Shadow

கள்ளநோட்டு

சூரியன் வரும் முன்பே
சுருக்காகப் புறப்பட்டு
அவிழ்த்துப்போட்ட அனைத்தையும்
அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டே
பொத்தானை மாற்றி மாற்றிப் பூட்டினான்
மேலுக்குக் கீழ்.. கீழுக்குக் கீழென..

அடுத்து வேறொரு அறையில் மீண்டும்
மற்றொன்றுடன் படுக்கையில் நான்,
விடுதியில் நுழைந்த காவல்காரர்
கைதுசெய்தார் என்னைமட்டும்
அன்று என்னுடன் இருந்ததை மறந்து,
விட்டுவிடுகிறேன்
“எனக்கு வேண்டியதை கொடு”வென
சரியாகக் கேட்டார்.
சலித்துக்கொண்டே நேற்றிரவு வந்ததை
இன்றிரவு பிடித்துவிடலாமென
கொடுத்தால்..
” இந்த வேலை
என்றிலிருந்தென?”
ஏதுமறியாத என்னை
அறைந்தார்.
எந்த வேலையென
எனக்கென்னத் தெரியும்?
தெரிந்தாலும்,
சிறை மீட்க ராமனேது?

இன்றிரவும் வழக்கம்போல்
கோரைப் பாயாவேன்
என் மீது புரண்டுபடுக்க காக்கிகள்
கொக்கரித்துக் கொண்டிருக்கிறது
நான் நீயென
நாயென.

கள்ளம் எங்கே இங்கு
நான் கொடுத்த பணத்திலா
இல்லை
யாராவது சொல்லுங்களேன்?

(இது  ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

– சே.ராஜப்ரியன்