Shadow

சதுரம் 2 விமர்சனம்

Sadhuram 2 vimarsanam

சைக்காலஜிக்கல் த்ரில்லர்களான ‘சா (SAW)’ தொடர் படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தின் கருவை எடுத்தாண்டு, பிளான்த்ராஃபிக்கல் த்ரில்லர் (Philanthropical thriller) என்ற வகைமைக்கு சதுரம் 2 படத்தை மாற்றி உருவாக்கிள்ளனர்.

சதுர வடிவிலான அறையில் மருத்துவர் வாசுதேவனும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு, அவ்விருவராலும் சதுரத்தில் இருந்து வெளியேற முடிகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஸ்லாஷர் (slasher) வகை படங்கள், தமிழுக்குத் தேவையா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது ரத்தக் களறியுடன் ஒருவரைக் கொடூரமாக அறுத்து கொலை செய்யப்படுவதாகச் சித்தரிக்கும் படங்களை ஸ்லாஷர் படங்கள் எனலாம். ஆனால், பெரும்பாலான ஹீரோயிசம் மிகுந்த (மலிந்த) மாஸ் படங்கள் கிட்டத்தட்ட ஸ்லாஷர் படங்கள் போன்றே காட்சியளிக்கின்றன. இப்படமோ மிக லாவகமாக சென்சாரையும் திருப்தி செய்து, பார்ப்பவர்களையும் கலவரப்படுத்தாத வகையில் இரத்தத்தை நாசூக்காகச் சிதற விட்டுள்ளனர். ‘சதுரம் 2’ என்ற தலைப்பில் வரும் இரண்டே இரத்தச் சிதறல்கள்தான்.

‘சா’ படத்தில், டேப்-ரெக்கார்டரில் பதியப்பட்டிருக்கும் குரலே உங்களை இனம் புரியாப் பதற்றத்துக்கு இட்டுச் செல்லும். சதுரம் 2 படத்தில் அது மிஸ்ஸிங். வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள, மிக அதீதமான முறையில் சதுரத்தில் விளையாட்டு அரங்கேற்றப்படுகிறது. படத்தின் பெயர் பொடும் பொழுதே, மையக் கதைக்கு வலு கூட்டும் கிளைக் கதையை ஓவியங்களாகக் காட்டுவது சிறப்பு. 94 நிமிடங்கள் ஓடும் மிகக் கச்சிதமான த்ரில்லருக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி தான் படத்தின் பெரும்பலம். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசையும், S.P.ராஜ சேதுபதியின் படத்தொகுப்பும் படத்தின் திகிலை இறுதி வரை தக்க வைக்கின்றனர்.

படத்தின் கலர் டோனில் மிகக் கவனம் செலுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் G.சதீஷ். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ‘ஏ’ செர்ட்டிஃபிகேட் கிடைத்திருக்கும். மருத்துவராக நடித்திருக்கும் யோக் ஜபீ தான் படத்தின் நாயகன். தன் தவறை உணர்ந்து, மகளுக்காகத் தன் முடிவை மாற்றிக் கொள்வதோடு, தப்பிக்க எதிரில் உள்ளவனைக் கொல்லாமல், அவர் எடுக்கும் முடிவு பார்வையாளர்களைத் திடுக்கிட வைக்கிறது. புகைப்படக் கலைஞராக வரும் அறிமுக நடிகர் ரியாஸும் நன்றாக நடித்துள்ளார். தம்பதியான ரோஹித் நாயர், சுஜா வருணி காட்சிகள் நான்-லீனியராக வந்தாலும், திரைக்கதையின் புள்ளிகள் இணையும் பொழுது நெகிழ வைக்கின்றன.

க்ரெளட் ஃபண்டிங் (Crowd funding) முறையில், சா சீரிஸின் ரசிகர்கள் 35 பேர் இணைந்து படத்தைத் தயாரித்திருப்பது ஆரோக்கியமான முயற்சியாகும். அம்முயற்சிக்குக் களங்கம் விளைவிக்காமல், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் தன் பங்கை மிக நிறைவாகச் செய்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்டிருக்கும் ‘சதுரம் 1’ படத்திற்கான எதிர்பார்ப்பை இப்பொழுதே இப்படம் கூட்டியுள்ளது.