Shadow

சாருலதா விமர்சனம்

Charulatha
சன் பிக்சர்ஸில் இருந்த ஹன்சராஜ் சக்சேனாவின் ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ டிஸ்ட்ரிப்யூட் செய்யும் முதல் படம். ‘அலோன்’ என்ற தாய்லாந்து படத்தைத் தழுவி தமிழில் ‘சாருலாதா’வாக மாற்றியுள்ளனர். ஒரிஜினல் ஸ்டோரி என தாய்லாந்துக்காரர்களின் பெயர்களை மறக்காமல் போட்டுள்ளனர்.
ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களில் ஒருவரான சாருவிற்கு காதல் பிறக்கிறது. ஆனால் எதிர்பாராமல் சாரு இறந்து விட, சாருவின் காதலன் லதாவை சாரு என நினைத்து காதலித்து வருகிறான். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் லதாவை கொன்று அந்தக் கல்யாணத்தை தடுக்க பார்க்கிறது சாருவின் ஆவி. லதா கொல்லப்பட்டாளா, சாருவின் காதலனுக்கு உண்மைத் தெரிந்ததா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் முடிகிறது.
பேய் அல்லது ஆவி படம் என்றளவிலேயே லாஜிக் ரொம்ப பார்க்கக்கூடாது. ‘ஹேப்பி பர்த் டே’ என நாயகன் வாழ்த்தியவுடனேயே கனவுப் பாட்டு, சீட்டுக்கட்டு ஜோதிடம், திருமணத்திற்கு ஸ்மார்ட் ஃபோனில் நல்ல நாள் பார்ப்பது என படம் தொடங்கிய சில நொடிகளிலேயே தொடங்கி விடுகின்றனர். ஆனால் எத்தகைய படத்தின் கதையையும் சுலபமாக யூகிக்க முடியுமளவு பரிணமித்து விட்டார்கள் ரசிகர்கள். அவர்களை சுவாரஸ்யமான திரைக்கதையால் மட்டுமே திருப்திக் கொள்ள வைக்க இயலும். கதையின் முடிவை அதன் மூலத்தில் இருந்து சுபமாக மாற்ற முடிந்த இயக்குனரால் திரைக்கதையில் அவ்ளோ சுவாரசியத்தை கொண்டு வர இயலவில்லை. இரட்டையர்களின் தாயான சரண்யா பொன்வண்ணனை முதல் முறையாக ஆவி அலைக்கழிக்கும் பொழுது, ஊஞ்சலின் முகப்பு  வீட்டுப் பக்கமாக அமைந்துள்ளது. ஏனைய காட்சிகளில் ஊஞ்சலின் முகப்பு வாசல் பக்கம் நோக்கி உள்ளது. ஃபோன் வசதி் இருந்தும் லெட்டர் மூலம் காதலை வளர்க்கின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு போட்டியாக ஆவியும் மின்சாரத்தை அடிக்கடி நிறுத்துகிறது. அந்தப் பெரிய வீட்டில் இரட்டையர்களின் தந்தை ஃபோட்டோவாக கூட காணப்படவில்லை.
ரத்த சரித்தரத்திற்கு பிறகு மீண்டும் ப்ரியாமணி. இரட்டை வேடங்களில் நிறைவாகவே நடித்துள்ளார். ஆனால் அவரது நடிப்பெல்லாம் விரயமே. நாயகனாக மலையாள நடிகர் ஸ்கந்தா. பொழுதுபோக்காக இசை கற்க வருகிறார் என்பதை தவிர்த்து, நாயகன் பற்றிய எந்த விவரணையும் இல்லை. நாயகனை முன்னிறுத்தும் படங்களில் நாயகி எப்படியோ, அப்படித் தான் நாயகன் இந்தப் படத்தில். ஆனால் அத்தகைய நாயகிக்களுக்கு ஒரு குடும்பம் உண்டென்று காட்டுவார்கள். இங்கு ஒப்புக்கு சப்பாணி நாயகன். ஆர்த்தியின் தம்பியாக டி.ஆர். பாணியில் பேசும் சிறுவனின் அதிகபிரசங்கித்தனம் சற்று அதிகமாகவே இருக்கிறது. பரிதாபத்தற்குரிய சாமியாராக சாய் சசி. பேயை அடக்க எவரும் அழைக்கமாலே சென்று அதை பிடித்து பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என சிஷ்யர்களிடம் தந்து விட்டு போகிறார். அந்த சிஷ்யர்கள் என்னானர்கள் என்று தாக்கு தகவலில்லை.
‘சத்தியத்தை எப்பொழுதும் உடைக்காதீர்’ என்பது போல் ஆங்கிலத்தில் தலைப்பின் கீழ் கேப்ஷன் போட்டுள்ளனர். சிறு வயதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது சாரு லதாவிடம், “நாம எப்பவும் ஒன்னா இருப்போம்” என கூறுகிறாள். ஆனால் சாரு இறந்து விட, லதாவின் உடம்புடன் ஒட்டியிருக்கும் சாருவின் உடம்பை அகற்றுகிறார்கள். இதிலென்ன சத்திய மீறல் என மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டாலும் ஒன்னும் பிடிபடவில்லை. அப்படியே சத்திய  மீறல் இருந்தாலும் ஆவியான சாரு தான், சத்தியத்தை மீறி நாயகனை காதலிக்க தொடங்குகிறாள். காதலிக்க தொடங்கும் வரை இரட்டையர்கள் இருவருக்கும் ஒரே மனநிலை என சித்தரிக்கிறார்கள். அதற்கு தோதாக வயலின் வாசிக்கும் காட்சியை பிரதானப்படுத்துகிறார்கள். ஆனால் லதா கராத்தேவும், சாரு நாட்டியமும் பயின்றதாக அவர்களின் தனித் தனி ரசனைகளையும் இயக்குனர் ஒரு காட்சியில் சித்தரித்துள்ளார். லதா கற்ற கராத்தே நாயகனை அடிக்க உதவுகிறது. பேசி தீவிரவாதிகளை திருத்த முடியும் என்ற விஜயகாந்தை விட ஒரு படி மேலே போய் பழி வாங்க துடிக்கும் பேயிடம் பேசி நியாயத்தை புரிய வைக்கிறார். அந்த நியாயத்தை அவருக்கே சில நொடிகள் முன் தான் சரண்யா பொன்வண்ணனிடம் இருந்து பெறுகிறார். பேயிடமான இத்தகைய நியாய கோரல் ஒரிஜினல் படத்தில் இல்லை. காஞ்சனா படத்தில் பேய் தெய்வத்திடம் நரசிம்மரிடம் நியாயம் கேட்கிறது. ஷ்ஷ்ப்பாஆஆ.. பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவுமில்லை என சசிகுமார் போராளியிலும், சுந்தரபாண்டியனிலும் சொன்னது தமிழ்ப்பட பேய்களுக்கு பொருந்தும் போல. படத்தின் ஆரம்ப காட்சிகள் ஸ்ரீநகரில் நடக்கிறது. ஸ்ரீநகரின் அழகை பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு அழகாக வெளிப்படுத்துகிறது. பின் வேதாரன்யத்தில் ஒரு மாளிகைக்குள்ளே பெரும்பாலான படம் நடக்கிறது. திகில் படம் என விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் படத்தில் அதை தேட வேண்டியுள்ளது.

Leave a Reply