Shadow

சோன்பப்டி விமர்சனம்

சோன்பப்டி விமர்சனம்

திடீரென, ஷிவாவின் கார் பின் சீட்டில் ஒரு சிறுவன் இருக்கிறான்.

“யார்ப்பா நீ? உன் பேரென்ன?”

அந்த சிறுவன் காருக்கு வெளியே பார்க்கிறான். தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்கப்படுகிறது. உடனே தன் பெயரை ‘சோன்பப்டி’ என்கிறான்.

யாரிந்த சோன்பப்டி சிறுவன்? அவன் ஏன், எப்படி ஷிவாவின் காருக்குள் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை.

நாயகனாக ஆட்டுக்குட்டி ஸ்ரீ நடித்துள்ளார். இம்முறை டூயட் பாடுமளவுக்கு முன்னேறியுள்ளார். கதைக்கு உதவும் ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து, முதல் பாதியை பெருமளவு ஆக்கிரமிப்பது ஸ்ரீயும், இவருக்கு ஜோடியாக வரும் நிரஞ்சனாவுமே! வாய்ஸ்-ஓவரில் நண்பர்கள் அறிமுகம், பெண் பார்க்கும் படலம், த்ரிஷா – ஆர்யா மீது ரசிக வெறியிலுள்ள கணவன் – மனைவி காட்சிகள், பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குதிப்பது என முதல் பாதியை ஏதோ ஏதோ காட்சிகளின் மூலம் படாதபாடுபட்டு கடக்கின்றனர். அதற்காக மனோபாலா, பட்டிமன்றம் ராஜா போன்றோரை ஒன்றிரண்டு காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீரியஸாக படம் தொடங்கியதுமே இடைவெளி வந்துவிடுகிறது.

இரண்டாம் பாதியில், திறமையால் அன்றி சூதால் வெல்ல நினைக்கும் ஒரு குழுவை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது. நாயகி நிரஞ்சனாவை விட, இரண்டாம் பாதியில் வரும் ப்ரியாவுக்கு (சிங்கம் படத்தில் வரும் அனுஷ்கா தங்கை) நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘இல்லை, நானேதான் இப்படத்தின் ஹீரோயின்!’ என நிறுவுவதற்காகவே கடைசி சீனில் அம்னிஷீயாவில் இருந்து விழித்ததுபோல், “என்னாச்சு?” என ஃப்ரேம்க்குள் சம்பந்தமே இல்லாமல் நுழைகிறார் நிரஞ்சனா. அதே போல், இரண்டாம் பாதியில் நாயகனான ஸ்ரீயை விட, ஈட்டி எறியும் நண்பருக்கு வலுவான கதாப்பாத்திரம் தரப்பட்டுள்ளது. ‘ஷாகில்’ எனும் சிறுவன்தான் ஹீரோவோ எனச் சந்தேகிக்க வைக்கப்படும்படி அவனுக்கு ஒரு பாடலும், பிளஸ் மற்ற கதாப்பாத்திரங்களின் அவனைத் துதிக்கும் முகஸ்துதியும் வைக்கப்பட்டுள்ளது.

அம்மா S.கலைவாணி தயாரிக்க, மகள் சிவாணி இயக்கியுள்ளார். படத்தின் நீளம் இரண்டு மணி நேரம்தான் என்பது மிக ஆறுதலான விஷயம். முதல் ஒரு மணி நேரத்தில் மையக் கோடைத் தொடாமல் விலகியோடும் படம், இடைவெளியில் கோடைத் தொட்டு, இரண்டாம் பாதியில் அவசர அவசரமாக அக்கோடில் பயணிக்கிறது. படத்தில் இன்னொரு ஆச்சரியமான விஷயம், நீதி நேர்மை நியாயம் தர்மமென முறுக்கேறி நாயகன் வில்லனையும் அடியாட்களையும் இம்சிப்பதில்லை; அட்வைஸ் செய்தும் கொல்வதில்லை. ஓரங்கட்டப்பட்ட வில்லன்களை மன்னிக்கும் பக்குவம் கண்டிப்பாக ஒரு பெண் இயக்குநருக்கே உரித்தானது (இதே படத்தை ஆண் இயக்கியிருந்தால், படம் வில்லன்களை கொலைவெறியோடு தண்டிப்பதில்தான் சுபமாகும்).