Shadow

கவியோகி சுத்தானந்த பாரதியார்

மாயலோகத்தில்..

கவியோகி சுத்தானந்த பாரதியார்

1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாகச் சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது.

எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில் கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?!

‘நீ பாட்டு கேட்கும் வழக்கம் எல்லாம் உண்டா?’ எனக் கேட்டார்.

‘கேட்பேன்’ என்று கூறினேன்.

‘யார், யார்? பாட்டெல்லாம் கேட்பாய்’?

‘எல்லோர் பாட்டையும் கேட்பேன். சினிமாப்பாட்டு, கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்குப் பிடிக்குமே’.

‘டி.கே. பட்டம்மாள் கேட்டிருக்கிறாயா?’

‘ஓ, கேட்டிருக்கிறேன்’.

‘அவர் பாடிய பிரபலமான பாட்டு ஒன்று சொல்லு’.

தீராத விளையாட்டுப் பிள்ளை‘.

‘இது பாரதியார் பாட்டு. இன்னொன்று சொல்லு’.

தூண்டிற் புழுவினைப் போல்‘.

‘இதுவும் பாரதியார் பாட்டுத் தான்’.

சற்று நேரம் யோசிக்கலானேன். எழுத்தாளர் காத்துக் கொண்டிருந்தார்.

சட்டென வேறொரு பாட்டு நினைவிற்கு வந்தது.

எப்படிப் பாடினரோ – அடியார்
அப்படிப்பாட நான்

‘வெரிகுட். இந்தப் பாட்டை இயற்றியது யாரென்று தெரியுமா?’

உதட்டைப் பிதுக்கினேன்.

‘இந்தப் பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார். கவியோகி சுத்தானந்த பாரதியார் என்றால் மிகவும் பிரசித்தம். அவரைத்தான் நேற்று நீ ஊர்வலத்தில் பார்த்தாய்’.

தொடர்ந்து, ‘நீதான் நிறைய சினிமாவெல்லாம் பார்ப்பாயே. ‘ஏழை படும் பாடு’ சினிமா பார்த்திருக்கிறாயா?’

‘அருமையான படம், பார்த்திருக்கிறேனே’.

‘அந்தக் கதை பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய ‘லே மிசரபிள்’ என்கிற நாவல். அதைத் தமிழாக்கம் செய்தவர் இந்த சுத்தானந்த பாரதியார்’ என்றவுடன் எனக்கு அந்த யோகியின் பால் பிரமிப்பும், மரியாதையும் கூடியது.

‘அவர் நிறைய எழுதியிருக்கிறார். அவையெல்லாம் கணக்கில் அடங்காது. நீ, வரும் நாட்களில் அவரைப் பற்றி நிறைய படி. அப்போது உனக்கு அவரைப் பற்றி விவரமாகப் புரிய வரும்’ என்று அந்த எழுத்தாளர் எனக்கு உபதேசம் செய்தார். அப்போது எனக்கு வயது 17.

பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரைப் படித்துத் தெரிந்து கொள்ள தலைப்பட்டேன். முழுத் தகவலும் ஒரே நேரத்தில் கிடைக்காததால் அவ்வப்போது சிறிய சிறிய செய்திகளாகவே அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

சுத்தானந்த பாரதி பிறந்த ஊர் சிவகங்கை. பிறந்த வருடம் 1897. இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியம்.

சிறு வயதிலேயே தனது தந்தை மூலமாகத் தமிழ் கற்றிருக்கிறார். சிறுவயதில் சிதம்பரம் நடராஜப் பெருமாளை வழிபடப்போன இடத்தில் இயற்றிய பாடல் தான்.

எப்படிப் பாடினரோ – அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

என்று தொடங்கும் பாடல். இப்பாடல் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பட்டு இசைத்தட்டாக அக்காலத்தில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது.

சுத்தானந்த பாரதிக்கு அனேக மொழிகள் தெரிந்திருக்கிறது. ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார். சுத்தானந்த பாரதி தமது ஆவேசப் பாடல்கள் மூலம் ஆன்மீகப் புரட்சியை முன் வைத்தார்.

வீரத் தமிழர்களுக்கு ஆவேசக் கடிதங்கள்‘ என்ற நூல் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி உணர்வுகளை எதிர்த்துச் சாடிய பெருமையும் உண்டு.

ஆரம்ப காலங்களில் ‘சமரச போதினி‘ எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபட்டு தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். அப்போதுதான் ‘ஸ்வராஜ்யா‘ என்கிற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று.

தேசபக்தர், வீரச் செம்மல் வ.வே.சு. ஐயர், ‘பாலபாரதி’ என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் அவருடன் இணைந்து பணியாற்றினார் சுத்தானந்த பாரதி.

அந்தக் காலத்தில் மெத்தப்படித்தவர்கள், அறிவு ஜீவிகள் படிக்கும் பத்திரிகையாக வை. கோவிந்தன் நடத்திய ‘சக்தி‘ பத்திரிகையைச் சொல்வார்கள். ஆரம்பகால ‘சக்தி’யில் சில காலம் கவியோகி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

இல்லையென்பான் யாரடா – என் அப்பனைப்போய்
தில்லையிலே பாரடா

மிகவும் பிரபலமான இசைத்தட்டு. மக்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது. இம்மாதிரி ஏராளமான தனித் தமிழ்ப்பாடல்களை இயற்றி இசையுலகில் தமிழ்த் தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.

இதேபோல் மிகவும் பிரபலமான இன்னுமொரு தமிழ்ப்பாட்டு :

அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே – அருள்

சுத்தானந்த பாரதியார், அரவிந்தர், ரமண மகரிஷி, மகாகவி சுப்ரமணிய பாரதியார் போன்றோருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

கவியோகி ஏராளமான நூல்கள் இயற்றியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. என்றாலும் யோகசித்தி, கீதாயோகம், பாரத சக்தி மகா காவியம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

பாரத சக்தி மகா காவியத்திற்காக, கவியோகிக்கு ராஜராஜ சோழன் விருது கிடைத்திருக்கிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பெயர் பெற்றவர் பாரதி.

இவர் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. 1948இல் வெளிவந்த “ஸ்ரீ ஆண்டாள்” என்கிற படத்தில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

1949இல் பி.யூ. சின்னப்பா நடித்த ‘கிருஷ்ண பக்தி’ என்றொரு படம் வெளிவந்தது. இப்படத்தில் கதை ‘THE MONK’ என்கிற பிரஞ்சு நாவலின் தழுவல். இக்கதையை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சுத்தானந்த பாரதி.

1950இல் வெளிவந்த ‘ஏழை படும் பாடு’ திரைப்படம் மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற படம். பிரஞ்சு நாவலாசிரியரான விக்டர் ஹியூகோவின் ‘லே மிசரபிள்’ என்கிற நாவலைத் தமிழாக்கம் செய்து ‘ஏழை படும் பாடு’ என்கிற நாவலை எழுதியவர் பாரதி. இப்படத்தில் வி. நாகையா மிகவும் அருமையாக நடித்திருந்தார். ‘ஜாவர் சீதாராமனுக்கு ‘ஜாவர்’ பட்டம் ஏற்படக் காரணமாக அமைந்த படம் இது.

மேலும், போஜன், மரகதம், பொன் வயல், சுதர்சனம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சீர்காழி கோவிந்தராஜனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய படம் ‘பொன்வயல்’. இந்தப் படத்தில் ‘சிரிப்புத்தான் வருகுதையா‘ என்கிற பாடல் மூலம் சீர்காழி அறிமுகமானார். இந்தப் பாடலை இயற்றியவர் யோகியார்.

‘சுதர்சனம்’ என்கிற படத்தில் பி.யூ. சின்னப்பா இவர் எழுதிய அருமையான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

உன்னடியில் அன்பு வைத்தேன்,
கண்ண பரமாத்மா

என்கிற அப்பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

அதேபோல், ‘மரகதம்’ என்கிற சிவாஜி, பத்மினி நடித்த படம் ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’ என்கிற துப்பறியும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். கோயம்புத்தூர் பட்சிராஜா பிலிம்ஸ் தயாரித்து வெற்றியடைந்த படம். இந்தப் படத்தில் ஒரு அருமையான பாட்டிற்கு வெகு நேர்த்தியாக நடனமாடியிருந்தார் பத்மினி.

மாலை மயங்குகின்ற நேரம் – பச்சை
மலை வளரும் அருவியோரம்

என்கிற இந்த அற்புதமான பாடலை இயற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

அடையாறில், ‘யோக சமாஜம்’ என்கிற அமைப்பை வெகுகாலம் நடத்தி வந்தார். கவியோகி 1990இல் இறைவனடி சேர்ந்தார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்