
நெட்வொர்க்கிங்கில் வேலை தேடும் யாழினியும், அடியாளாக இருக்கும் கதிரும் எதிரெதிர் வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகமும், நட்புமுமே படத்தின் கதை.
வசனங்களில் நகைச்சுவை இருந்தாலும், படம் ஆங்காங்கே, குறிப்பாக முடியும் வேளையில் மனதை வருடிச் செல்கிறது. ‘உனக்கொரு வாழ்க்கை உண்டு’ எனச் சொல்லி, ஒருவனுக்கு மூளைச்சலவை செய்யப்படும் பொழுது, மெல்ல பதற்றம் எட்டிப் பார்க்கிறது. எல்லா மூளைச்சலவைக்கும் பின்னும் ஓர் அழகான கனவு தூண்டிலாக்கப்படும். உலகைச் சூழ்ந்துள்ள பெரும் அபாயங்களின் சிறு விதை இப்படித்தான் முளைக்கிறது. அப்படி, ‘தாம் உபயோகிக்கப்படுத்தப் பட்டுள்ளோம்’ என்ற உண்மையை சலவை செய்யப்பட்டவர்கள் உணரும் பொழுது ஏற்படும் வலி என்பது மிக மிகக் கொடியதாக இருக்கும். அது தன்னைப் போல் பிறருக்கும் ஏற்பட்டு விடக்கூடாதென்ற மனமிருக்கில்லையா..!? அதை கமலின் மொழியில் சொல்வதென்றால், ‘அப்படிப்பட்ட மனம் வாய்த்தவந்தான் சார் கடவுள்’. அப்படியொரு ஆசாமியாக கதிர்.
படம் தொடங்கிய சில காட்சிகளுக்குப் பின், கதிரெனும் பாத்திரத்தில் விட்டேத்தியாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. அடுத்த மூன்றாவது அல்லது நான்காவது நொடியில் இருந்தே பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்துக் கொள்கிறார். நால்வரிடம் தர்ம அடி வாங்கி விட்டு, செம கெத்தாக அந்த இடத்திலிருந்து இவர் விலகும் காட்சியில் பயங்கரமாக கைதட்டல்களை அள்ளுகிறார். இவரையும் மீறி, இவருக்கு நிகராக மடோனா செபஸ்டியன் கடைசி வரை தாக்குப்பிடிப்பதால்தான், படத்தைச் சலிக்காமல் கடைசி ஃப்ரேம் வரை பார்க்க முடிகிறது.
இந்தப் படம் யாழினியின் பார்வையில் இருந்தே தொடங்குகிறது. சென்னை தான் அவளது சொர்க்கப்புரி; நெட்வொர்க்கிங் வேலையே அவளது லட்சியம், குறிக்கோள், இத்யாதி எல்லாம். யாழினியாக படம் முழுவதும் வியாபித்திருப்பது மடோனா செபஸ்டியன். இடைவேளை முடிந்து வரும், “புகைபிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு” எனச் சொல்வது வரை அவர் படம் நெடுகே நீக்கமற நிறைந்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் பொழுதே, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் கிடைத்தது அதிர்ஷ்டம் எனில், அதைப் பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளது அவரது திறமைக்குச் சான்று.
‘மை டியர் டெஸ்பெரடோ’ எனும் தென் கொரிய படத்தின் முறையான உரிமம் வாங்கி திரைக்கதை அமைத்துள்ளார் நலன் குமாரசாமி. அதற்காக ‘தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ என்பதை அப்படியே ‘பக்கத்து வீட்டுப்பெண்’ணாக மாற்றியிருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ‘சூது கவ்வும்’ போல் சரசரவென ஓடும் திரைக்கதை இல்லை. திரைக்கதையின் மென்மையான ஓட்டத்தை கடைசி வரை ரசிக்க முடிய மற்றுமொரு காரணம், தினேஷ் கிருஷ்ணனின் ரம்மியான ஒளிப்பதிவு. படத்திற்கு, ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பினை வைக்க முயற்சி செய்துள்ளார் நலன். அந்தத் தலைப்பு கிடைக்கவில்லை எனினும், அதைக் காட்சிகளில் கொண்டு வந்து கதைக்கு மேலும் அழகு சேர்த்து அசத்தியுள்ளார். கலை இயக்குநர் விஜய் ஆதிநாதனின் கைவண்ணம் படத்திற்கு பெரும்பலம்.
மோகன் ராஜனின் வரிகளில் “க க க போ” பாடல் துள்ள வைக்கிறது. அந்தப் பாடல் தொடங்கும் முன்பான காட்சிகளோடு பொருத்திப் பார்த்தால்தான் அந்தக் கொண்டாட்டத்தை முழுமையாக உணர முடியும். வழக்கம் போல் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் கலக்கியுள்ளார்.
படத்தின் மற்றுமொரு அழகு, படத்தின் முடிவை பார்வையாளர்களின் கற்பனைக்கு விட்டதே!