Shadow

கோ விமர்சனம்

Ko
கோ – ஒழுங்குப்படுத்து, ஒன்றுசேர், எதிர் (oppose), தலைவன் என திரைப்படத்தின் தலைப்பினை பல அர்த்தங்களோடு பொருத்திப் பார்க்கலாம்.

மக்களுக்கு ஆரோக்கியமான அரசாங்கத்தை அளிப்பதாக அதகளப்படும் அரசியலுக்குள் வசந்தன் என்னும் பட்டதாரி இளைஞனின் ‘சிறகுகள்’ அமைப்பு களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களோடு படம் நிறைவுறுகிறது.

வசந்தனாக அஜ்மல். அரசியலில் ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட படித்த இளைஞனாக வருகிறார். ஆடம்பர விழாக்களில் செலவிடப்படும் பணத்தில் ஆயிரம் குழந்தைகளைப் படிக்க வைக்கலாமே என்ற ஏக்கத்தினைச் சுமந்தவாறு திரையில் அறிமுகமாகிறார். எதிர்ப்புகளைக் கொண்டு துவளாமல் நம்பிக்கையுடன் மேடையில் பேசும் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.

அஷ்வினாக ஜீவா. ‘தின அஞ்சல்’ என்ற நாளிதழின் கலகலப்பான புகைப்படக் கலைஞராய் தொடக்கம் முதல் இறுதி வரை படத்தினோடே ஓடுகிறார். பக்கவாட்டில் உருப்பெருக்காடியைப் பொருத்தியும், இரு உருளை வண்டியில் நின்றவாறும், இருளில் மறைந்திருந்தும் செய்திகளை நேர்த்தியான புகைப்படமாக சேகரிக்கிறார். இவரது நடிப்பை நினைவுறுத்தும் சில படங்களில் இந்தப் படமும் சேரும்.

சரோ (எ) சரஸ்வதியாக பியா பாஜ்பாய். படத்தின் கலகலப்பிற்கு எவ்வகையிலேனும் உதவிட வேண்டும் என முயல்பவர்.  இரண்டாம் கதாநாயகியாக வந்து கவர்ச்சிக்கு உதவி இருந்தாலும் படத்தில்  திருப்பு முனை  ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றி மறைகிறார்.

ரேனுகா நாராயணனாக கார்த்திகா. நாயகனால் காதலிக்கப்படுவதால் இப்படத்தின் நாயகி என கொள்ளலாம். விலாசம் ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதாவின் வளர்ந்த மகள்.

“என்னமோ ஏதோ..” என்ற பாடல் படம் குறித்த எதிர்பார்ப்பினை எகிற வைத்த காரணி. அந்தப் பாடல் வரும் நேரம் மொத்த திரையரங்கமும் குதூகலம் கொள்கிறது. படத்தின் விறுவிறுப்பிற்கும் ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை துணைப் புரிகிறது.  ரிச்சார்ட் எம்.நாதன் நார்வே மலைகளின் அழகை ஒளிப்பதிவால் கொள்ளையடித்து திரையில் காட்சிகளாக விரிக்கிறார்.

இயக்கம் கே.வி.ஆனந்த். அயன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணியில் களமிறங்கியுள்ளார். படத்தின் தலைப்பைத் தொடர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பாளர்களின் பெயர் வரும் பொழுதில் இருந்தே இயக்குனரின் தாக்கம் படத்தில் அப்பட்டமாக தெரியத் தொடங்கி விடுகிறது. உதாரணத்திற்கு இரண்டு நாய்கள் நேரெதிராய் நிற்கும் புகைப்படத்தின் ஊடே ‘சண்டை: பீட்டர் ஹெய்ன்’ என்று பெயர் தோன்றுகிறது. ஆரவாரமற்று தேர்தல் உணர்வினையே ஏற்படுத்தாமல் நடந்து முடிந்த 2011 தமிழக தேர்தல் வாக்கெடுப்பைச் சமன் செய்யும் வகையில் அதிரடியாய் வந்திருக்கும் படம். அயன் படத்தில் சகோதரனின் கொலை நடந்து முடிந்தவுடன் நாயகி துக்கம் அனுஷ்டிக்காமல் நாயகனுடன் உல்லாசமாய் பாட சென்று விடுவார். அதே போல், இப்படத்திலும் தோழி கொல்லப்பட்டவுடன் நாயகி நாயகனுடன் உல்லாசமாய் பாட சென்று விடுகிறார். ஒரு கெட்ட நிகழ்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவப் பாடத்தின் குறியீட்டு காட்சிகள்.

கோதர்க்கங்களற்றது தமிழ்த் திரைப்படம் என்பதற்கு மற்றுமொரு சாட்சி. பொழுதினைப் போக்க நல்லதொரு விறுவிறுப்பான படம்.

Leave a Reply