Shadow

ஒ காதல் கண்மணி விமர்சனம்

ஒ காதல் கண்மணி விமர்சனம்

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின் கூட்டணி எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பில் எண்ணெயும் ஊற்றியது படத்தின் ட்ரைலர்.

கல்யாணத்தில் விருப்பமில்லாமல் வாழும் காதலர்கள் ஆதியும் தாராவும். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.

இளமை, காதல், மகிழ்ச்சி, காமம் என முழப் படமுமே கொண்டாட்டமாக உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை படம் நெடுக்கக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ரஹ்மானின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு பி.சி.ஸ்ரீராமின் ஃப்ரேம்களையும் பாடல் காட்சிகளில் துள்ள வைத்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். இந்தத் திறமையாளர்களின் சங்கமம் செய்துள்ள மேஜிக், திரையில் விஷூவல் விருந்தாக ரசிகர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது.

எந்த அடுக்குகளும் சிக்கிலுமில்லாத கதையை எடுத்து தனக்கே உரித்தான அழகியலோடு எளிமையாக திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்னம். ரசிக்கும்படியான வசனங்கள் படத்தில் மேலும் ஒன்ற வைக்கிறது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு நடிகர்களைத் தேர்வு செய்ததிலேயே மணிரத்னம் படத்தின் வெற்றியை பாதி உறுதி செய்துவிட்டார் என்று தோன்றுகிறது. துல்கர் சல்மானும் நித்ய மேனனும் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்றனர். பவானியாக அறிமுமாகியுள்ள சீனியர் கண்மணியான லீலா சாம்சனும் பிரகாஷ் ராஜுடன் இணைந்து திரையில் மாயம் செய்கின்றனர்.

கல்யாணத்தில் நடக்கும் புறச் சடங்குகள் கேள்விக்குள்ளாக்கப்படும் நேரத்தில், கல்யாணமே தேவையா என்ற கேள்வியை மிக லேசாய்த் தொட்டுள்ளது ஓ காதல் கண்மணி. கல்யாணமின்றி இணைந்து வாழும் கலாச்சாரம் சரியா தவறா என்ற கேள்விகளுக்குள் எல்லாம் தர்க்க ரீதியாகப் போகாமல், காதல் செய்யும் மாயத்தை அழகாகக் காட்டுகிறது படம். வாய்ப்புகளையும் அழுத்தத்தையும் தரும் டிஜிட்டல் உலகத்தில்.. கனவுகள், லட்சியம், சுதந்திரம் ஆகியவற்றை துறந்து பொறுப்புகளைச் சுமக்கத் தயங்கி வரும் பெருநகரத்துவாழ் நவயுக மனங்கள் மெல்லப் பெருகி வருகின்றன. இந்த அர்த்தமற்ற டிஜிட்டல் உலக ஓட்டத்தில் இருந்து மீண்டு வாழ்வைக் கொண்டாட, தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் காதல் கண்ணனோ/கண்மணியோ ஒருவருக்குக் கிடைத்தால் போதும்தானே!

நம் மனதுக்கு மிக நெருங்கிய இருவர் மகிழ்ச்சியாக இருந்தால் பார்க்கும் நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் அல்லவா? அப்படி, ஆதியும் தாராவும் நமக்கு மகிழ்ச்சியைக் கடத்துவதுதான் படத்தின் வெற்றி.