Shadow

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

“உன்னைப்போல் ஒருவன்” என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் “வெட்னஸ்டே” படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.

கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை.

‘சி4’ என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக்கும் சாமானிய மனிதன், அந்தக் குண்டுகள் இருக்கும் இடத்தைப் பற்றிக் கூற கமிஷனரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறான். அந்தக் கோரிக்கையின் படி மூன்று முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் ஒரு இந்து தீவிரவாதியைக் குண்டுகளுக்குப் பதிலாக அடமானாக கேட்கிறான். யார் அந்தத் தீவிரவாதிகள்? கமிஷனர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்? சாமானிய மனிதன் ஏன் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும்? குண்டுகள் என்ன ஆயின? வெடித்தனவா?? என்று பல கேள்விகளுக்கும் விடை தான் படத்தின் முடிவு.

சாமானிய மனிதனாக கமலும், போலீஸ் கமிஷனராக மோகன்லாலும் நடித்துள்ளனர். இருவருக்கும் நடிக்கும் சந்தர்ப்பங்கள் படத்தில் அவ்வளவாக இல்லை எனினும் கிடைத்த சந்தர்ப்பங்களில் நிறைவாக நடித்துள்ளனர். குறிப்பாக சாமானிய மனிதனாக வரும் கமல் தனது செய்கைக்குக் காரணத்தை விளக்கும் பொழுது படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறார். கமல் போலீஸ் கமிஷனரிடம் பேசும் பொழுது அவரது வசன உச்சரிப்புகளாலும், உடல் மொழியாலும், பார்வைகளாலும் கலக்கியுள்ளார். சவடால் பேசும் நாயகனாக வரும் ஸ்ரீமனுடன் பேசும் பொழுதாகட்டும், சீஃப் செகரட்டரியாக வரும் லட்சுமியுடன் பேசும் பொழுதாகட்டும், கமலுடன் ஃபோனில் பேசும் பொழுதாகட்டும், சக அதிகாரிகளுக்குக் கட்டளையிடும் பொழுதாகட்டும் மோகன்லால் தனது முக பாவனைகளாலேயே உணர்வுகளைக் கச்சிதமாய் வித்தியாசப்படுத்தி அருமையாக நடித்துள்ளார்.

சீஃப் செகரட்டரியாக வரும் லட்சுமி முதல்வருக்காகப் பதற்றத்தோடு காத்திருப்பதும், கமிஷனரோடு பேசும் பொழுது அதிகார தொனியில் பேசுவதும், முதல்வரிடம் ஃபோனில் பேசும் பொழுது குழைவதும், கமிஷனருக்கு அனைத்து அதிகாரமும் கொடுத்து விட்டு அவர் நடவடிக்கைகளைகளால் மீண்டும் பதற்றப்படுவதாகவும் நன்றாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி ஹாரீஃப்பாக வரும் கணேஷ் வெங்கட்ராம் மிரட்டியுள்ளார் என்றால் மிகையாகாது. அவர் கட்டையால் போலீஸ் கான்ஸ்டபிளை அடிக்கும் இடம், குற்றவாளியிடம் இருந்து உண்மையைப் பெறும் இடம், தீவிரவாதிகளிடம் உரையாடும் இடம் என அவர் வரும் நேரங்களில் எல்லாம் தனது அழகான கம்பீரத்தால் ரசிக்க வைத்திருக்கார். ‘அபியும் நானும்’ படத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு போலீஸ் அதிகாரியாக வரும் பரத் ரெட்டி, நிருபராக வரும் பெண்ணியம் உணர்த்தும் அனுஜா, ஃபோன் எங்கிருந்து வருகிறதெனக் கண்டுபிடிக்க கடைசியில் கணினி நிபுனத்துவனாக வரும் கிருஷ்ணமூர்த்தி (மகாநதியில் கமல் மகனாக வருபவர்) என அனைவரும் இயல்பாக நடித்து படத்திற்கு வலு சேர்க்கின்றனர்.

விறுவிறுப்பு குறையாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதை, பாடல்கள் இல்லா 102 நிமிட படம், நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராமல் கதைக்குத் தந்து இருப்பது என அறிமுக இயக்குநர் சக்ரி பிரமாதப்படுத்தியுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியாரான இவர் ‘சலங்கை ஒலி’ படத்தில் கோயிலில் கமலை புகைப்படம் எடுப்பவராகவும், ‘தசாவதாரம்’ படத்தில் புது காரில் கொரியர் அனுப்ப வரும் கமலின் அமெரிக்க நண்பராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரெட் ஒன்” கேமிராவை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனி அட்டகாசமாக விளையாடியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் பல்ப்பின் ஊடே கமலின் முகத்தைக் காட்டுவது, கட்டடப் படிகளில் கமல் ஏறுவது, காவல் நிலைய கழிவறை கண்ணாடியைக் காட்டுவது என கேமிராவின் துல்லியம் படம் முழுக்கப் பளீச்சிடுகிறது. அறிமுக இசை இயக்குநரான ‘ஸ்ருதி கமலஹாசன்’ தன்னை புலி என நிருபித்துள்ளார். நுனி சீட்டில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் கை பிடித்து படத்தோடு அவர்களை ஐக்கியப்படுத்தி விடுகிறது ஸ்ருதியின் இசை.

ஹிந்தியில் ‘வெட்னஸ்டே’ படம் பார்த்தவர்கள் தைரியமாக இப்படத்தைத் தமிழிலும் பார்க்க நியாயமான காரணங்கள் பல உள்ளன. கமல், மோகன்லால் என இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள், ஹிந்தியில் தரப் படாத முக்கியத்துவம் ஹாரீஃப்பாக வரும் போலீஸ் அதிகாரி பாத்திரத்திற்கு தந்துள்ள அழுத்தம் மற்றும் இரா.முருகனின் வசனங்கள் போன்றவை அதில் சில காரணங்கள். படத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பார்த்தாலும் கண்டிப்பாக ரசிக்கலாம். அந்த அளவிற்கு வசனம் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. கமிஷ்னரும், சீஃப் செகரட்டரியும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் அவர்கள் அனுபவம் வாய்ந்த நடிப்பையும் மீறி வசனமே முன் நிற்கிறது. தன் ரசிகர்களை உயிர் எனக் குறிப்பிடும் ஸ்ரீமனிடம், ‘உயிர்களை வெளியே விட்டுட்டு நீங்க மட்டும் உள்ள வாங்க’ என்ற மோகன்லாலின் வசனம் ஓர் எடுத்துக்காட்டு.

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.