Shadow

களம் விமர்சனம்

Actor N.L. Srinivasan

லாஜிக்கல் த்ரில்லர் என எதிர்பார்ப்பைத் தூண்டியது இப்படத்தின் டீசரும் ட்ரெயிலரும்.

ஒரு பாழடைந்த வீட்டை வாங்கிப் புணரமைத்து உபயோக்கின்றனர். அவ்வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அமானுஷ்யத்தின் பின்னாலுள்ள லாஜிக் என்னவென்பதே படத்தின் கதை. ஜீவாவின் சி.ஜி. படத்திற்குப் பலம்.

செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில், படத்தில் வரும் வீடு பல பரிமாணங்களைப் பெறுகிறது. படத்தின் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது வீடு. படத்தின் களமான இவ்வீடே நாயகனுமாகும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதையுண்டு’ என்று படத்தின் டீசரில் வரும் வரி படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. முகேஷின் ஒளிப்பதிவும், பிரபாகரின் படத்தொகுப்பும் அதற்கொரு முக்கிய காரணம். அந்த வீட்டின் கதையாக வரும் உப கதையும் அற்புதமாகவே இருந்தது. குறிப்பாக, அனிமேஷனில் அதைப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். கணினி வரையியல் (CG) செய்துள்ள ஜீவாவின் உழைப்பு கச்சிதம்.

அமானுஷ்யங்களை ஆராய வீட்டிற்குள் வரும் நகுலன் எனும் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநிவாசன் அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு. ஓவியர் நீலாவாக வரும் பூஜா, வீட்டு வேலைக்காரியாக வரும் கனி, அம்ஜத், அவரது மனைவியாக லட்சுமி பிரியா என அனைத்து பாத்திரங்களையும் இயக்குநர் ராபர்ட் S.ராஜ் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அனைத்து பாத்திரங்களுமே, அவர்களின் உடையோடு மனதில் பதிவது குறிப்பிடத்தக்கது. வீணா சங்கரநாராயணின் உடையமைப்பு படத்தின் ‘மூட்’டுடன் பொருந்துகிறது.

படத்தில் அத்தனையும் இருந்தும் மிக மோசமான திரைக்கதையால் எல்லாம் வீணாகிறது. முதற்பாதி படம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் ஈர்த்தாலும், படத்தின் முடிவைக் காணும் பொழுது ‘சப்’பென வஞ்சிக்கப்பட்டதோர் உணர்வெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சுபிஷ் சந்திரனின் கதையில் புதிதாக ஏதுமில்லாத குறையை விட, திரைக்கதை தரும் ஏமாற்றம் மிக அதிகம்.