பிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்தைக் கடத்தினால் என்ன நடக்கும் என்பதை ஸ்பீட் (Speed) மற்றும் ஸ்பீட் – 2 (Speed – 2) படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தைக் கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான் பஸ் 657 படத்தின் சாரம்.
மிகச் சிறந்த கிளாஸிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி டார்னமென்ட் (The Tournament) என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மான், இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டீஃபன் சைரஸ் செஃபர் மற்றும் மேக்ஸ் ஆடம்ஸ், இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மனைவியை இழந்த சூழலில், தனது ஒரே மகளை வளர்த்திட அரும்பாடு படுகிறார் லூக் வான். நோய்வாய்பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது லூக்கிற்கு! வான் லூக்காக ஜெஃப்ரி டீன் மோர்கன், சிட்னி சில்வாவாக கேட் போஸ்வொர்த்தும், ஃப்ரான்சிஸ் சில்வாவாக ராபர்ட் டி நீரோவும் நடித்துள்ளனர். வ்ரெஸ்ட்லிங் புகழ் ‘தி அனிமல்’ பட்டிஸ்டாவும் படத்தில் நடித்துள்ளார்.
வேறு வழி தெரியாமல், ஒரு பெரிய சூதாட்ட விடுதியைச் சூறையாடி பணம் திருடத் திட்டம் போடுகிறார் வான். எதிர்பாராத விதமாக திட்டம் திசை திரும்ப, பேருந்தொன்றைக் கடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது சில்வாவிற்கு! இதை அடுத்து நிகழும் விளைவுகள்தான் படத்தின் உச்சம்.
எளிதாக முடிந்து விடும் என நினைத்தது, வேறு விதமாக மாறிவிட்டது கண்டு திகைத்துப்போய் நிற்கிறார் சில்வா. இந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டு, தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்ததா என்பதுதான் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள். மோரிஸ் செஸ்ட்நட் மற்றும் டைசன் வில்சன் ஆகிய நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ப்ராண்டன் காக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் டால்வா படத்தைத் தொகுத்துள்ளார். இம்பாசிபிள் ஃப்லிம்ஸின் உருவாக்கம் இப்படம்.