Search

கழுகு விமர்சனம்

Kazhuku
பரீட்சையில் தேறாதது, கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாதது, காதலித்தவர்கள்மனம் செய்து கொள்ள பெற்றவர்கள் சம்மதிக்காதது என  தற்கொலைப் புரிந்துக்கொள்பவர்களுக்கு ஏதேதோ காரணங்கள். தேனி மாவட்டத்தில் அப்படி நிகழும் தற்கொலைகளை நம்பி பிழைக்கின்றனர் சேராவும் அவனது சகாக்களும். தற்கொலைப்புரிந்தவர்களின் பிணங்கள் 3000 அடி ஆழம் போல் விழுந்துக் கிடக்காமல் 300அடிக்குள்ளாகவே கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.’பிணம் தூக்குபவர்கள்’ என்று மலிவாக அவர்களை மற்றவர்கள்அடையாளப்படுத்துகின்றனர்.

கவிதாவின் தங்கை தனது காதலருடன்தற்கொலைப் புரிந்துக் கொள்கிறாள். சேரா குழுவினர் மூன்று நாட்கள் தேடி,கவிதாவின் தங்கை உடலினை மட்டும் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றனர். தனதுமகனின் உடல் கிடைக்கவில்லை என கோபப்படுபவர்கள் கவிதாவின் தங்கை உடலைமீண்டும் மலையில் இருந்து கீழே வீச முனைகின்றனர். சேரா அவர்களை தடுத்துவிடுகிறான். அதை தொடர்ந்து மெல்ல சேரா மீது கவிதாவிற்கு ஈர்ப்புஏற்படுகிறது. சேராவிடம் திருமணம் செய்து கொள்கிறாய என கேட்டும்விடுகிறாள். முதலில் மறுதலிக்க முயன்றாலும் சேராவிற்கும் கவிதாவைப் பிடித்து விடுகிறது. இவர்களின் காதலை கவிதாவின் பெற்றோர்கள் எதிர்கின்றனர். அதற்கு சேராவின் பிணம் தூக்கும் தொழில் காரணமாக உள்ளது.

Kazhugu

படத்தின்தொடக்க காட்சிகளிலேயே முடிவையும் சுலபமாக யூகிக்க கூடியதாய் இருக்கிறது.பருத்தி வீரனின் வெற்றி அதன் பின் வந்த பல படங்களின் இறுதி காட்சிகளைத் தீர்மாணித்திருப்பதாக தெரிகிறது. ‘மைனா‘வைப் போலவே தேனி, மூனாறு என படம் பிடித்துள்ளனர். ஆனால் மைனா படத்தில் வருவது போல் பச்சைப் பசேல் மலைசரிவுகள் மிகுந்து காட்டப்படாமல் பனிப் படரும் பகல் வேளைகளும்  அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளனர். சத்யாவின் ஒளிப்பதிவில் மலைகளைப் போர்த்தும் இரவையும், அது ஏற்படுத்தும் குளிரையும் உணர முடிகிறது. யுவன் ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் இடைச்சொருகலாய் நெருடாமல் படத்தோடு பிணைந்தாற் போல் வருகிறது. உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நடன அசைவுகளுக்கு பதில் சட்டையை முகத்தில் போர்த்திக்கொண்டு, ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ எனத் தொடங்கும் பாடலிற்கு கதாபாத்திரங்கள் ஆடுகின்றனர். சட்டை, சட்டை காலர், கைலி என உடைகளை உலுக்கிநடனம்  ஆடும் பழக்கம் தமிழ்த் திரைப்படங்களில் மிகுந்து வருகிறது. இப்படத்தின் நடன இயக்குனர் ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது வாங்கின தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

சே என்னும் சேராவாக கிருஷ்ணா நடித்துள்ளார். அலிபாபா, கற்றது களவு என இரண்டுப் படத்தில் முன்பே நாயகனாகநடித்துள்ளார். ஆனால் அவரது முதல் படம் என்று பார்த்தால் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ தான். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முந்தையப் படங்கள் போலின்றி இப்படம் அவரை நாயகனாக நிலைநிறுத்தும் என நம்பலாம். போதையில் இருப்பது; போதையில் இல்லாத சமயங்களில் பீடியைப் பற்றவைப்பது என இரண்டு வேளைகளைக் கண்ணும் கருத்துமாக செய்கிறார். பிணங்களில் உள்ள அணிகலன்களை எடுத்துக் கொள்கிறார். ஆனால் தேயிலையைக் கடத்தும் ஐயா செய்யும் கொலைகளைப் பற்றி காவல் துறையினரிடம் சொல்லிவிடுகிறார். அதற்கு முன் காவல் துறையினர் கேட்கும் உதவியைச் செய்யாமல் அலட்சியமும் படுத்துகின்றார். ஐயாவாக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். அப்பாவாக மட்டுமே நடித்து அலுத்து விட்டது போலும் அவருக்கு. மருத்துவர் ஆக, வில்லன்ஆக என பல வேடங்களில் அவரைப் பார்க்க முடிகிறது.

Bindhu Madhaviதமிழில் பிந்துமாதவிக்கு இது இரண்டாவது படம். பிந்து மாதவியைத் தெலுங்கு பட நாயகி என்றுசொல்லலாம். முதல் படமான வெப்பம் போல் இரண்டாவது நாயகியாக தோன்றாமல் படம் முழுவதும் வருகிறார். கருணாஸ், தம்பி ராமையா இருவரும் நாயகனின் சகாக்களாக வருகின்றனர். ரஜினி நடித்து 1981ல் வெளிவந்த “கழுகு”என்னும் படத்தின் தலைப்பைப் பெற்றுள்ளார் இயக்குனர் சத்யசிவா. பிணங்களைத் தூக்கி வரும் குழுவினரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பிற்கான அர்த்தத்தை சொல்கின்றனர். திருப்பங்களோ, சுவாரசியங்களோ அற்று நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை படத்திற்கான பலவீனமாக உள்ளது.
Leave a Reply