ஆம். படத்தின் பெயரே, ‘கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்பதுதான். ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்ற தலைப்பு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளதால், படத்தின் பெயரிலேயே கவுண்டமணியைச் சேர்த்துவிட்டனர் படக்குழுவினர்.
இப்படத்தின் பெயர் ஒன்றே போதுமே, இப்படம் எப்படிப்பட்டதென யூகிக்க! சர்வம் கவுண்டர் (Counter) மயம். காதல் ஜோடிகளுக்கு சாதி, அந்தஸ்து, பெற்றோர்கள் இன்னபிற என அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் செய்து வைப்பவர் கேரவன் கிருஷ்ணன். மதுரை வாழ் அரசியல்வாதி விஸ்வநாதனின் மகளுக்கு எப்படி எதிர்ப்புகளை மீறிச் சேர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை.
அறிமுக பாடல், க்ளைமேக்ஸ் ஃபைட் என கவுண்டமணியை முழுமுதற் ஹீரோவாக்கியுள்ளார் இயக்குநர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ஒடுங்கிய தேகமும், இடுங்கிய முகமும், சோர்வான பார்வையும் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், அவர் தனது குரலினாலும், தனது பிரத்தியேகமான கிண்டல்களினாலும் முழுமையாக ஈர்த்துக் கொள்கிறார். வழக்கம் போல் சக சினிமா நடிகர்களை நன்றாகக் கலாய்த்துள்ளார். “எல்லோரும் ஜாதியைத் தன் பெயரிலிருந்து எடுக்கிறப்ப, ஹன்சிகா மோத்வாணியும் காஜல் அகர்வாலும் சாதி பேரைச் சேர்த்துக்கிறீங்களா? இதைப் பற்றி ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆர்ட்டிக்கிள் போடுடா” எனக் கட்டளையிடுகிறார். அடுத்து வரும் காட்சியில், “ஹன்சிகாவும் காஜல் அகர்வாலும் வேற என் மேல் கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க!” எனப் படத்தில் பேசிப் பேசியே நடித்துள்ளார் கவுண்டமணி. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறைவதுண்டோ என்பதற்குச் சான்றாய்ப் படத்தில் தோன்றியுள்ளார் ‘நகைச்சுவைச் சக்ரவர்த்தி’.
ஜிகர்தண்டாவின் அசால்ட் சேது நடிக்கப் போய்விட்ட பின், அவரது குழுவில் இருந்த மற்றவர்கள் கதி என்னானது? படத்தில் வரும் இந்தக் கிளைக்கதையைச் செம சுவாரசியமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். எம்.பி.3 பிளேயர் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கும் ராமசந்திரன் துரைராஜ் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அமீர்கானின் PK படத்தையும் உள்ளே கொண்டு வந்துள்ளனர். கேரவன் கிருஷ்ணனனாக வரும் கவுண்டமணி, PK என்றுதான் கையெழுத்தே போடுகிறார். ஒரு காட்சியில் அமீர்கான் போன்ற உடையலங்கரத்திலும் வருகிறார். கவுண்டமணியின் மனைவியாக வரும் சனா நடித்துள்ளார். பயங்கர பக்திப் பழமாக வரும் அவரால் படத்தின் சுவாரசியத்துக்குக் கொஞ்சமும் உபயோகமில்லை.
கவுண்டமணிக்காக மட்டுமே திரையரங்கத்திற்குச் செல்கின்றனர் மக்கள். அதனால் மற்ற கதாபாத்திரங்கள் மனதில் பதியாமல் போவது இயல்பே! இரண்டாம் பாதியில் வரும் காதல் ஜோடியான ரித்விகாவும் செளந்திரராஜாவும் மட்டும் தெரிந்த முகங்களாக உள்ளதால், கொஞ்சம் நேரம் அவர்களை நம்பி படத்தை ஒப்படைத்துள்ளார் இயக்குநர். அருணகிரியின் பிண்ணனி இசை படத்தின் நகைச்சுவை ‘தீம்’க்கு வலு சேர்க்கிறது.