பினுவின் தந்தையாக நடித்துள்ள இந்திரன்ஸ். பினுவாக நடித்துள்ள அனகா மாயா ரவியும், இந்திரன்ஸும், தங்களது நடிப்பால் படத்தின் முதற்பாதியை மெருகேற்றியுள்ளனர். குறிப்பாக, இந்திரன்ஸ் தனது அற்புதமான நடிப்பின் மூலம் கலங்கடித்து விடுகிறார்.

நியாயம் கிடைக்குமென சாமானிய மக்கள் நீதிமன்றத்துக்குச் செல்வதே பெரும் தண்டனை என கசப்பான உண்மையைப் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைகிறது படத்தின் முதற்பாதி. வக்கீலாக எல்லை தெய்வம் வேட்டைக்கருப்பு நீதிமன்றத்திற்கு வந்து வாதாடினாலும், எதார்த்தத்தைப் பெருமளவில் மீறாதவண்ணம் பார்த்துக் கொண்டுள்ளார் இயக்குநரான RJ பாலாஜி. ஆனால், இரண்டாம் பாதியில், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துத் தலைக்கீழாகக் கொட்டியது போல் திரைக்கதை கட்டுப்பாடின்றிப் பயணிக்கிறது. புதிதாகப் பதவியேற்றிருக்கும் முதல்வரைப் போல, தன் எல்லையில் யாரையும் தப்பு செய்யவிடமாட்டேன் என கருப்பு செமயாக வேற லெவலில் வைப் செய்கிறார். தொடக்கம் நன்றாக இருந்தாலும், கருப்பின் நேரடிப் பார்வையில் இருக்கும் நீதிமன்றத்திற்குள் புகுந்து பேபிகண்ணன் பராந்து பண்ணிவிடுகிறார். இதென்னடா கன்ட்ரோல் எடுத்து கருப்புக்கு வந்த சோதனை எனக் காண்டாகிவிடுகிறது. சட்டத்தையோ, நீதித்துறையையோ நம்பாமல் கருப்பின் அபாரமான வீச்சு மீது கிரஷ் கொண்ட வக்கீல் ப்ரீத்தியாக த்ரிஷா நடித்துள்ளார்.

ஊழல் நீதிபதியாக நட்டி நடித்துள்ளார். ‘சாமின்னு தெரிஞ்சும் சண்டை போட நானென்ன நிழல்கள் ரவியா இல்ல கரணா?’ என வக்கீல் பேபிகண்ணனிடம் கேட்கிறார். அவர்கள் கூட அம்மனின் சக்தியைக் கட்ட மந்திரவாதியை அழைத்து வந்து என்னமோ முயற்சி செய்வார்கள். ஆனால் பேபிகண்ணனாக நடித்துள்ள, இப்படத்தின் இயக்குநரான RJ பாலாஜி அடியாட்களை அனுப்பி வைக்கிறார். ஷ்ஷ்ப்பாஆஆ..

இதற்கே, இரண்டு முறை தனது சக்தி (God things) எத்தகையது என குஜிலிமஸ்து காட்டியிருப்பார் கருப்பு. அப்படியிருந்தும் மஞ்சமாக்கனாய் பேபிகண்ணன் இருக்கிறாரே எனப் பார்வையாளர்கள் வில்லன் மீது பரிதாபப்படுகின்றனர். ஆனால் கருப்போ, ‘சிக்கிச்சுடா செம பீஸ்’ என ஓங்கியடித்து வைப் செய்கிறார். ஆனால், ஓங்கியடித்து வைப் செய்வது வேட்டைக்கருப்பு இல்லை, காவற்காரக்கருப்பு. கருப்பாகச் சூர்யா நடித்துள்ளார். அவர் எப்படிக் கதைக்குள் வந்தார் என்பதற்குக் குறியீடாகப் படத்தில், மிளகாய் இடித்து அரைத்துப் பூசும் காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வாக்கியத்தில் ‘அவர்’ என்பது கதாபாத்திரத்தைக் குறிக்கிறதே தவிர நடிகரை அல்ல.

ஆறு வருடங்களுக்கு முன், மூக்குத்தி அம்மன் தோன்றிப் பேசியே அனைவரையும் திருத்துவார். அதே பாணியில், கருப்பும் தோன்றிப் பேசித் திருத்தப் பார்க்கிறார். அது முடியாதென உணர்ந்து இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். ‘கருப்புக்கு முன்னாடி யார் பருப்பு மாதிரி (படுத்திருக்கிறது)’ என்றொரு வசனம் வருகிறது படத்தில். படத்தைப் பற்றிய சுய எள்ளல் விமர்சனமாகவே, அவ்வசனத்தை வைத்துள்ளார் சூர்யாவிற்கு முன் அறிமுகமாகிப் படம் முழுவதும் வியாபித்துள்ள RJ பாலாஜி. ஆக, படத்தில் அவ்வசனத்தை இடம்பெறச் செய்ததன் மூலம், உண்மையிலேயே God கருப்பன் குசும்புக்காரன் என்பது ஊர்ஜிதமாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.